செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை புட்டினுக்கு பின்னர் ரஷ்யாவின் தலைமை? | ஐங்கரன் விக்கினேஸ்வரா

புட்டினுக்கு பின்னர் ரஷ்யாவின் தலைமை? | ஐங்கரன் விக்கினேஸ்வரா

7 minutes read

2036வரை அதிபராக புட்டின் தொடர சாத்தியமா ?

ரஷ்யாவுக்குள் நிலவும் தற்போதைய அரசியல் பிரச்சினைகளை மையப்படுத்தி, வலிமைமிக்க விளாடிமிர் புட்டினின் ஆட்சி ஆதிக்கம் விரைவில் முடிவுக்கு கொண்டு வர மேற்குலகும்- அமெரிக்காவும் திடமாக முயல்கின்றனர். அதிபர் புட்டினின் நீண்ட ஆட்சி நிரந்தரமாக இருக்க முடியாது என்பது உண்மையே.

அண்மையில் ரஷ்யாவின் வலிமைமிக்க விளாடிமிர் புட்டின் (Vladimir Putin) அதிகாரத்தை உலுக்கிய வாக்னர் படைகளின் தலைவர் எவ்கெனி ப்ரிகோஜின் கிளர்ச்சியினால் புட்டின் சந்திக்கவிருந்த சவால்கள் சில நாட்களில் பிசுபிசுத்துப் போனது.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் புட்டின் உக்ரேன் மீது முழு அளவிலான போரைத் தொடங்கிய நிலையில், இப்போது அவருக்கான முடிவு காலம் தொடங்கிவிட்டது என அப்போதே மேற்குலக ஊடகங்கள் ஊகம் தெரிவித்தன. அத்துடன் உக்ரேன் மீதான ரஷ்யாவின் போரால் அவரது நாட்கள் எண்ணப்படுவதாக உக்ரேன் அதிபர் ஜெலன்ஸ்கியும் நம்புகின்றார் என மேற்குலக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

புட்டின் பதவி 2024இல் நிறைவு ?
71 வயதாகும் ரஷ்யாவின் தலைவர் விளாடிமிர் புட்டின் முதன்முதலில் பொறிஸ் யெல்ட்சினுக்கு பின்னர் 2000ஆம் ஆண்டு அதிபர் பதவியை ஏற்றார். அவரது பதலிகாலம் வரும் 2024இல் நிறைவடைகிறது. ரஷ்யா நாட்டு சட்டப்படி ஒருவர் தொடர்ந்து இரண்டு முறைக்கு மேல் அதிபர் பதவியில் இருக்க முடியாது.
ரஷ்யாவில் இரண்டு முறைக்கு மேல் தொடர்ச்சியாக அதிபராக இருக்க முடியாது என்பதால் 2008இல் தனது நம்பிக்கைக்குரிய டிமிட்ரி மெட்வெடேவ் என்பவரை அதிபராக்கினார். அதன் பின்னர் 2012ஆம் ஆண்டு மீண்டும் புட்டின் ரஷ்ய அதிபராகப் பதவியேற்றார்.
இதன் பின் அதிபரின் பதவிக்காலம் நான்கு ஆண்டுகளில் இருந்து ஆறு ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டது. ஆறு ஆண்டுகள் அதிபர் பதவியில் இருந்த புட்டின், மீண்டும் 2018இல் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆயினும் அந்த தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாகவும் எதிர்க்கட்சியினரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் புகார் எழுந்தன. இருப்பினும், அந்தத் தேர்தலில் புட்டின் வென்றதாக அறிவிக்கப்பட்டது. இதன் பின் மீண்டும் அரசியல் சட்டத்தை மாற்றி, ஒருவர் நான்கு முறை வரை தொடர்ந்து அதிபர் பதவியில் இருக்கும் சட்டத்தை புதிதாக புட்டின் முன்மொழிந்துள்ளார்.
2036 வரை அதிபர் பதவியில் ?
அதாவது, எதிர் வரும் 2036ஆம் ஆண்டு வரை ரஷ்யா அதிபர் பதவியில் தொடரும் வகையில் புதிய உத்தரவை விளாடிமிர் புட்டின் பிறப்பித்துள்ளதாக சில ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதன் மூலம் அடுத்த இரண்டு தேர்தல்களில் அவரால் போட்டியிட முடியும்.
ரஷ்ய மக்களிடையே நடத்தப்பட்ட வாக்கெடுப்பிலும் பெரும்பாலான மக்கள் இதற்கு ஆதரவாகவே வாக்களித்தனர். இதையடுத்து இந்தச் சட்டத்திற்கு புட்டின் ஒப்புதல் வழங்கினார்.
