திருகோணமலை மாவட்டத்தின் மூலக்கிளைகள் தெரிவின்போது எனக்கு ஆதரவாக உள்ள கட்சியின் நீண்டகால அங்கத்தவர்கள் இலக்கு வைக்கப்பட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெரும் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி., அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்தி ஒழுக்காற்று குழுவிடத்தில் எழுத்து மூலமாக கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வருடாந்த மாநாடு எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள நிலையில் அக்கட்சியின் மூலக்கிளைகள் மற்றும் தொகுதி, மாவட்டக் கிளைகள் புனரமைப்பு அண்மைக்காலமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் திருகோணமலையில் நடைபெற்ற கட்சியின் மூலக்கிளை உள்ளிட்டவற்றின் புனரமைப்பின்போது, இலங்கைத் தமிழரசுக் கட்சியில் நீண்ட காலமாகச் செயற்படும் அங்கத்தவர்கள் திட்டமிட்ட வகையில் புறக்கணிக்கப்பட்டுள்ளனர் என்று அதிருப்தி வெளியிட்டிருந்தனர்.
இதையடுத்து, அவர்கள் தாம் தொடர்ச்சியாக ஆதரவளித்து வருகின்ற இரா.சம்பந்தனுக்கு குறித்த விடயம் சம்பந்தமாக உரிய தெளிவுபடுத்தல்களுடன் கவனத்துக்குக் கொண்டு வந்திருந்தனர்.
இந்த விடயம் சம்பந்தமாக கரிசனை செலுத்திய இரா.சம்பந்தன், குறித்த மூலக்கிளை உள்ளிட்ட புனரமைப்பின்போது அங்கத்தவர்கள் தெரிவில் தாம் திருப்தி அடையவில்லை என்றும், அந்தத் தெரிவுகள் இதயசுத்தியுடன் நடைபெறாது தன்னை ஆதரிக்கும் கட்சியின் உறுப்பினர்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் விசனத்தை வெளியிட்டுள்ளார்.
அதுமட்டுமன்றி குறித்த விடயம் சம்பந்தமாக கட்சியின் ஒழுக்காற்றுக் குழு விசாரணைகளை நடத்தி உரிய தெளிவுபடுத்தல்களைச் செய்ய வேண்டும் என்றும், தவறுகள் இடம்பெற்றிருப்பது உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் அதற்கான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு மீள் தெரிவு முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
இந்தநிலையில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஒழுக்காற்றுக் குழுவின் தலைவராக உள்ள சீனித்தம்பி யோகேஸ்வரன், சம்பந்தனின் குறித்த முறைப்பாடு சம்பந்தமான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு தற்காலிக பொதுச்செயலாளர் வைத்தியர் பத்மநாதன் சத்தியலிங்கத்தின் திகதி ஒதுக்கீட்டுடனான அனுமதிக்காக காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, கொழும்பு கிளை மற்றும் யாழ்ப்பாணத்தின் காங்கேசன்துறைத் தொகுதி கிளைத் தெரிவுகள் சம்பந்தமாகவும் முறைப்பாடுகள் காணப்படுகின்றன. குறிப்பாக, கொழும்புக் கிளைத் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசாவின் தலைமையில் நடைபெற்ற தெரிவில் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக மூன்று உறுப்பினர்கள் அதிருப்தி வெளியிட்டு கடிதம் அனுப்பியுள்ளனர்.
அதேபோன்று காங்கேசன்துறை தொகுதிக்கான அங்கத்தவர்கள் தெரிவின்போதும் குறைபாடுகள் உள்ளன என்று கட்சியின் உறுப்பினர்கள் சிலரால் விசனம் வெளியிடப்பட்டுள்ளது. எனினும், அது தொடர்பில் இன்னமும் எழுத்துமூலமான முறைப்பாடு ஒழுக்காற்றுக் குழுவிடம் சமர்ப்பிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.