( 2012களில் உலகரசியலில் அதிர்வை ஏற்படுத்திய ஜூலியன் அசாஞ்சே நாடு கடத்தப்படுகிறாரா எனும் கேள்வி மீண்டும் எழுந்துள்ளது. மேற்குலகின் அட்டூழியங்களையும், அத்துமீறல்களை வெளிப்படுத்தியவர் ஜூலியன் அசாஞ்சே. அவரின் மீதான கைதானது, அமெரிக்க அரசின் செயற்பாடு ஊடக கருத்துச் சுதந்திர மீறலாகவும் கருதலாம். ஆயினும் மேற்குலகின் அரச ரகசியங்களை காட்டிக் கொடுத்தவர் என்ற குற்றச்சாட்டும் உள்ளது. சுயாதீன கருத்துச் சுதந்திரம் மறுக்கப்பட்டு, ஜூலியன் அசாஞ்சே நாடு கடத்தப்பட்டால், விசிலூதிகளுக்கு என்ன பாதுகாப்பு என்பதை அலசும் ஆக்கமாகும்)
ஈராக் போரில் பாக்தாத்தில் அமெரிக்கா நடத்திய வான் தாக்குதலில், ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த நிருபர் கொல்லப்பட்டது உள்பட பல தகவல்கள் ஜூலியன் அசாஞ்சே (Julian Assange) வெளியிட்ட ஆவணங்களில் இருந்தன. இவற்றில் பல விஷயங்கள் ஆட்சியாளர்களின் அத்துமீறல்களையே வெளிக்கொணர்ந்தன.
இரகசியம் என்று அரசுகளால் அறிவிக்கப்படும் கோப்புகளிலிருந்து தகவல்களைப் பெற்று வெளியிடும் பத்திரிகையாளர்களின் முயற்சிகளுக்குப் பெரிய தடையாக அமைவது போலியான குற்றச் சாட்டுக்களும் அடக்குமுறைகளுமே.
ஜனநாயக விழுமியங்களுக்கும், அரசமைப்புச் சட்டங்களுக்கும்கூட அப்பாற்பட்டு அரசு எனும் அமைப்பை மோசமாகக் கையாளும் ஆட்சியாளர்களை அம்பலப்படுத்தும் ஊடகர்களுக்கு என்ன வகையான சட்டபூர்வப் பாதுகாப்பு உலகில் உள்ளது என்பது கேள்விக்குறியே ?
பாக்தாத்தில் அமெரிக்கா தாக்குதல்:
அமெரிக்க ராணுவம் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் நடத்திய தாக்குதல் தொடர்பான பல ஆவணங்களை விக்கிலீக்ஸ் இணையதளத்தில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியிட்டார் அதன் நிறுவனரான ஜூலியன் அசாஞ்சே. இதனால் உடனடியாக விக்கிலீக்ஸ் மீது குற்ற விசாரணையை அமெரிக்கா தொடங்கியது.
உடனடியாக விக்கிலீக்ஸ் மீது குற்ற விசாரணையை வேறு முனையில் திசை திருப்பி அமெரிக்கா தொடங்கியது. இங்கிலாந்தில் இருந்த ஜூலியன் அசாஞ்சே மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தி, அவருக்கு கைது வாரன்ட்டை சுவீடன் அரசு மூலம் பிறப்பித்தது. இது அமெரிக்காவுக்கு நாடு கடத்தும் முயற்சி என ஜூலியன் அசாஞ்சே குற்றம்சாட்டினர்.
அமெரிக்க வெளியுறவுத் துறை அலுவலகம் மற்றவர்களுடன் வைத்திருந்த தொடர்பு, மின்னஞ்சல் தொடர்பு அனைத்தையும் அசாஞ்சே பொதுவெளியில் வெளியிட்டார். இதனால் ஜூலியன் அசாஞ்சே அமெரிக்காவுக்கு விசாரணைக்காக நாடு கடத்தப்படலாம் என பிரிட்டன் அரசு முன்பு தெரிவித்திருந்தது.
