பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடியில் மக்கள் சிக்கி தவித்து வரும் நிலையில், இரு வாரங்களுக்கு முன் பொது தேர்தல் நடந்து முடிந்தாலும் ஆட்சி அமைப்பதில் இழுபறி காணப்படுகின்றது.
இந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களில் கராச்சி நகரில் மாத்திரம் 26 பேர் குற்ற சம்பவங்களில் சிக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கராச்சி நகரில் தெருக்களில் நடைபெறும் குற்ற சம்பவங்களை கட்டுப்படுத்த முடியாத நிலை காணப்படுவதாகவும், பொலிஸார் இருந்தபோதும் கூட, கொள்ளைக்காரர்கள் கட்டுப்பாடின்றி திரிந்து வருவதாக பாதிக்கப்பட்ட நபர்கள் தெரிவித்துள்ளனர்.
கராச்சி நகரில் ஒவ்வொரு நாளும் சட்டம் மற்றும் ஒழுங்கு சீர்கெட்டு வருவதுடன், கடந்த வெள்ளிக்கிழமை வீட்டு வாசலில் தந்தையுடன் இருந்த 2 வயது சிறுமி சுட்டு கொல்லப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.
அத்துடன், கொள்ளை சம்பவங்களை தடுக்கும்போது கடந்த 2 நாட்களில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், கையடக்க தொலைபேசிகளை பறித்து செல்வதில் இருந்து, கார் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் அபகரித்து செல்லப்படுகின்றன.
போதிய பொலிஸ் பலம் இல்லாதது, பொலிஸ் துறையில் அரசியல் தலையீடு ஆகியவை இவ்வாறான குற்ற சம்பவங்கள் அதிகரிப்புக்கு காரணங்களாக அமைந்து விட்டன என கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.