செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை நீதித்துறைக்கு அதியுச்ச அச்சுறுத்தல்! – சுமந்திரன் எச்சரிக்கை

நீதித்துறைக்கு அதியுச்ச அச்சுறுத்தல்! – சுமந்திரன் எச்சரிக்கை

2 minutes read

“இலங்கையின் சரித்திரத்தில் நீதித்துறைக்கு அதியுச்ச அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. நீதிபதி ஒருவர் தன்னுடைய உயிர் பாதுகாப்புக்காக அதுவும் தான் வழங்கிய ஒரு தீர்ப்பின் அடிப்படையிலே வந்திருக்கின்ற அச்சுறுத்தலின் காரணமாகப் பதவியைத் துறந்து நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். இது குறித்து கவனம் செலுத்த வேண்டிய நிலையில் நாங்கள் இருக்கின்றோம்.”

– இவ்வாறு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவின் மொழிகள் மற்றும் சமூக அபிவிருத்தி பயிற்சி மத்திய நிலையத்தில் சிங்கள மொழி கற்கை நெறிகளைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கு யாழ். மானிப்பாய் – சுதுமலைப் பகுதியிலுள்ள தனியார் விடுதியொன்றில் இன்று காலை சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன. இந்த நிகழ்வில் சுமந்திரன் எம்.பி. கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இன்றைக்கு நாடாளுமன்றத்தினுடைய நிறுவனமயப்படுத்தப்பட்ட பல விடயங்களிலே நாடாளுமன்றம் மட்டுமல்ல நீதித்துறை விசேடமாக ஒரு சவாலுக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றது. அது குறித்து கவனம் செலுத்த வேண்டிய நிலையில் நாங்கள் இருக்கின்றோம்.

முதன் முறையாக எங்களுடைய நாட்டின் சரித்திரத்தில் நீதிபதி ஒருவர் தன்னுடைய உயிர் பாதுகாப்புக்காக அதுவும் தான் வழங்கிய ஒரு தீர்ப்பின் அடிப்படையிலே வந்திருக்கின்ற அச்சுறுத்தலின் காரணமாகப் பதவியைத் துறந்து நாட்டை விட்டு வெளியேறியுள்ளார் என்று இன்றைய பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. இது நீதித்துறைக்கு ஏற்படுத்தப்பட்டிருக்கின்ற அதியுச்சமான ஓர் அச்சுறுத்தல்.

நாட்டிலே இருக்கின்ற சுயாதீனமான நிறுவனங்களைப் பாதுகாக்க வேண்டிய பாரிய கடப்பாடு எங்கள் அனைவருக்கும் இருக்கின்றது. அத்தகைய சுயாதீனமான நிறுவனங்களிலே பிரதானமானது நீதித்துறையாக இருக்கின்றது. நீதித்துறையைப் பாதுகாக்கின்றபோது நீதிபதிகளுக்கு அச்சுறுத்தல் செய்வதை நாங்கள் கண்டிக்க வேண்டும்; தடுக்க வேண்டும். அதேவேளை, நீதித்துறைக்கு உள்ளேயே தவறுகள் இருந்தால் அதனைத் திருத்துகின்ற வகையிலே நாங்கள் செயற்பட வேண்டும்.

நீதித்துறைக்கு அச்சுறுத்தல் ஏற்படுகின்றபோது மூன்று விதமாக அவர்கள் செயற்படலாம். ஒன்று அந்த அச்சுறுத்தலைக் கணக்கில் எடுக்காமல் தாங்கள் செய்ய வேண்டியதைச் செய்வது, இரண்டாவது அப்படியான அச்சுறுத்தல் வந்தால் அவர்கள் இராஜிநாமா செய்து அதிலிருந்து விலகுவது, மூன்றாவது நீதிபதிகள் அந்த அச்சுறுத்தலுக்குள்ளாகி அதற்கு அடங்கி தங்களுடைய நடத்தையை அல்லது தீர்ப்பை மாற்றி மற்றவர்களுடைய கைப்பொம்மையாக இயங்குவது. இந்த மூன்றாவது நிலைப்பாடு அது தடுக்கப்பட வேண்டும்.

நீதித்துறையைப் பாதுகாப்பது என்றால் நீதிபதிகள் என்ன செய்தாலும் அவர்களைப் பாதுகாப்பதல்ல; நீதிபதிகள் சுயாதீனமாகச் செயற்படுவதை நாங்கள் பாதுகாப்பதே ஆகும்.

இன்றைக்குக் காலையில் வந்திருக்கின்ற இந்தச் செய்தியின் காரணமாக இந்த முக்கியமான எச்சரிப்பை இந்த வேளையில் கொடுக்க வேண்டும் என நினைக்கின்றேன்.

அரசியலை அரசியல்வாதிகளிடம் விட்டுவிடுங்கள், நாங்கள் மற்ற வேலைகளைப் பார்ப்போம் என்று சொல்லப்பட்டிருக்கின்றத. அரசியல் என்பது அரசியல்வாதிகளின் கைகளில் விட்டு விடுவதற்கான இலகுவான விடயம் அல்ல. அது அதி முக்கியமான ஒரு விடயம். அரசியல் என்பது மக்களுடைய ஆணையை, மக்களுடைய விருப்பத்தைத் தங்களுடைய பிரதிநிதிகள் மூலமாகச் செயற்படுத்துகின்ற ஒன்று. அது மக்களுக்காக இயங்குகின்ற ஒன்றாக இருக்க வேண்டும். மக்கள் அதில் தொடர்ந்து ஈடுபடுகின்றவர்களாக இருந்தே ஆக வேண்டும்.

நீங்கள் சிங்களம் கற்பதிலும், சிங்கள மாணவர்கள் தமிழ் கற்பதிலும் எவ்வளவு தூரம் முன்னேற்றம் அடைந்து இருக்கின்றதோ அதிலும் அரசியல் இருக்கின்றது. அரசியலிலே இதுவொரு முற்போக்கான தாக்கத்தை ஏற்படுத்துகின்ற விடயமாக இருக்கின்றது. அந்தவகையில் நீங்கள் சிங்களம் கற்பதும் அரசியல்தான். தொடர்ந்து அரசியலில் ஈடுபடுங்கள். உங்களுடைய பிரதிநிதிகளை நீங்கள் என்ன செய்ய விரும்புகின்றீர்களோ அதைச் செய்ய வையுங்கள்.” – என்றார்.

இந்த நிகழ்வில் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More