ஆயினும் இந்த நீண்ட கால வழக்கில் தோல்வியைச் சந்தித்த ஜூலியன் அசாஞ்சே ஜாமீன் விதிமுறைகளை மீறி, லண்டனில் உள்ள ஈக்குவடார் தூதரகத்தில் கடந்த 2012-ம் ஆண்டு தஞ்சம் அடைந்தார். 2019-ம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட்ட அடைக்கலத்தை ஈக்குவடார் அரசு வாபஸ் பெற்றது. அதன்பின் ஜூலியன் அசாஞ்சேவை இங்கிலாந்து போலீசார் கைது செய்து லண்டன் சிறையில் அடைத்தனர்.
மேற்குலக அரசுகள் மீது உளவு பார்த்ததாக ஜூலியன் அசாஞ்சே மீது 17 குற்றச்சாட்டுகள் உள்ளதால் அவரை அமெரிக்காவுக்கு நாடு கடத்தும்படி இங்கிலாந்து அதிகாரிகளிடம் அமெரிக்கா கோரிக்கை விடுத்திருந்தது. அமெரிக்க சிறையின் கடுமையான சூழலைச் சந்திப்பது, தன்னை தற்கொலைக்கு தூண்டும் என ஜூலியன் அசாஞ்சே தரப்பில் கூறப்பட்டதால், முதலில் அமெரிக்காவின் கோரிக்கையை லண்டன் நீதிமன்றம் நிராகரித்ததும் அறிந்ததே.
இந்த நிலையில், கடந்தசில மாதங்கள் முன்பாக ஜூலியன் அசாஞ்சே அமெரிக்காவுக்கு விசாரணைக்காக நாடு கடத்தப்பட இருக்கிறார் என்று பிரிட்டன் உள்துறைச் செயலாளர் தெரிவித்திருக்கிறார்.
அவுஸ்திரேலியாவில் பிறந்தவர் :
அவுஸ்திரேலியாவில் பிறந்தவரான அசாஞ்சே லண்டனில் உள்ள ஈக்வடார் நாட்டு தூதரகத்தில் 2012-ல் தஞ்சம் புகுந்த பின், இராணுவ அரச ரகசியங்களை வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டின்பேரில் முதலில் அவரை சுவீடனிலும் பிறகு அமெரிக்காவிலும் விசாரிக்க முற்பட்டனர். பின்னர், சுவீடன் அரசு தனது வழக்கைக் கைவிட்டுவிட்டது.
ஜூலியன் அசாஞ்சே கொஞ்சம் கொஞ்சமாக செத்துக் கொண்டிருக்கிறார் என்று அவருடைய வழக்குரைஞர் தெரிவித்திருப்பதும், அவருடைய உடல்நலம் குன்றிக் கொண்டேவருவதும் ஜனநாயகத்துக்காக இப்படிச் செயலாற்றும் விசிலூதிகளின் (Whistle Blowers) பாதுகாப்பு தொடர்பாக தீவிரமான கேள்விகளை எழுப்பியுள்ளது. கூடவே நவீன சமூகத்தின் நாகரிக எல்லைகளின் போதாமையையும் இது சுட்டிக்காட்டுகிறது.
இங்கிலாந்து உயர் பாதுகாப்பு சிறையில்:
இங்கிலாந்தில் உள்ள உயர் பாதுகாப்புச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அசாஞ்சே தன்னுடைய ‘விக்கிலீக்ஸ்’ இணையதளத்தின் வழி பல நாடுகளின் மோசமான அரசியலாட்டங்களை அம்பலப்படுத்தி உள்ளார். அசாஞ்சே அம்பலப்படுத்திய விவகாரங்கள் 2012 காலகட்டத்தில் உலகெங்கும் பெரும் நாயகப் (Hero) பிம்பத்தை அவருக்கு உருவாக்கியதும் உண்மையே.
அமெரிக்காவின் முகத்திரையை கிழித்துக் காட்டியதால், உடனடியாக சர்வதேச அழுத்ங்களின் கீழ் கொண்டுவரப்பட்ட அவர், இப்போது பிரிட்டன் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். தன்னை அமெரிக்கா வசம் ஒப்படைத்துவிடக் கூடாது, அது தன் உயிருக்கு ஆபத்து என்று கோரி நீதிப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார் அசாஞ்சே. லண்டன் உயர் நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்துவந்தது. அமெரிக்க அரசிடம் அசாஞ்சேவை ஒப்படைத்துவிடலாம் என்று ஊகிக்கப்பட்டது.
