கடந்த 2017-ம் ஆண்டு ஜிம்பாப்வே ஜனாதிபதியாக பொறுப்பேற்ற எம்மர்சன் மனங்காக்வா மரண தண்டனைக்கு எதிரான எதிர்ப்பை பற்றி பகிரங்கமாக பேசினார்.
1960-களில் சுதந்திரப் போரின் போது மரண தண்டனையை எதிர்கொண்டவரான எம்மர்சன் மனங்காக்வா, பொது மன்னிப்பு வழங்கும் ஜனாதிபதி அதிகாரத்தை பயன்படுத்தி மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து வந்தார்.
இந்த நிலையில் நாட்டில் மரண தண்டனையை ரத்து செய்வதற்கான சட்டமசோதா கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு இரு அவைகளிலும் ஒரு மனதாக நிறைவேறியது.
இதையடுத்து, மரண தண்டனை ரத்து செய்யும் சட்டமசோதாவுக்கு ஜனாதிபதி எம்மர்சன் மனங்காக்வா ஒப்புதல் அளித்த நிலையில், ஜிம்பாப்வேயில் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஜிம்பாப்வேயில் தற்போது 60 கைதிகள் மரண தண்டனையில் உள்ளதுடன், கடைசியாக கடந்த 2005-ம் ஆண்டு அங்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.