செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சில நிமிட நேர்காணல் புஞ்சையிலிருந்து புரிசைக்கு | ந.முத்துசாமி பேட்டி

புஞ்சையிலிருந்து புரிசைக்கு | ந.முத்துசாமி பேட்டி

14 minutes read


படைப்பாளிகளின் பல நூல்கள் சொல்லாத கதையை ஒரு நல்ல பேட்டி சொல்லிவிடக் கூடும். ஆனால், தமிழில் நீளமான பேட்டிகள் குறைவு. தீவிர இலக்கிய இதழ்களில் அத்தகு முயற்சிகள் தொடர்ந்து நடந்தன. ஆனால், நூலாக்கம் பெற்றவை குறைவு. அப்படியான நூல்களில் ஒன்று, ‘காலத்தை வரைந்த தூரிகைகள்’. பத்திரிகையாளர் பவுத்த அய்யனார் பேட்டிகளுக்கு என்றே தனித்துவமாகக் கொண்டுவரும் ‘நேர்காணல்’ இதழில் வெளியான ஆறு ஆளுமைகளுடைய நீண்ட பேட்டிகளின் தொகுப்பு இந்நூல். ஆறு பேருடைய உலகத்தையும் புரிந்துகொள்ள பெரிய அளவில் உதவுகிறது இந்நூல். ந.முத்துசாமியின் நீண்ட நேர்காணலிலிருந்து ஒரு சிறு பகுதியை வாசகர்களுக்கு இங்கே தருகிறோம். நூலைப் புரிந்துகொள்ள இது உதவும்.  

நேர்காணல் – பவுத்த அய்யனார்

ந. முத்துசாமியின் ‘அன்று பூட்டிய வண்டி’ நூலை எண்பதுகளில் சிவகங்கையில் அன்னம் பதிப்பகத்தில் வாங்கினேன். கவிஞர் மீரா சகாய விலைக்குக் கொடுத்தார். ‘கூத்து’ என்பதைப் பற்றி ‘அன்று பூட்டிய வண்டி’ மூலம்தான் தெரிந்துகொண்டேன். எங்கள் மேலூர் பகுதியில் (மதுரை மாவட்டம்) கூத்து என்றால் பாவைக்கூத்து மட்டும்தான். மற்றபடி எங்களுக்குத் தெரிந்ததெல்லாம் புராண நாடகங்கள்தான். சின்னச் சூரக்குண்டு முருகன் கோவிலிலும் தெற்குத்தெரு மந்தைவீரன் சுவாமி கோவிலிலும் வருடாவருடம் பங்குனி உத்திரத் திருவிழாவில் விடிய விடிய நாடகம் பார்ப்போம். கல்லம்பட்டி கலுவம்பாறைச்சாமி கோவிலில் குதிரை எடுப்பும் மூன்று நாட்கள் நாடகமும் நடக்கும். கல்லம்பட்டியில் நடந்த புகழ்பெற்ற உடையப்பாவின் ‘அரிச்சந்திர மயான காண்டம்’ நாடகத்தை வண்டி கட்டிக்கொண்டு போய்ப் பார்த்த காலங்கள் லேசாக நினைவில் ஒட்டியுள்ளது. 

ந. முத்துசாமி மீதான என் மதிப்பு ‘அன்று பூட்டிய வண்டி’ மூலம் தொடங்கியது. 20 ஆண்டுகளுக்கு முன்பு நிஜ நாடக இயக்கம் மூலம் மதுரையில் நடந்த நாடக விழாவிற்கு முத்துசாமி வருவதாகக் கேள்விப்பட்டேன். அப்போது எனக்கு அதிகம் அறிமுகம் இல்லாத மதுரைக்குப் போனேன். முத்துசாமி இருப்பதாக அறிந்து குப்தா அரங்கிற்குப் போனால் உள்ளே செல்ல கட்டணம் என்றார்கள். அதனால் உள்ளே செல்லாமல் வெகு நேரமாய் வெளியிலேயே நின்றேன். நாடகம் முடிந்து முத்துசாமியும் அவரது குழுவினரும் வேனில் புறப்பட்டதைப் பார்த்தேன். முன் சீட்டில் அமர்ந்திருந்த முத்துசாமியின் கறுப்புச் சட்டையும் பெரிய மீசையும் இப்போது பார்த்ததுபோல் மனதில் இருக்கிறது. 

