தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த இளைஞரைக் கொடூரமாகத் தாக்கிக் கொலை செய்த பொலிஸார் அனைவரும் உடனடியாகக் கைது செய்யப்பட்டு உரிய முறையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.
யாழ். வட்டுக்கோட்டைப் பொலிஸாரின் தாக்குதலில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் விடுத்துள்ள கண்டன அறிக்கையிலேயே முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி க.சுகாஷ் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
அவரின் கண்டன அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
“வட்டுக்கோட்டைப் பொலிஸாரின் சட்டவிரோத சித்திரவதைகளால் அப்பாவி இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டமை மருத்துவ ரீதியாக நிரூபணமாகியுள்ளது.
இந்தக் கொலையை வன்மையாகக் கண்டிக்கின்றோம். குற்றமிழைத்த பொலிஸார் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும். விசாரணைகள் உரிய முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும்.
மேலும் பொலிஸாரின் அராஜகம் கட்டுக்கடங்காது தொடர்ந்து வருகின்றது. இத்தகைய அடாவடிகள் – அராஜகங்களில் ஈடுபடுகின்றவர்களுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.” – என்றுள்ளது.