செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் மதீஷவின் பந்துவீச்சில் மண்டியிட்டது மும்பை

மதீஷவின் பந்துவீச்சில் மண்டியிட்டது மும்பை

2 minutes read

மும்பை வான்கடே விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (14) நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 29ஆவது போட்டியில் மும்பை இண்டியன்ஸை சிதறடித்த சென்னை சுப்கர் கிங்ஸ் 20 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இலங்கையின் வேகப்பந்துவீச்சாளர் மதீஷ் பத்திரண கைப்பற்றிய 2 முக்கிய விக்கெட்கள் உட்பட 4 விக்கெட்கள் சென்னையிடம் மும்பையை மண்டியிட வைத்தது.

அணித் தலைவர் ருத்துராஜ் கய்க்வாட், ஷிவம் டுபே, மஹேந்த்ர சிங் தோனி ஆகியோரின் அதிரடிகளும் சென்னை சுப்பர் கிங்ஸின் வெற்றியில் பிரதான பங்காற்றின.

மும்பை சார்பாக துடுப்பாட்டத்தில் ரோஹித் ஷர்மா தனி ஒருவராக திறமையை வெளிப்படுத்தி ஆட்டம் இழக்காமல் சதம் குவித்த போதிலும் அது வீண்போனது. இண்டியன் பிறீமியர் லீக்கில் அவர் பெற்ற இரண்டாவது சதம் இதுவாகும்.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் 20 ஓவர்களில் 4 விக்கெட்களை மாத்திரம் இழந்து 206 ஓட்டங்களைக் குவித்தது.

ஆரம்ப வீரர் அஜின்கியா ரஹானே 2ஆவது ஓவரில் 5 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்தபோது சென்னை சுப்பர் கிங்ஸ் தடுமாற்றத்தை எதிர்கொண்டது. (8 – 1 விக்.)

ஆனால், ரச்சின் ரவிந்த்ரா (21), ருத்துராஜ் கய்க்வாட் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 52 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு தெம்பூட்டினர்.

தொடர்ந்து ருத்துராஜ் கய்க்வாடும்  ஷிவம்  டுபேயும் 3ஆவது விக்கெட்டில் 45 பந்துகளில் 90 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர்.

ருத்துராஜ் கய்க்வாட் 40 பந்துகளை எதிர்கொண்டு 5 பவுண்டறிகள், 5 சிக்ஸ்களுடன் 69 ஓட்டங்களைக் குவித்தார்.

தொடர்ந்து ஷிவம் டுபேயுடன் 4ஆவது விக்கெட்டில் 36 ஓட்டங்களைப் பகிர்ந்த டெரில் மிச்செல் 17 ஓட்டங்களுடன் களம் விட்டகன்றார். (186 – 4 விக்.)

இதனிடையே ஜஸ்ப்ரிட் பும்ரா 19ஆவது ஓவரை மிகக் கட்டுப்பாட்டுடன் வீசி 7 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்தார்.

அந்த சந்தர்ப்பத்தில் துடுப்பெடுத்தாடுவதற்கு தோனி காத்துக்கொண்டிருந்தார்.

கடைசி ஓவரை மும்பை இண்டியன்ஸ் அணித் தலைவர் ஹார்திக் பாண்டியா வீசினார்.

அவரது முதல் பந்து வைட் ஆனாது. விதிகளுக்குட்பட்ட அடுத்த பந்தை டெரில் மிச்செல் பவுண்டறி ஆக்கினார்.

அடுத்த பந்து மீண்டும் வைட் ஆனது. தொடர்ந்து இரண்டாவது பந்தை விசுக்கி அடித்த டெரில் மிச்செல் பிடிகொடுத்து ஆட்டம் இழக்க, தோனி களம் புகுந்தார்.

மீதம் இருந்த 4 பந்துகளில் முதல் 3 பந்துகளை தோனி தொடர்சியாக சிக்ஸ்களாக விளாசினார். கடைசிப் பந்தில் இரட்டையை எடுத்த தோனி 4 பந்துகளில் 20 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். அவரது இந்த அதிரடி ஆட்டத்தில் திருப்புமுனையாக அமைந்தது.

மறுபக்கத்திலிருந்து தோனியின் ருத்ர தாண்டவத்தை ரசித்துக்கொண்டிருந்த ஷிவம் டுபே 38 பந்துகளில் 10 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் உட்பட 66 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் ஹார்திக் பாண்டியா 43 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

சென்னை சுப்பர் கிங்ஸினால் நிர்ணயிக்கப்பட்ட சிரமமான 207 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 186 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

ஆரம்ப வீரர்களான ரோஹித் ஷர்மாவும் குவின்டன் டி கொக்கும் மிகத் திறமையாகவும் அதிரடியாகவும் துடுப்பெடுத்தாடி 43 பந்துகளில் 70 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது குவின்டன் டி கொக் 23 ஓட்டங்களுடன் மதீஷ பத்திரணவின் முதல் பந்தில் ஆட்டம் இழந்தார்.

அடுத்து களம் புகுந்த சூரியகுமார் யாதவ் பத்திரணவின் 3ஆவது பந்தில் ஓட்டம் பெறாமல் வெளியேறினார். (70 – 2 விக்.)

எனினும் ரோஹித் ஷர்மாவும் திலக் வர்மாவும் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 3ஆவது விக்கெட்டில் 38 பந்துகளில் 60 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர்.

திலக் வர்மாவின் விக்கெட்டையும் மதீஷ பத்திரண கைப்பற்றினார்.

திலக் வர்மா 20 பந்துகளில் 5 பவுண்டறிகளுடன் 31 ஓட்டங்களைப் பெற்றார்.

மொத்த எண்ணிக்கை 134 ஓட்டங்களாக இருந்தபோது மும்பை அணித் தலைவர் ஹார்திக் பாண்டியாவின் விக்கெட்டை மும்பை வீரர் தேஷ்பாண்டே வீழ்த்தினார். பாண்டியா 2 ஓட்டங்களை மாத்திரமே பெற்றார்.

டிம் டேவிட் 5 பந்துகளில் 2 சிக்ஸ்களுடன் 13 ஓட்டங்களைப் பெற்று, பங்களாதேஷ் வீரர் முஸ்தாபிஸுர் ரஹ்மானின் பந்துவீச்சில் தனது விக்கெட்டை இழந்தார். (148 – 5 விக்.)

சற்று நேரத்தில் ஒரு ஓட்டம் பெற்றிருந்த ரொமாரியோ ஷெப்பர்டின் விக்கெட்டை மதீஷ பத்திரண நேரடியாக பதம் பார்த்தார்.

ஒரு பக்கத்தில் விக்கெட்கள் சரிந்துகொண்டிருக்க மறு பக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய ரோஹித் ஷர்மா 63 பந்துகளை எதிர்கொண்டு 11 பவுண்டறிகள், 5 சிக்ஸ்கள் அடங்கலாக 105 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் மதீஷ பத்திரண 4 ஓவர்களில் 28 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

ஆட்டநாயகன்: மதீஷ பத்திரண

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More