செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை இந்தோனேசியாவில் ரஷ்ய விமான தளம்? | ஐங்கரன் விக்கினேஸ்வரா

இந்தோனேசியாவில் ரஷ்ய விமான தளம்? | ஐங்கரன் விக்கினேஸ்வரா

4 minutes read

(சோவியத் வீழ்ச்சியின் பின்னர், தென்னாசிய பிராந்தியத்தில் ரஷ்யா செலுத்தி வந்த ஆதிக்கம் வீழ்ச்சி அடைந்தது. ஆனாலும் கடந்த சில வருடங்களாக இந்தோனேசிய கூட்டாளிகளுடனும் ஒட்டுமொத்த தென்கிழக்கு ஆசியாவுடனும் நெருக்கமாக உறவுகளை வளர்க்க மாஸ்கோ முயலுகின்றது)

இந்தோனேசியா தென்கிழக்கு ஆசியா முழுவதும் பரந்து விரிந்துள்ள ஒரு பரந்த தீவுக் கூட்டம். அத்துடன் பப்புவா பகுதி பசிபிக் பெருங்கடலுக்கான நுழைவுப் புள்ளியாகும். அங்குள்ள பியாக் விமானப்படைத் தளம் வடக்கு அவுஸ்திரேலியாவில் உள்ள டார்வினிலிருந்து 1,300 கி.மீ தொலைவில் உள்ளது.

தற்போது பப்புவா மனுஹுவாவில் விமான தளத்தை அமைக்க முயன்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு ரஷ்யா பதில் அளித்துள்ளது. அதேவேளை இந்தோனேசியாவிடம் தனது நீண்ட தூர விமானங்களை அங்கு நிறுத்த அனுமதி கோரியதை ரஷ்யா மறுக்கவில்லை. அதே நேரத்தில் அவுஸ்திரேலியாவின் AUKUS அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் திட்டத்தையும் கடுமையாக ரஷ்யா சாடியுள்ளது.

போரின் நடுவிலும் ரஷ்யா பொருளாதார முயற்சிகளை ஆசியாவில் குறிப்பாக இந்தோனேசியவில் தொடர்ந்துள்ளது. அண்மையில் இந்தோனேசியாவின் ஜனாதிபதி பிரபோவோ சுபியாண்டோ, ரஷ்யாவின் முதல் துணைப் பிரதமர் டெனிஸ் மந்துரோவை ஜகார்த்தாவிற்கு வரவேற்று, சுதந்திர வர்த்தகத்தைப் பற்றி விவாதிக்கவும், இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 75 ஆண்டுகளைக் குறிக்கவும் உதவினார்.

கான்பெராவில் அரசியல் சர்ச்சை:

இந்தோனேசியவில் ரஷ்யா விமான தளத்தை அமைக்க முயன்ற செய்தி வெளியானதுடன் ஆஸி எதிர்க்கட்சி தலைவர் பீட்டர் டட்டன் உடனடியாக ஆளும் அரசாங்கம் மீது, வெளியுறவுக் கொள்கையில் தோல்வி என்று குற்றம் சாட்டினார்.

எதிர்க்கட்சி தலைவர் பீட்டர் டட்டன் அரசியல் ஆதாயத்திற்காகவே தேவையற்ற கருத்துக்களை கூறுவதாக ஆஸி வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார். அரசின் கொள்கைகளை மதிக்காமல், அரசியல் இலாபத்திற்காக தாக்குதல்களை தீவிரப்படுத்தியமைக்கு ஊடகங்களும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்த விவகாரம் குறித்து ஆஸி பாதுகாப்பு அமைச்சர் திரு. மார்லஸ் கூறுகையில், ரஷ்யா இப் பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்த ஈடுபட்டுள்ளது என்பது எங்களுக்குத் தெரியும். ரஷ்யா அவ்வப்போது ஆசிய பிராந்தியத்தில் மூக்கை நுழைக்க விரும்புகிறது என்பது எங்களுக்குத் தெரியும் என்றும் அவர் கூறினார்.

ஆனால் உது தொடர்பாக எங்களுக்குத் தெரிந்த அனைத்தையும் நான் பொதுவில் உடனடியாக வெளியிடப் போவதில்லை. முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்தோனேசியாவின் பாதுகாப்பு அமைச்சர் இந்தோனேசியாவிலிருந்து ரஷ்ய விமானங்கள் இயக்கப்படுவதற்கான எந்த வாய்ப்பும் இல்லை என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி தெளிவுபடுத்தியுள்ளார் என்றும் அவர் கூறினார்.

