செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இந்தியா – இலங்கை நிலத் தொடர்பு: தமிழ்த் தேசியக் கட்சிகள் வரவேற்பு!

இந்தியா – இலங்கை நிலத் தொடர்பு: தமிழ்த் தேசியக் கட்சிகள் வரவேற்பு!

3 minutes read

இந்தியப் பிரதமரின் 13ஆவது திருத்தம், மாகாண சபைத் தேர்தல் போன்ற அறிவிப்புக்கள் தொடர்பிலும், இந்தியா – இலங்கை இடையிலான நேரடி நிலத் தொடர்பு உருவாக்கம் தொடர்பாகவும் தமிழ்த் தேசியக் கட்சிகள் வரவேற்றுள்ளன. இதேவேளை, தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்ற மோடியின் அறிவிப்பை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் வரவேற்றுள்ளது.

இந்தியப் பிரதமரின் கருத்துத் தொடர்பில் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்ததாவது:-

“இந்தியப் பிரதமரின் அறிவிப்புக்களை வரவேற்கின்றேன். வெறுமனே 13ஆவது திருத்தத்துடன் நிற்காமல் கருத்து வெளியிட்டிருக்கின்றார். இந்தியாவின் பாதுகாப்பு வடக்கு – கிழக்கு மக்களின் பாதுகாப்பில்தான் தங்கியுள்ளது என்று நான் கூறி வந்திருக்கின்றேன். அதை தற்போது அவர் உணர்ந்துள்ளார் என்று அறிகின்றேன். தென்னிந்தியாவுடன் வடக்கு – கிழக்குக்கு நெருங்கிய உறவை அவர் வலுப்படுத்த முயன்றிருக்கின்றார். அதையும் வரவேற்கின்றேன்.” – என்றார்.

ரெலோவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்ததாவது:-

“இந்தியப் பிரதமர் சொல்லில் மாத்திரம் இல்லாமல் செயலில் நடைமுறையாக்க அழுத்தம் கொடுக்கவேண்டும். இந்தியாவின் இருப்பும் எமது தமிழத்தரப்புக்களின் பாதுகாப்பும் இதற்குள்ளேயே அடங்கியிருக்கின்றது. இலங்கை – இந்திய நில ரீதியான பிணைப்பு எமக்கு பொருளாதார பலத்தையே வழங்கும். அதனை வரவேற்கின்றோம்.” – என்றார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்ததாவது:-

“13ஆவது திருத்தத்தை மாத்திரம் வலியுறுத்தி வந்த இந்தியா, தமிழர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுமாறு இப்போது சொல்லியிருக்கின்றது. 13ஆவது திருத்தத்தை கண்மூடி ஆதரிக்கும் தமிழ்த் தரப்புக்கள் இந்தியா தற்போது குறிப்பிட்டுள்ள தமிழரின் அபிலாஷைகளான சுயநிர்ணய உரிமையை உறுதி செய்யும் சமஷ்டி தீர்வை இனியாவது வலியுறுத்த வேண்டும். இந்தியாவுடனான நில ரீதியான தொடர்பை நாம் வரவேற்கின்றோம்.” – என்றார்.

புளொட் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்ததாவது:-

“இந்தியப் பிரதமருக்கு ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி அனுப்பிய கடிதத்தில் 13ஆவது திருத்தம் மற்றும் மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் குறிப்பிட்டிருந்தோம். அதை மோடி குறிப்பிட்டிருக்கின்றார். 13ஆவது திருத்தத்தைத் தாண்டிய தீர்வை இந்தியா எமக்கு தரப்போவது இல்லை. நாங்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து கிடைக்கக் கூடிய அதிகாரத்தைப் பெறவேண்டும். இந்தியாவுடனான நில ரீதியான தொடர்பை நாங்கள் வரவேற்கின்றோம்.” – என்றார்.

ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் க.சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்ததாவது:-

“இந்தியப் பிரதமரால் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளையும் இலங்கையின் மீதான இந்தியாவின் எதிர்பார்ப்பையும் நம்பிக்கையையும் வரவேற்கின்றோம். தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்கும் தரப்பாக இல்லாமல், ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட தரப்பு என்ற அடிப்படையில் இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள உத்தரவாதங்களை நடைமுறைப்படுத்துவதற்கு ஆவண செய்ய வேண்டும். கடந்த காலங்களைப்போல் அல்லாமல் 13 ஆவது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுகின்றதா என்பதைக் கண்காணிப்பதற்கு இந்தியா ஒரு பொறிமுறையை ஏற்படுத்த வேண்டும். குறிக்கப்பட்ட கால அவகாசத்துக்குள் இவை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று இலங்கை அரசுக்குச் சுட்டிக்காட்ட வேண்டும். இந்தியா – இலங்கை இடையேயான நிலத் தொடர்பு நடைமுறைக்கு வருவதற்கு நீண்ட காலம் எடுக்கும்.” – என்றார்.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More