செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தமிழரசை ஆதரிக்க வேண்டுமெனில் 4 சபைகளில் தவிசாளர் பதவி வேண்டும்! – ‘சங்கு’ கூட்டணி நிபந்தனை

தமிழரசை ஆதரிக்க வேண்டுமெனில் 4 சபைகளில் தவிசாளர் பதவி வேண்டும்! – ‘சங்கு’ கூட்டணி நிபந்தனை

2 minutes read

இலங்கை தமிழரசுக் கட்சி கூடுதலான உறுப்பினர்களைக் கொண்ட உள்ளூராட்சி சபைகளில் அந்தக் கட்சி ஆட்சியமைக்க ஆதரவு வழங்கத் தீர்மானித்துள்ள ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி, வலிகாமம் கிழக்கு (கோப்பாய்) உட்பட 4 பிரதேச சபைகளில் தவிசாளர் பதவியைக் கோரியுள்ளது.

இந்தத் தகவலை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்படி தகவலைக் கூறியுள்ளார்.

இதன்போது சுமந்திரன் மேலும் தெரிவிக்கையில்,

“உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் நாங்கள் தற்போது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டத்துக்குப் பிறகு ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கின்றோம். அதாவது தமிழ்க் கட்சிகளோடு, முஸ்லிம் கட்சிகளோடு நாங்கள் பொது அளவிலேயே ஓர் இணக்கப்பாட்டை எடுத்திருக்கின்கிறோம். எந்தெந்தச் சபைகளில் எந்தக் கட்சிக்குக் கூடுதலான ஆசனங்கள் இருக்கின்றதோ அந்தச் சபைகளிலே அந்தக் கட்சி அப்படியாக நிர்வாகத்தை அமைப்பதற்கான ஆதரவை மற்றைய கட்சிகள் வழங்க வேண்டும் என்பது எங்களது கோரிக்கை. அது பெரும்பாலும் சாதகமாக மற்ற கட்சிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகின்றது. இரண்டு பிரதான முஸ்லிம் கட்சிகளுடனும் நாங்கள் இணக்கப்பாடுடன் இருக்கின்றோம்.

ஆனால், ஒவ்வெரு சபை சபையாகப் பேசி சரியான தீர்மானங்களுக்கு இன்றும் வரவில்லை. ஆனால், பொதுவான ஒரு நிலைப்பாடாக இது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதைப்போல் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியுடன் சந்திப்புகள் நடைபெற்றுள்ளன. இன்றைக்கும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைவர்கள் நான்கு பேர் நல்லூரில் எனது வீட்டுக்கு வந்திருந்தனர். எமது கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானமும், நானும் அவர்களுடன் உரையாடினோம்.

சித்தார்த்தன், செல்வம் அடைக்காநாதன், சுரேஷ் பிரேமச்சந்திரன், ஜனநாயகப் போராளிகள் கட்சியில் தலைவர் வேந்தன் ஆகியோர் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது பொது இணக்கப்பாட்டுடன் சேர்ந்து, ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியினர் இன்னொரு கோரிக்கையையும் முன்வைத்திருந்தனர். அநேகமான சபைகளில் இலங்கைத் தமிழரசுக் கட்சிதான் கூடுதலான ஆசனங்களைப் பெற்றுள்ளது. ஆகவே, தவிசாளர் நியமனத்தைப் பொறுத்தவரை இந்த உடன்பாட்டுக்கு அமைய இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குத்தான் தவிசாளர் பதவி செல்ல வேண்டும். கணிசமான ஆசனங்களை மற்றக் கட்சி கொண்டிருந்தால் அந்தக் கட்சிக்குப் பிரதி தவிசாளர் பதவி வழங்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய யோசனை.

ஆனால், ஜனநாயகத் தமிழ்தத் தேசியக் கூட்டணியினர் இன்று எங்களைச் சந்தித்தபோது இதற்கு மேலதிகமாக தங்களுக்கு தவிசாளர் பதவியைக் கொடுக்குமாறு ஒரு விண்ணப்பத்தை முன்வைத்தனர். மிக அதிகமான சபைகளில் தமிழரசுக் கட்சிக்குத்தான் ஆட்சி அமைகின்ற சூழ்நிலையில், நல்லெண்ணத்தின் அடிப்படியில் தமக்கு நான்கு சபைகளில் தவிசாளர் பதவியை விட்டுத்தருமாறு கேட்டுள்ளார்கள்.

குறிப்பாக, மானிப்பாய் பிரதேச சபை, வலிகாமம் கிழக்கு பிரதேச சபை, சாவகச்சேரி பிரதேச சபை மற்றும் மாந்தை மேற்கு பிரதேச சபை ஆகிய நமக்கு சபைகளில் தவிசாளர் பதவியை அவர்கள் கோருகின்றனர்.

இந்த விடயத்தில் எங்களுடைய கட்சியின் தீர்மானம் ஒன்று இருக்கின்ற காரணத்தால் அதற்கு விதிவிலக்காக நாங்கள் நடப்பதாக இருந்தால், திரும்பவும் கட்சி தீர்மானம் ஒன்று எடுக்க வேண்டியிருக்கும் என்பதை நாங்கள் அவர்களுக்குத் தெரியப்படுத்தி இருக்கின்றோம்.

அதுமட்டுமன்றி இந்த பொதுவான இணக்கப்பாட்டுக்கு மாறாக செயற்படுவதாக இருந்தால் , அந்ததந்த பிரதேசத்தில் இருக்கின்ற எமது கட்சி செயற்பாட்டாளர்களுடனும் நாங்கள் கலந்துரையாட வேண்டும்.

ஆகையினாலே இங்கே இது சாத்தியமா? அல்லது இது சாத்தியமா? என்கின்ற விடயங்களை நாங்கள் ஆராய்ந்து அவர்களுக்குக் கொடுப்பதாகச் சொல்லி இருக்கின்றோம்.” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More