தான் மோல்டாவில் நிதி முதலீடு செய்துள்ளதாக முன்வைக்கப்பட்டுவரும் குற்றச்சாட்டுகள் போலியானவை என்று ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
அத்துடன், தனக்கு அயர்லாந்தில் வீடு இருப்பதாகக் கூறப்படும் தகவலும் போலியானது என்றும் அநுரகுமார திஸாநாயக்க கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“ஜே.வி.பி., தேசிய மக்கள் சக்தி அரசியல் ரீதியில் இன்று எழுச்சியடைந்துள்ளது. இந்த அரசியல் சக்தியை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். எனவே, அரசியல் ரீதியில் வங்குரோத்து அடைந்துள்ளவர்களே இப்படியான குற்றச்சாட்டுகளை, போலியான தகவல்களை வெளிப்படுத்தி வருகின்றனர். இவை அனைத்தும் போலியானவை.
மோல்டாவில் நிதி உள்ளது எனக் கூறிய நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சிக்கு எமது கட்சி சட்டத்தரணி ஊடாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இவ்விவகாரத்தை நாம் சட்ட ரீதியாக அணுகுவோம். அதேபோல் அரசியல் ரீதியில் பதிலடி கொடுக்க வேண்டிய இடங்களும் உள்ளது. அதற்கு அந்தவகையில் பதில் கொடுப்போம்.
நான் மக்களின் ஒரு சதத்தைக்கூட எடுத்து எனது சொந்தச் செலவுகளுக்குச் செலவளித்தது கிடையாது. எம்.பிக்களின் சம்பளம்கூட கட்சி நிதியத்துக்குத்தான் செல்கின்றது. எமது கட்சியிடம் கறுப்புப் பணம் இல்லை. நேர்மையாக நடந்துகொள்வதால்தான் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கணக்கறிக்கைகளைக்கூட நேர்மையாக வழங்குகின்றோம்.” – என்றார்.