புட்டினுக்கு பின்னர் ரஷ்யாவின் தலைமை?
புதிய சட்டத்தின் மூலம் அடுத்த இரண்டு தேர்தல்களில் புதினால் தேர்தலில் போட்டியிட முடியும். அதாவது 2036ஆம் ஆண்டு வரை அதிபர் அவரால் இருக்க முடியும். உயிருடன் இருக்கும் வரை அதிபர் பதவியில் தொடரவே புட்டின் இச்சட்டத்தைக் கொண்டு வந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.
இந்நிலையில் 2036ஆம் ஆண்டு வரை தொடர்ந்து அதிபர் பதவியில் தொடர தேவையான சட்டத்திற்கு புட்டின் தற்போது ஒப்புதல் அளித்துள்ளார்.
தற்போது ரஷ்யாவின் வலிமைமிக்க தலைவரான விளாடிமிர் புட்டின் ஆட்சி அதிகாரத்தின் பின்னர், ரஷ்ய கூட்டமைப்பின் அடுத்த தலைவராக, புட்டினுக்கு பதிலாக யார் முன்னணியில் உள்ள தலைவர்களின் விபரங்களை உலகம் உற்று நோக்கிப் பார்க்கின்றது.
முன்னாள் அதிபர் டிமிட்ரி மெடிதேவ்
லெனின்கிராட்டை பூர்வீக கொண்ட முன்னாள் சட்டப் பேராசிரியரும், புட்டின் நீண்டகால கூட்டாளியாக டிமிட்ரி மெடிதேவ் (Dmitry Medyedev) 2008 முதல் 2012 வரை ரஷ்யாவின் அதிபராக நான்கு ஆண்டுகள் பணியாற்றியவர். பின்னர் மெடிதேவ் 2012 முதல் 2020 வரை பிரதம மந்திரி பதவி வகித்தார்.
இப்போது ரஷ்யாவின் பாதுகாப்பு கவுன்சிலின் துணைத் தலைவரான மெடிதேவ், உக்ரைனிய போரைப் பற்றி ஒரு போர்க்குணமிக்க தொனியில் தாக்கியுள்ளார். இந்த உக்ரைனிய மோதல் மிக நீண்ட காலத்திற்கு நீடிக்கும். பல தசாப்தங்களாக, அநேகமாக நீடிக்கும் எனக் கூறியுள்ளார்.
நீண்ட காலமாக புட்டினுக்கு அடிபணிந்து வந்த ஒருவரான மெடிதேவ், அடுத்த ஆட்சியைப் பிடிக்க முடியுமா என்பது பற்றிய பல கேள்விகளும் ஐயங்களும் உள்ளன.
தாராளவாத சீர்திருத்தவாதி செர்ஜி கிரியென்கோ:
2022 இல் உக்ரைனிலிருந்து ரஷ்யா கைப்பற்றிய பகுதிகளில் பொது வாக்கெடுப்பை நிர்வகிக்கும் பணி 60 வயதான செர்ஜி கிரியென்கோ (Sergei Kiriyenko)வழங்கப்பட்டது.
1990களில், செர்ஜி கிரியென்கோ என்று அறியப்பட்ட ஒரு தாராளவாத சீர்திருத்தவாதி, அப்போதைய ஜனாதிபதி போரிஸ் யெல்ட்சின் அவரை 1998 இல் நாட்டின் இளைய பிரதமராக ஆக்கினார்.
கிரியென்கோவின் பதவிக்காலம் சோவியத்துக்கு பிந்தைய நாட்டின் மிக மோசமான நிதி நெருக்கடியுடன் அவர் நான்கு மாதங்களுக்குப் பிறகு பதவி விலக வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது.  செர்ஜி கிரியென்கோ பதவியின் போது, KGB இன் வாரிசான நிறுவனமான FSB இன் தலைவராக புட்டினை நியமிப்பதற்கான முடிவையும் அவரே எடுத்தார்.
சிறப்பு படைத் தளபதி அலெக்ஸி டியூமின்:
ரஷ்ய அரசிற்குள் பல்வேறு பாத்திரங்களை வகித்த 50 வயதான அலெக்ஸி டியூமின் (Alexei Dyumin) இராணுவ உளவுத்துறை பணியகமான GRU இன் துணை இயக்குநரும் இப்போது துலா பிராந்திய ஆளுநரும் ஆவார்.
