தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் இயக்கத்தின் (புளொட்) மூத்த தளபதிகளுள் ஒருவரான தோழர் இராகவன் அல்லது ஆர்.ஆர். என அழைக்கப்படும் வேலாயுதம் நல்லநாதரின் இறுதிக்கிரியை நிகழ்வு நாளைமறுதினம் வவுனியாவில் நடைபெறவுள்ளது.
இது தொடர்பில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் இயக்கம் (புளொட்) விடுத்துள்ள செய்திக் குறிப்பில்,
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் இயக்கத்தின் மூத்த தளபதிகளுள் ஒருவரும், அதன் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் சிரேஷ்ட உப தலைலரும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் செயலாளருமான தோழர் இராகவன் அல்லது ஆர்.ஆர். என அழைக்கப்படும் வேலாயுதம் நல்லநாதர் நேற்று இயற்கை எய்தினார்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில், 1980 ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை இணந்திருந்து – தமிழ் மக்களின் விடுதலைக்கான பயணத்தில் தனது வாழ்க்கையின் பெரும் பகுதியை முழுமையாக அர்ப்பணித்த ஒரு மூத்த போராளியே ஆர்.ஆர். ஆவார்.
தோழர் ஆர்.ஆரின் வித்துடலுக்கான வணக்க நிகழ்வுகள் 16 ஹேக் வீதி, பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள கட்சியின் கொழும்பு அலுவலகத்தில் நாளை சனிக்கிழமை காலை 9:00 மணி முதல் 12:00 மணி வரையிலும், அதனைத் தொடர்ந்து, வவுனியா கோவில் குளத்தில் அமைந்துள்ள உமாமகேஸ்வரன் நினைவில்லத்தில் நாளைமறுதினம் ஞாயிற்றுக்கிழமை காலை 8:00 மணி தொடக்கமும் நடைபெறும்.
பின்னர், முற்பகல் 11 மணிக்கு இறுதி நிகழ்விகள் நடைபெற்று தோழர் ஆர்.ஆரின் வித்துடல் வவுனியா கோவில்குளத்தில் நல்லடக்கம் செய்யப்படும். – என்றுள்ளது.