“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனக் கட்சியே தற்போதும் ஆட்சியில் இருக்கின்றது. எமது பொதுஜன பெரமுனவே ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக நியமித்தது. எனவே, எமது கட்சியை ஒதுக்கிவிட்டு அல்லது எமது கட்சியின் தீர்மானத்தை மீறி ஜனாதிபதி செயற்பட முடியாது.”
– இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“ஜனாதிபதி தான் நினைத்த மாதிரி செயற்பட்டால் அதன் விளைவுகள் பாரதூரமாக அமையும். எமது கட்சியின் ஆதரவை அவர் இழக்க நேரிடும். இந்த அரசை அவர் முன்கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்படும். ஒட்டுமொத்தத்தில் அவர் பழைய ரணில் விக்கிரமசிங்க ஆவார்.
இதை அவருக்கு நாம் புரியவைக்கத் தேவையில்லை. அவரே புரிந்துகொண்டு செயற்படுவார் என்று நம்புகின்றோம்.
என்னதான் இருந்தாலும் புதிய ஆண்டில் இரண்டு பிரதான தேர்தல்களை ஜனாதிபதி நடத்தியே ஆக வேண்டும். தேசிய தேர்தல்களைப் பிற்போட எமது கட்சி இடமளிக்கமாட்டாது.
நடைபெறவுள்ள இரண்டு பிரதான தேர்தல்களிலும் எமது பொதுஜன பெரமுன கட்சியே வெற்றிவாகை சூடும். ஜனாதிபதித் தேர்தலில் எமது கட்சியின் வேட்பாளர் யார் என்ற தீர்மானத்தை நாம் இன்னமும் எடுக்கவில்லை.” – என்றார்.