2014 இல் கிவ்வில் ஜனநாயக சார்பு எழுச்சிக்குப் பிறகு ரஷ்ய சார்பு உக்ரேனிய ஜனாதிபதி விக்டர் யானுகோவிச்சை நாட்டை விட்டு வெளியேற்றுவதில் டியூமின் முக்கிய பங்கு வகித்தார். பின்னர் உக்ரைனில் இருந்து கிரிமியாவைக் கைப்பற்றுவதற்கான வெற்றிகரமான நடவடிக்கையில் சிறப்புப் படைத் தளபதியாக பணியாற்றினார்.
பாதுகாப்பு மந்திரி செர்ஜி ஷோய்குவின் துணையாளராக இருந்த டியூமின், அந்த இடத்தைப் பிடிக்க முயன்றார் என்று சமீபத்திய நாட்களில் வதந்திகளுக்கும் உட்பட்டார்.
உக்ரைன் போரின் மூலோபாயவாதி நிகோலாய் பெட்ருஷேவ் :
ரஷ்யாவின் பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் நிகோலாய் பெட்ருஷேவ் (Nikolai Petrushev) ரஷ்ய கூட்டமைப்பை பலவீனப்படுத்த அல்லது உடைக்க மேற்கத்திய சதி உள்ளது என்ற கருத்தை என்றும் குற்றச்சாட்டாக முன்வைப்பவர்.
புட்டினுடன் கேஜிபியில் ஒன்றாகப் பணியாற்றியதிலிருந்து அவரை அறிந்திருக்கிறார்.
மேலும் 2014, 2022 உக்ரைன் படையெடுப்புகளில் முக்கிய மூலோபாயவாதியாக இருந்தார்.
அவரது கருத்துக்கள் புட்டின் எடுக்கும் முடிவுகளின் அடித்தளமாக அமைகின்றன. புட்டினின் நம்பிக்கைக்குரிய சில நபர்களில் இவரும் ஒருவர்.
மார்ச் 2023 இல் (Rossiskaya Gazetta) ரஷ்ய பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், பெட்ருஷேவ், வாஷிங்டனும் லண்டனும் மீண்டும் நாசிசம் மற்றும் பாசிசத்துடன் ஒத்துழைக்கின்றன. உக்ரைனைப் பயன்படுத்தி ஐரோப்பாவையோ அல்லது முழு உலகத்தையோ தீப்பிடித்து எரிக்க முயல்கின்றன. எதிலிருந்தும் தப்பிக்க முடியும் என்ற நம்பிக்கையில் அவர்களுக்கு எந்தக் கவலையும் அமைதியின் மீது இல்லை.
பெட்ருஷேவ் ரஷ்யாவின் புவியியல் இராஜதந்திர நிலைப்பாட்டை உயர்த்துவதற்காக பரவலாகப் உலகப் பயணம் செய்பவர். மேலும் சீனாவுடனான கூட்டணியை நிர்வகிப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளார். அதேவேளை பெட்ருஷேவின் 45 வயதான மகன் டிமிட்ரி, தற்போது விவசாய அமைச்சராக உள்ளார், மேலும் அவரே புட்டினின் எதிர்கால வாரிசு என்ற வதந்தியும் பரவலாக பரவியுள்ளது.
2020 இல் பிரதமரான மிகைல் மிஷுஸ்டின் :
 57 வயதான பொருளாதார நிபுணரான மிகைல் மிஷுஸ்டின் (Mikhail Mishustin)2020 இல் பிரதமராக நியமிக்கப்படுவதற்கு முன்பு நாட்டின் வரிப் பணியகத்தின் தலைவராக ஒரு தசாப்தம் பணியாற்றினார். உக்ரைன் போர் ஆரம்பித்து 2022 பிப்ரவரியில் இருந்து ரஷ்யா மீது போடப்பட்ட மேற்கத்திய பொருளாதாரத் தடைகளின் வீழ்ச்சியைக் கட்டுப்படுத்துவதில் மிக கவனம் செலுத்தினார்.
ஆயினும் 2022 போர் தொடங்கிய வேளை புட்டினின் படையெடுப்பு முடிவை அவர் எதிர்த்ததாகவும் கூறப்படுகிறது. புட்டினை எதிர்கொள்வதற்குத் தயாராக இருப்பதைக் காட்டிலும் ஒரு மூலோபாய பின்வாங்கலாக, குறைவான சாதகமான நிபந்தனைகளில் ரஷ்ய ஆட்சியின் அடிப்படைக் கட்டமைப்புகளை அப்படியே வைத்திருப்பதன் மேலப் அவரை நன்கு நிலைநிறுத்தக்கூடும்.
சிறையில் உள்ள அலெக்ஸி நவல்னிக்கு சாத்தியமா?
சிறையில் அடைக்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி (Alexei Navalny), புட்டினுக்குப் பிந்தைய ரஷ்யாவை வழிநடத்த விரும்பும் மிக முக்கியமான அரசியல்வாதியாக இருப்பதாக மேற்கத்திய ஊடகங்கள் பாரிய பிரச்சாரங்களை வெளியிட்டன.