இந்தத் தீர்ப்புக்கு எதிராக பிரிட்டன் உச்ச நீதிமன்றத்தில் அசாஞ்சேவின் வழக்கறிஞர்கள் முறையிட்டனர். இதனிடையே கடுமையான உடல் – மன நலப் பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார் அசாஞ்சே. மேல்முறையீட்டில் ஒருவேளை தோற்று, அமெரிக்காவுக்கு அசாஞ்சே அனுப்பப்பட்டால், அமெரிக்க சட்ட நடைமுறைகளின்படி 175 ஆண்டுகள் வரை அவர் சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடலாம்.
ஐம்பது வயதாகும் அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தால் அங்குள்ள சிறைக்கூட நிலைமை காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டுவிடுவார். மோசமான நிலையில் அவர் இருக்கிறார் என்று அவருடைய சார்பில் வாதிட்டதை முன்னதாக பிரிட்டனின் கீழமை நீதிமன்றம் ஏற்றதும் குறிப்பிடத்தக்கதாகும்.
உலக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியவர் :
உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு வந்தபோது அமெரிக்க அரசு சார்பில் அளிக்கப்பட்ட உறுதிமொழியை அது ஏற்றது. அசாஞ்சேவை தனிமைச் சிறையிலோ, கொலராடோவில் உள்ள சூப்பர்மேக்ஸ் சிறையிலோ அடைக்க மாட்டோம் என்று அமெரிக்க அரசு உறுதியளித்தது.
அத்துடன் வழக்கு விசாரணைக்குப் பிறகு தண்டனையை அவர் அவுஸ்திரேலிய சிறைகளில்கூட அனுபவிக்கட்டும் என்றும் அமெரிக்க அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதன் விளைவாக அமெரிக்கத் தரப்பை ஏற்றுக்கொண்டது நீதிமன்றம். அமெரிக்க அரசு இன்னமும் துரத்திவருகிறது.
அரச ரகசியம்’ என்ற சொல்லாடலின் கீழ் எதையெல்லாம் மக்கள் பார்வையிலிருந்து மறைத்துவைக்க முடியும்? காலனிய கால அணுகுமுறையின் நீட்சியாகவும் கடந்துவந்த நூற்றாண்டுகளின் பார்வையையும் இன்னும் எவ்வளவு காலத்துக்குத் தூக்கிச் சுமக்கப்போகிறோம்?
நீண்ட சட்டப் போராட்டம்:
இந்த நீண்ட சட்டப் போராட்டம் நீடித்தால் அது அசாஞ்சேவுக்கும் ஆயுளைப் பாதிக்கும் எனும் அச்சம் இப்போது மேலும் அதிகரிக்கிறது. இது சீக்கிரம் தீர்க்கப்பட வேண்டும். முடிவடையாத நீதிமன்ற வழக்குகள் மனதளவில் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்துகின்றன என்று அசாஞ்சேவின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
உண்மையை வெளிக்கொணர்ந்தற்காக எதிர்கொள்ளும் சித்திரவதையானது எவரையும் மனச்சிதைவுக்கு ஆளாக்கிவிடும். அசாஞ்சேவுக்கு ஏற்படும் எந்த ஆபத்தும் ஊடக ஜனநாயகத்துக்கான இழிவாகவே அமையும். பத்திரிகையாளராக அவரது பணியைதான் செய்தார். தனது பணியை செய்தற்காக அவர் தண்டனை அனுபவித்து வருகிறார் என்பது கண்கூடு.
ஊடகர்கள் நவீன சமூக முன்னேற்ற செயல்பாட்டின் முக்கியமான அங்கங்கள் ஆவர். அவர்களுடைய உயிர்ப்பான செயல்பாடு ஜனநாயகத்துக்கு முக்கியம். எவ்வாறாயினும் அசாஞ்சே சட்ட ரீதியாக விடுவிக்கப்பட வேண்டும் என்பதே பத்திரிகையாளர்களின் அவாவாகும்.
| ஐங்கரன் விக்கினேஸ்வரா