செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை விழுந்தாலும் மீசையில் மண்படாதது போல் நடக்கின்றது இலங்கை அரசு! – ரிஷாத் சுட்டிக்காட்டு

விழுந்தாலும் மீசையில் மண்படாதது போல் நடக்கின்றது இலங்கை அரசு! – ரிஷாத் சுட்டிக்காட்டு

1 minutes read

காட்டுச் சட்டங்களை கையாளும் இஸ்ரேல், பயங்கரவாத அரசு போல செயற்படுகின்றது என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

இவ்விடயத்தில் இலங்கை அரசு ‘விழுந்தாலும் மீசையில் மண்படாதது’ போன்று நடந்துகொள்கின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

“பலஸ்தீனர்களின் இருப்பை மறுத்துவரும் இஸ்ரேல் அரசு, காஸா மக்களைக் காட்டுமிராண்டித்தனமாகக் கொன்று குவிக்கின்றது. பல நாட்களாக இடம்பெறும் மோதலில் காஸாவில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில், 1,200 பேர் குழந்தைகளாவர். பெண்கள், கர்ப்பிணித்தாய்மார்கள், முதியோர்களென இஸ்ரேலின் கொலைத்தாண்டவம் தலைவிரித்தாடுகின்றது.

12 வருடங்களாக குழந்தையின்றி நான்கு பிள்ளைகளைப் பெற்றவரும் பலியெடுக்கப்பட்டுள்ளார். இடிபாடுகளுக்குள் சிக்கித் தவிப்போர் இறுதி மூச்சுக்களை எண்ணிக் கொண்டிருக்கின்றனர். அப்பாவிகள் சிகிச்சை பெற்றுவந்த வைத்தியசாலையிலும் யூத இராணுவம் குண்டுகளை வீசியுள்ளது. ஐநூறுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதற்காக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகர் ருவிட்டர் செய்தியில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். பின்னர் அந்தப் பதிவை நீக்கியுள்ளதாக ஐ.நாவுக்கான பலஸ்தீன தூதுவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இஸ்ரேலிலிருந்த வேளையிலேயே, இவ்வைத்தியசாலை தாக்கப்பட்டது. நீரின்றி, மின்சாரமின்றி, உணவின்றி, தாகம், பசி, இருட்டுக்குள் உயிர்தப்பியோடும் காஸாவின் அவலங்கள், ஜோ பைடனின் கல்நெஞ்சை கசிய வைக்கவே இல்லை. ஸியோனிஸவாதிகளின் இக்கொடூரங்களில் ஐரோப்பாவும் குளிர்காய்கிறது.

இவ்விடயத்தில் இலங்கை அரசு ‘விழுந்தாலும் மீசையில் மண்படாதது’ போன்று நடந்துகொள்கின்றது. இஸ்ரேலில், வெறும் 1200 பேரளவிலான இலங்கையர்கள்தான் பணியாற்றுகின்றனர். இதற்காகவா இந்த மெத்தனப்போக்கு? ஆனால், அரபு நாடுகளில் இலட்சக்கணக்கில் இலங்கையர்கள் பணியாற்றுகின்றனர். நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டபோது அரபு நாடுகளிலிருந்தே அதிகளவு உதவிகள் வந்தன. எரிபொருளுக்காக 750 மில்லியன் டொலரை ஈரானே வழங்கியது. இதையெல்லாம் எண்ணாமல், யூத இராணுவத்தின் இனச்சுத்திகரிப்புடன் இணங்கிச்செல்லும் மேற்குலகின் நிழலிலே அரசு செல்கின்றது. மனிதநேயம் மரித்துப்போன ஐரோப்பா மற்றும் ஏகாதிபத்தியத்தில் திளைத்துள்ள அமெரிக்கா என்பன முஸ்லிம்களுக்கு நியாயம் தரப்போவதுமில்லை. எனவே, முஸ்லிம்கள் ஒன்றுபட்டு நியாயங்களைத் தட்டிக்கேட்க வேண்டும்.” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More