முன்னைய ரஷ்யாவின் எதிர்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னிக்கு மோசடி மற்றும் நீதிமன்ற அவமதிப்புக்காக 9 ஆண்டுகள் கடுகாவல் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரஷ்ய அரசியலில் புட்டினுக்கு சவாலாக கருதப்பட்ட அலெக்ஸி நவல்னிக்கு அடுத்தடுத்து வழங்கப்பட்டுள்ள சிறை தண்டனைகள் அவரது ஆதரவாளர்களிடத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ரஷ்ய அதிபர் புட்டினையும், அவரது அரசின் ஊழலையும் கடுமையாக விமர்சித்து வந்தவர் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி. அதிபர் தேர்தலின்போதும் தொடர் பிரச்சாரங்களில் ஈடுபட்ட அலெக்ஸி நவால்னிக்கு இளைஞர்கள் மத்தியில் பரவலான வரவேற்பு இருந்தது.
ஊழலுக்கு எதிரான தனது அறக்கட்டளை மூலமாக பணத்தை முறைகேடாகக் கையாடல் செய்ததாகக் கூறி 2013-ம் ஆண்டு அலெக்ஸி மீது வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் மாஸ்கோ நீதிமன்றம் கடந்த வருடம் அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.
புட்டினை எதிர்த்த போரிஸ் நெம்ட்சோவ் போன்ற பிற எதிர்க்கட்சித் தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பெப்ரவரி 2015 இல் கிரெம்ளினுக்கு அருகிலுள்ள போல்ஷோய் மோஸ்க்வொரெட்ஸ்கி பாலத்தில் தனது காதலியுடன் நடந்து சென்றபோது போரிஸ் நெம்ட்சோவ் சுட்டுக் கொல்லப்பட்டார். சந்தேகத்திற்கு இடமின்றி அவர் ரஷ்யாவின் மிக முக்கியமான எதிர்க்கட்சி அரசியல்வாதிகளில் ஒருவராக விளங்கியவர்.
அத்துடன் புட்டினை அரசியல் ரீதியாக எதிர்த்த ஆனால் மிகைல் கோடர்கோவ்ஸ்கி போன்றவர்களும் நாடுகடத்தப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு:
உக்ரைன் போரை வழிநடத்தும் செர்ஜி ஷோய்கு (Sergei Shoigu) ரஷ்யாவின் அடுத்த சாத்தியமற்றவராகவே தென்படுகிறார். ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு ஜனாதிபதி தற்போது புட்டினால் ஓரங்கட்டப்பட்டுள்ளார். 67 வயதான ஷோய்கு, 1991 முதல் 2012 வரை அவசரகால சூழ்நிலைகள் அமைச்சகத்திற்கு தலைமை தாங்கினார்.
அதன்பிறகு 2014 இல் ரஷ்யாவைடன் கிரிமியாவை இணைப்பதற்கு ஷோய்கு தலைமை தாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. உக்ரைனில் ரஷ்ய படைகளின் வெற்றி தாமதமடைந்து வருவதையடுத்து ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு ஜனாதிபதி புடினால் ஓரங்கட்டப்பட்டு வருவதாக அறிக்கைகள் வெளியாகி வருகின்றன.
உக்ரைனில் ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கையானது தலைநகர் கீவ்வை கைப்பற்ற தவறி தற்போது போர் நடவடிக்கையானது நீண்டு வருகிறது.
அரசியலில் நுழைவதற்கு முன்பு கட்டுமானத் துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றிய ஷோய்கு, கணிசமான இராணுவ அனுபவம் இல்லாதவர்.
பிரித்தானிய உளவுத்துறையின் தகவலின்படி, உக்ரைன் போரில் விரைவான மற்றும் தீர்க்கமான வெற்றியை வழங்கத் தவறியதால் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு ஜனாதிபதி புட்டினால் பதவி இறக்கத்தை எதிர் கொண்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
ரஷ்ய அதிபர் புட்டினின் நீண்ட ஆட்சி நிரந்தரமாக இருக்க முடியாது என்பது உண்மையே. எத்தகைய சவால்களை எதிர் கொண்டு, 2036ஆம் ஆண்டு வரை ரஷ்யா அதிபர் பதவியில் தொடர்வாரா அல்லது அடுத்த தலைமைக்கோ அல்லது அடுத்த தலைமுறைக்கோ ஆட்சி அதிகாரத்தை கையளிப்பாரா என்பது எவருக்கும் புரியாத புதிராகும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More