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் சந்திப்பு :

இந்தோனேசியாவில் இவ்வருட பெப்ரவரியில் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்குவுடன் நடத்திய சந்திப்பின் பின்னரே இந்த விமான தளம் உருவாக்கப்படுவது குறித்து விவாதிக்கப்பட்டது.

ஆயினும் இந்தோனேசியா அரசு விமான தளம் அமைக்க ரஷ்யாவின் கோரிக்கை பற்றிய செய்திகளை மறுக்கிறது. இந்தோனேசியா தனது விமான தளத்தில் ரஷ்ய விமானங்களை தங்க வைக்காது என்பதை அவுஸ்திரேலிய அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அதேவேளை இந்தோனிசியாவில் உள்ள அவுஸ்திரேலிய தூதரகமும் இது தொடர்பில் அவதானம் செலுத்தி வருகிறது.

அவுஸ்திரேலிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா ?

அவுஸ்திரேலியாவின் வடக்கு வாசலாகக் கருதப்படும் இந்தோனேசியாவின் தொலைதூர பகுதியான பப்புவா பிராந்தியத்தில் இராணுவ விமானங்களை நிலை நிறுத்தவதற்கு ரஷ்யா முயற்சியால் பரபரப்பான கன்பரா அரசியல் சூழல், தற்போதைய தேர்தல் காலத்தில் மிகவும் சூடு பிடித்துள்ளது.

இது தொடர்பில் அவுஸ்திரேலியா கூடிய அவதானிப்பை செலுத்தியுள்ளது என்றும், அவுஸதிரேலிய அதிகாரிகள் மேலதிக தகவல்களை திரட்டிவருகின்றனர் என்று அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸி தெரிவித்தார்.

இந்த பிராந்தியத்தில் ரஷ்யா தனது செல்வாக்கு செலுத்த முற்படுவதை நாம் விரும்பவில்லை எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.

ஆனாலும் இந்தோனேசியாவில் வெளிநாட்டு இராணுவ விமானங்கள் அமைந்திருப்பது என்ற யோசனை அந்நாட்டின் சுயாதீன வெளியுறவுக் கொள்கை நிலைப்பாட்டிற்கு ஏற்றதாக இருக்கும் என்று பிரதமர் கூறினார்.

பப்புவா- மனுஹுவா விமான தளம் :

பப்புவாவில் உள்ள மனுஹுவா தளத்தில் நீண்ட தூர விமானங்களை நிலைநிறுத்த மாஸ்கோவின் முயற்சிகள் குறித்த விடயம் அவுஸ்திரேலியாவில் ஒரு கடுமையான அரசியல் விவாதத்தைத் தற்போது தூண்டியஉள்ளது.

ஆனாலும் இந்தோனேசியாவின் பாதுகாப்பு அமைச்சர் அவுஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்லஸுக்கு ஜகார்த்தா இதனை அனுமதிக்காது என்று உறுதியளித்தார்.

இதேவேள இந்தோனேசியவில் விமானப்படை தளத்தை அணுகுவதற்கு மாஸ்கோ முயற்சித்ததை இந்தோனேசிய அரசு திட்டவட்டமாக மறுக்கவில்லை.

அத்துடன் இந்தோனேசியாவின் பாதுகாப்பு அமைச்சரும் ஜனாதிபதி பிரபோவோ சுபியாண்டோவும் இந்த விடயத்தைப் பற்றி பகிரங்கமாகப் பேசவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரஷ்ய – இந்தோனேசிய உறவு:

சோவியத் வீழ்ச்சியின் பின்னர், தென்னாசிய பிராந்தியத்தில் ரஷ்யா ஆதிக்கம் வீழ்ச்சி அடைந்தது என்பது உண்மையாகும். ஆனாலும் கடந்த சில வருடங்களாக இந்தோனேசிய கூட்டாளிகளுடனும் ஒட்டுமொத்த தென்கிழக்கு ஆசியாவுடனும் நெருக்கமாக உறவுகளை வளர்க்க மாஸ்கோ முயலுகின்றது.

இந்தோனேசியாவும் ரஷ்யாவும் கடந்த ஆண்டு தங்கள் முதல் கூட்டு கடற்படைப் பயிற்சிகளை நடத்தின. அதே நேரத்தில் ஜனாதிபதி பிரபோவோ சுபியாண்டோ கடந்த அக்டோபரில் மாஸ்கோவிற்கு விஜயம் செய்தார்.

இந்த வருட பெப்ரவரியில் ரஷ்ய கூட்டமைப்பு பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் செர்ஜி ஷோய்கு, பாதுகாப்பு உறவுகளை ஆழப்படுத்துவது குறித்து விவாதிக்க ஜகார்த்தாவுக்கு விஜயம் செய்தார்.