கூத்துப்பட்டறையின் பல நாடகங்களைச் சென்னையில் மூன்று ஆண்டுகள் பணிபுரிந்தபோது பார்த்துள்ளேன். ஒருசில நாடகங்கள் பற்றி ‘காலச்சுவடு’ இதழில் எழுதியும் உள்ளேன். பல்வேறு குழுக்களின் நவீன நாடகங்களை எண்பதுகளிலிருந்தே பார்த்து வருகிறேன். கண்ணப்பத்தம்பிரானின் முதல் ஆண்டு நினைவு நாளில் புரிசையில் பார்த்த கூத்தின் நினைவுகள் மறக்க முடியாதவை. பரவசமூட்டுபவை. அன்று புரிசையில் கழித்த பகல் பொழுதும் நினைவில் நிற்கிறது. 

‘நேர்காணல்’ என்ற பெயரில் இதழ் தொடங்கும் எண்ணம் வந்தவுடனேயே ‘முத்துசாமி’ அவர்களைப் பற்றிதான் என் மனதில் முதலில் தோன்றியது. முத்துசாமியின் இந்த நேர்காணலை 20.11.2009, 21.11.2009, 22.11.2009 ஆகிய நாட்களில் கூத்துப்பட்டறை மற்றும் அவரது வீட்டில் வைத்து ஐந்து மணி நேரம் பதிவு செய்தேன். பிறகு 10.12.2009 அன்று காலையில் சந்தித்து அவரது உணவுப் பழக்கம் பற்றிப் பதிவு செய்தேன். 100 புகைப்படங்களுக்கு மேல் எடுத்தேன். முதல் நாளில் 60 கேள்விகளுடன் முத்துசாமியைச் சந்தித்தேன். கேள்வி பதில் முறையிலேயே நேர்காணல் இருக்கவேண்டும் என்ற என் திட்டம், முத்துசாமி முதல் கேள்விக்குப் பதில் சொல்லி முடிக்கும் முன்பே நேர்மறையாக மாறத் தொடங்கியது.

ஒரு கேள்விக்கான பதிலை வந்தடைய அவருக்குப் பல பின்புலங்கள் தேவைப்படுகின்றன. அதற்கான காலம் தேவைப்படுகிறது. ‘சுற்றி வளைத்து’ என்று அதை ஒதுக்க முடியாது. தொடக்கத்தில் அவ்வப்போது மட்டுமே கேள்விகள் கேட்டேன். ஒரு கட்டத்தில் என் கேள்விகள் குறையாத நிலையில் திட்டவட்டமாகக் கேள்வியும் பதிலுமாக்க முயற்சித்தேன். இருப்பினும் இன்னும் கேட்கப்படவேண்டிய நிறைய கேள்விகள் என் நோட்டிலேயே மிஞ்சிவிட்டது. கேள்விகளால் அடக்க முடியாத பெரும் ஆளுமை முத்துசாமி. சிறுவயது ஞாபகங்கள் மிகத் துல்லியமாக அவரிடம் இருந்தன. பெயர், இடம் எல்லாம் துல்லியம். ஆனால், நாற்பது வயதுக்கு மேற்பட்ட ஞாபகங்களில் சம்பவங்கள் நினைவில் நிலைத்துள்ள அளவு பெயர்கள், இடங்கள், காலம் குழப்பம் வந்தது. “நெருக்கமாக இருந்த பலர் பெயர்கூட மறந்து போனதே” என வருத்தப்பட்டார். ஆனால், சென்னையில் வேலை பார்த்த இடம், குடியிருந்த இடங்கள், நண்பர்களின் வீடுகள் பற்றியெல்லாம் முத்துசாமி கூறியபோது ஆச்சரியமாக இருந்தது. அவர் கூறியதெல்லாம் 60-கள் முதலான சென்னையின் இடங்கள்.

