இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் உக்கிரமடைந்து வரும் நிலையில், லெபனானின் ஹிஸ்புல்லா குழுவும் இஸ்ரேலும் இருநாட்டுக்கும் இடையிலான எல்லைப் பகுதியில் மோதலை ஆரம்பித்துள்ளன.
ஹிஸ்புல்லா அமைப்புக்கு ஈரானின் ஆதரவு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே போர் நடந்தால், சரியான நேரத்தில் ஹமாஸிற்கு உதவத் தயார் என்றும் ஹிஸ்புல்லா அமைப்பு கூறியுள்ளது.
ஹிஸ்புல்லா தலையிடுவது ஏன்?
ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்புகளுக்கு இடையில் நீண்டநாள் உறவு காணப்படுகின்றது. கடந்த 7ஆம் திகதி ஹமாஸ் இஸ்ரேலில் தாக்குதல் நடத்தியபோது அவர்களுடன் நேரடித் தொடர்பில் இருந்ததாக ஹிஸ்புல்லா கூறியிருந்தது.
அன்றிலிருந்து ஹிஸ்புல்லாவும் பல முறை இஸ்ரேலுடன் எல்லை கடந்த சண்டையில் ஈடுபட்டு வருகின்றன.
ஹமாஸ் கிளர்ச்சிக் குழு லெபனானிலும் செயல்படும் நிலையில், அதுவும் முதல்முறையாக லெபனானிலிருந்து இஸ்ரேலைத் தாக்கியுள்ளது.
ஹிஸ்புல்லா வலுமிக்கதா?
இதேவேளை, இஸ்ரேல் முழுவதையும் தாக்கக்கூடிய அளவுக்குத் தன்னிடம் ஆயுதங்கள் உள்ளதாக ஹிஸ்புல்லா அமைப்பு கூறியுள்ளது.
கடந்த 2006ஆம் ஆண்டு ஹிஸ்புல்லாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே 5 வாரங்களாக போர் நடந்தது.
இதன்போது, ஹிஸ்புல்லா இஸ்ரேலுக்குச் சென்று இரு ராணுவ வீரர்களைக் கடத்தியதோடு சிலரைக் கொலை செய்த நிலையில், இருதரப்புக்கும் இடையே போர் மூண்டது.
இந்த நிலையில், 2021ஆம் ஆண்டு, தமது குழுவில் 100,000 வீரர்கள் இருப்பதாக அதன் தலைவர் சய்யிட் ஹசன் நஸ்ரல்லா தெரிவித்திருந்தார்..
ஹிஸ்புல்லா குழுவிற்கு ஈரான் பணமும் ஆயுதமும் அளிப்பதாகக் சொல்லப்படுகின்றது.
இந்த நிலையில் போர் நிலைமை அங்கு தீவிரமடையும் என தெரிவிக்கப்படுகின்றது.