கடந்த வருடம் மாஸ்கோவில் ஜனாதிபதி புட்டினும் ஜனாதிபதி பிரபோவோவும் நடத்திய சந்திப்பு மிக முக்கியமானதாகும். ரஷ்ய கூட்டமைப்புக்கும் இந்தோனேசிய குடியரசுக்கும் இடையிலான அரசுகளுக்கிடையேயான உறவுகளை வலுப்படுத்து ஒருங்கிணைக்க வேண்டிய தேவை உள்ளது என்று இரு தலைவர்களும் தெரிவித்தனர்.

ரஷ்ய இந்தோனேசிய ஆயுதப் படைகளுக்கு இடையிலான தொடர்பு, விமானப்படைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு உட்பட பல்வேறு விவகாரங்களில் முன்னேற்றம் கண்டுள்ளதாக இச்சந்திப்பின் போது ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், இந்தோனேசிய ஜனாதிபதி பிரபோவோ கூட்டாக அறிவித்துள்ளனர்.

இத்தகைய ஒத்துழைப்பு இரு தரப்பினரின் தற்காப்புத் திறன்களை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. எந்த மூன்றாம் நாடுகளுக்கும் எதிராக அல்ல என்றும், மேலும் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பிற்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாது எனவும் கூறினர்.

மேலும் இரு நாட்டு விமானப்படைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியுதுடன், எதிர்கால இராணுவ ஒத்துழைப்பு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டன. இதன் காரணமாகவே ரஷ்யாவும் இந்தோனேசியாவும் கடந்த ஆண்டு கூட்டு கடற்படை பயிற்சிகளை நடத்தின.

பிரிக்ஸில் இந்தோனேசியா:

இநதோனேசியா உலகின் நான்காவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடாகவும், தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய பொருளாதாரமாகவும் இருக்கிறது.

இந்தோனேசியாவும் சமீபத்தில் பிரிக்ஸ் குழுவில் இணைந்தது. இதில் ரஷ்யா ஒரு நீண்ட கால நிறுவன உறுப்பினராக உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் ரஷ்ய-இந்தோனேசிய வர்த்தகம் 80% அதிகரித்து, 2024 ஆம் ஆண்டில் 4.3 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளதாக ரஷ்ய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ரஷ்யா ஆயுத ஏற்றுமதியில் இத்தோனேசியாவும் முக்கிய பங்கு வகிக்கிறது. ரஷ்யா உலகம் முழுவதும் ஆயுதங்களை விற்க தீவிரமாக முயற்சிகளை மேற்கொள்கிறது.

மேலும் அதிக பதற்றம் உள்ள ஆசிய பிராந்தியத்தில் ஆயுத விற்பனையை அதிகரிக்க அமெரிக்காவும், ரஷ்யாவும் போட்டி போடுகின்றன. மேலும் இந்த ஆசிய வாடிக்கையாளர்களை குறிவைத்து இரு முக்கிய ஆயுதங்களை உற்பத்தி செய்யும் நாடுகள் தங்கள் அணியில் ஈர்க்க முயல்கின்றன. இதன் விளைவாக இத்தகைய புதிய விமான தளங்கள் உருவாக வாய்ப்புள்ளது.

போரினால் பாதிக்கப்பட்ட மியான்மரில் ரஷ்யா ஒரு முக்கிய நட்பு நாடாகவும் ஆயுத விநியோகஸ்தராகவும் உள்ளது. இந்த ஆண்டு, மியான்மரின் இராணுவத் தலைவர் ஆறு யானைகளை பரிசாக வழங்க மாஸ்கோவிற்குச் சென்றார். இதற்கு ஈடாக மியான்மருக்கு ஆறு ரஷ்ய போர் விமானங்களை வழங்கியது.

மியான்மரில் ஒரு சிறிய அளவிலான அணு மின் நிலையத்தை உருவாக்குவது தொடர்பான ஒப்பந்தத்திலும் இரு நாடுகளும் கையெழுத்திட்டன. ரஷ்யா இதுபோன்ற நீண்டகால கூட்டாண்மைகளுக்கு மற்றய தென்னாசியநாடுகளை வெற்றிகரமாக இணைத்து வருகிறது.

ஆனால் தென்கிழக்கு ஆசியாவில் சோவியத் கால ஆதிக்கத்தை பெற இதுவரை முடியவில்லை. அந்த காலகட்டத்தில் இருந்தே இந்தியாவுடன் நெருக்கமாக இருக்கும் ரஷ்யா மேலும் தனது நட்பு வட்டத்தை விரிவுபடுத்த தீவிரமாக முயற்சித்து வருகிறது.

– ஐங்கரன் விக்கினேஸ்வரா

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More