கடந்த காலம் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும்போதே அந்த விசயம் சார்ந்த நிகழ்காலச் சம்பவங்களைக் கோர்த்துவிடுகிறார். மேலும் ஒரு விசயம் சார்ந்து பேசத் தொடங்கி கொக்கிகளை ஒன்றன் பின் ஒன்றாய் மாட்டிச் செல்வதைப் போல நிகழ்வுகளை அவர் மாட்டிக்கொண்டே சென்றதைக் கேட்டதே ஒரு படைப்பனுபவமாக மாறியது. இப்போது வரலாறாகிப்போன பல விஷயங்களை நேரடியாகக் கண்டு, உணர்ந்து, ஆகி, கடந்து வந்தவர் முத்துசாமி. ஆதலால், வரலாறுகளை நிகழ்காலத்தில் நிறுத்தி நிகழ்காலத்துடன் பொருத்திப் பார்ப்பது அற்புதமான ஒரு அனுபவம். அவரது வார்த்தைகளில் சொல்லப்போனால், ஃப்யூட்டிஃபுல். என் நேர்காணல் அனுபவங்களில் எப்போதும் இது மறக்க முடியாததாய் இருக்கும். கூத்துப்பட்டறையின் இப்போதைய இடத்தைக் காலி பண்ண வேண்டிய நிலையில் அவர் இருந்தார். அவரை வருந்தச் செய்யும் கேள்விகளுக்குக்கூட மிக நிதானமாகப் பதிலளித்தார். 

நீங்கள் பிறந்து வளர்ந்த ‘புஞ்சை’ கிராமம் இன்று வரையிலான உங்கள் எழுத்துக்களில் படிந்து கிடக்கின்றதே?

அதற்குக் காரணம், எப்போதும் மனதில் புஞ்சை இருப்பதுதான். நான் ஆரம்பத்தில் எழுதத் தொடங்கியபோதே எல்லாத்திலேயும் புஞ்சைதான். புஞ்சையில் இருக்கக்கூடிய மனிதர்கள் பற்றித்தான். இன்னிக்கிக்கூட நான் எழுதுகிற எழுத்தில் எப்படியாவது புஞ்சை வந்துடுது. நாடகங்களில் புஞ்சை பின்னுக்குப் போச்சுன்னு சொன்னேனே தவிர, என் மனம் முழுக்க நிரம்பி இருப்பது புஞ்சைதான். இன்னக்கி நீண்ட தூரமெல்லாம் என்னால் நடக்க முடியாது. நீண்ட நாட்களாக எனக்கு சர்க்கரை நோய் இருப்பதால். யாரோட உதவியும் இல்லாம வெளியில போறது எனக்கு சிரமமா இருக்கு.

என்னோட மனைவி நான் நீண்ட தூரம் போக அனுமதிக்கிறதில்ல, புஞ்சைக்குப் போகணும்னு ஆசை இருந்தாக்கூட, நான் புஞ்சைக்குப் போறது கிடையாது. ஆனா இன்னக்கிப் புஞ்சையில் எனக்கு அறிமுகமான மனிதர்கள் ரொம்பக் குறைச்ச ஆட்கள்தான். புஞ்சையின் தோற்றத்தில் கூட மாற்றங்கள். எங்க வீட்டுக்கு எதிர்த்தாற்போல ஒரு வாத்தியார் வீடு கட்டிக்கொண்டிருந்தார். யார் யார் புதிதாய் வீடு கட்டுகிறார்கள். பழைய அமைப்பு இப்போ எப்படி மாறியிருக்கு அப்படீங்கிறதெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனா கிராமத்தில் Modern Technology-யை உபயோகப்படுத்துகிறபோது பழைய அழகியல் மாறாமப் பயன்படுத்திக்கணும் அப்படீங்கிறது இல்லை. எங்க வீடு கட்டும்போது பழைய அழகியலில்தான் கட்டணும்னு நினைத்தேன். ஆனா கட்ட முடியல. எங்க வீட்ல உள்ள யாரும் இதற்கு உடன்படலை.

