“ஜனாதிபதி அநுரவை யாழ்ப்பாணத்தில் கால் வைக்க விடமாட்டோம் என்று மக்களால் நிராகரிக்கப்பட்ட தமிழ்க் கட்சிக்காரர்கள் சூளுரைக்கின்றார்கள். எமது தேசிய மக்கள் கட்சியின் யாழ்ப்பாணம் மாநகர சபையின் மேயர் வேட்பாளர் கபிலன் மீது வழக்குப் போடுவோம் என்று அவர்கள் மிரட்டுகின்றார்கள். வழக்குப் போடுவதைத் தவிர அவர்களுக்கு எதுவும் தெரியாது. உள்ளூராட்சி சபைத் தேர்தல் தோல்விப் பயத்தில் அவர்கள் இப்படி உளறித் திரிகின்றார்கள்.”
– இவ்வாறு கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம், கந்தர்மடத்தில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சின் அலுவலகத்தில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தேர்தல் பிரசாரத்தில் யாழ்ப்பாணம் மக்கள் எமக்கு அமோகமான ஆதரவைத் தந்தார்கள். கடந்த தேர்தலை விட பாரிய வெற்றி இம்முறை கிடைக்கும்.
எமது அரசின் செயற்பாடுகளைப் பார்த்து தமிழ்க் கட்சிகள் புலம்பி தற்போது ஊளையிடுகின்றார்கள்.
நாங்கள் வேகமாக யாழ்ப்பாணத்தை கட்டியெழுப்புகின்றோம்.
தமிழ் மக்களுடைய தன்மானத்தைத் தேசிய மக்கள் சக்தி அரசின் கீழேயே கட்டிக்காக்க முடியும்.
நாடாளுமன்றத் தேர்தலில் வீட்டுக்கு அனுப்பப்பட்ட நபர்கள் அநுர, தேசிய மக்கள் சக்தி எனப் புராணம் பாடுகின்றார்கள்.
சாக்கடைக்குள் வீழ்ந்துள்ள தமிழ்க் கட்சிகள் எம் மீது சாக்கடை இருப்பதாகக் கூறுகின்றன.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட எமது மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது தமிழ்க் கட்சிகள் அவதூறு பரப்புகின்றன.
ஜனாதிபதி அநுரவை யாழ்ப்பாணத்தில் கால் வைக்க விடமாட்டோம் என்று மக்களால் நிராகரிக்கப்பட்ட தமிழ்க் கட்சிக்காரர்கள் சூளுரைக்கின்றார்கள்.
எமது தேசிய மக்கள் கட்சியின் யாழ்ப்பாணம் மாநகர சபையின் மேயர் வேட்பாளர் கபிலன் மீது வழக்குப் போடுவோம் என்று அவர்கள் மிரட்டுகின்றார்கள்.
வழக்குப் போடுவதைத் தவிர அவர்களுக்கு எதுவும் தெரியாது. உள்ளூராட்சி சபைத் தேர்தல் தோல்விப் பயத்தில் அவர்கள் இப்படி உளறித் திரிகின்றார்கள்.
கபிலன் தனியாள் அல்ல. கபிலனுடன் விளையாடுவது என்பது தேசிய மக்கள் சக்தி அரசுடன் விளையாடுவது போன்றது.
இதுவரை இருந்த யாழ். மாநகர மேயர்கள் குறைந்த பட்சம் யாழ்ப்பாணத்துக்கு எதுவும் செய்யவில்லை.
நாங்கள் ஆளுங்கட்சி என்பதை மறந்துவிடக் கூடாது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி எம்மிடம் உள்ளார்.
பேச்சு சுதந்திரத்தை வைத்து ஊடகங்கள், சமூக வலைத்தள எழுத்தாளர்கள், யூடியூப்பர்கள் தமிழைத் தவறாகப் பயன்படுத்துகின்றார்கள்.
விடுதலைப்புலிகளின் கனவை நாங்கள் நனவாக்குவோம். புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட நகைகள் மக்களிடம் ஒப்படைக்கப்படும்.” – என்றார்.