நாங்க கொலம்பியாவுக்கு பசுபதி, அன்மோல் விலானி, முழுக் கூத்துக்குழு, கண்ணப்பத்தம்பிரான், டாக்டர். ரவீந்திரன் எல்லோரும் போயிருந்போது, அங்க பழைய வீடுகள் நம்மூர் வீடுகளைப் போலத்தான் இருந்தன. வீட்டில் முற்றம் என்பதற்குப் பெரிய அழகிருக்கு. இன்னிக்கூடப் பணக்காரர்கள், முற்றம் வைத்து கட்டிக்கொள்கிறார்கள். நகரத்தில் வசதிகள் பெருகியிருக்கு. ஆனால் எனக்கு விருப்பமான காரியங்களை விரும்பினபடி செய்வதற்கு வேண்டிய வசதிகள் வரல்ல. எனக்கு வரல்ல. நான் விரும்பிய விஷயத்த நான் விரும்பினபடி செய்வதற்கு வேணுங்கிற வசதி வரல்ல. ஆனா ஒரு கௌரமான வாழ்க்கை வாழ்வதற்கு வேணுங்கிற வசதிகள் எனக்கு இருக்கு. எனக்கு இது என்னோட சொந்த வாழ்க்கை பற்றியது. கூத்துப்பட்டறைக்கு வந்தால் நாங்க நினைச்ச காரியம் நடக்குது. சிரமங்களுக்கு இடையில் நடந்துகிட்டிருக்கு. ஆர். கே. நாராயணனின் மால்குடி டேஸ் புத்தகத்தைப் படிச்சேன், க.நா.சு.வின் எழுத்துக்களில் வரும் சாத்தனூர் மான்ய அஹ்ரகாரம் பற்றியெல்லாம் படித்தேன். இந்த எழுத்துக்களைப் படித்த பின்புதான் நான் கதைகள் என்றாலே புஞ்சையைப் பற்றிதான் எழுதணும் என்று தொடங்கினேன். ஊரின் தோற்றம், மனிதர்கள் எல்லாமே மனசிலே பச்சையாய் பதிஞ்சிருந்ததாலே அதைப்பத்தித்தான் எழுதத் தோணியது. ஆரம்பத்தில் எழுதிய ஒருசில கதைகளில் வேண்டுமானால் புஞ்சை இல்லாமல் இருக்கலாம். அப்போது ‘உமா’ பத்திரிகையில் சில கதைகள் எழுதியிருக்கிறேன். என் மனைவி கூட சில கதைகள் எழுதியுள்ளார்கள். ‘நண்பன்’ இதழில் கூட என்னோட ஒருசில கதைகள் வந்திருக்கு. அதெல்லாம் இப்போது எங்கிருக்கிண்ணு தெரியாது. இதெல்லாம் சிறுகதை என்ற இலக்கிய வடிவை நான் புரிந்துகொள்ளாமல் எழுதின நாட்களில் எழுதியவைகள்.

நான் சிறுகதைகளைப் புரிஞ்சுக்கிட்டு எழுதத் தொடங்கினப்புறம் எழுதியதுதான் ‘யார் துணை’ என்கிற கதை. என்னுடைய நண்பர் பாலகிருஷ்ணன். அவங்க அப்பா என் அப்பாவிற்கு நெருங்கின நண்பர். ஆர். கே. நாயுடுன்னு பேர். அவர் நேடாலில் இருந்தார். அது சௌத் ஆப்பிரிக்காவில் உள்ளது. அங்கேயே அவருக்குத் திருமணம் ஆகிக் குழந்தைகள் எல்லாம் இருந்தது. அப்போ பிரிட்டிஷ் அரசாங்கத்தைப் பகைச்சுக்கிட்டதால அங்கே இருக்க முடியல. அங்கே இருந்த அவரது குடும்பம் இப்போ பெரிய அளவில் இருக்காங்க. அவர் புஞ்சைக்கு வந்து இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டார். அவரது மகன்தான் பாலகிருஷ்ணன். அவன் தம்பி அரிகிருஷ்ணன். அந்தத் தெருவை வடுகத் தெருன்னு சொல்வோம். ஆதித்த கரிகாலன் புஞ்சையில் கட்டிய கோயிலைப் பெரிய கோயில்ன்னு சொல்வோம். அந்தக் கோயிலினுடைய தெற்கு வீதிதான் வடுகத் தெரு. நாயுடுகள் அங்க இருந்தாங்க. மேல வீதியில் முதலியார்கள் இருந்தாங்க. அவர்கள் புஞ்சையில் பூர்வீகமாக இருப்பவர்கள். வடக்கு வீதி, கீழ வீதி எல்லாம் இருக்கு. தெற்கு வீதியிலயும், தெற்கு வீதியில் ஒரு சந்துல மட்டும் நாயுடுகள் இருக்காங்க. பாலகிருஷ்ணன் எப்போதும் கிண்டலாகவும் அழகாகவும் பேசக்கூடியவன். கருப்பையா மூப்பனாருடன் அவன் மிக நெருக்கமாயிருந்தான். அவன் விவசாய சங்கத்திலேயும் இருந்தான். அவன் சொல்வான், நாயக்கர்கள் படையிலிருந்தவர்கள் நாங்கள் இங்கே புஞ்சையில் வந்து ஒதுங்கின ஆட்கள் என்று கிண்டலாகப் பேசுவான்.

நாயுடுகள் புஞ்சையில் வசதியான ஆட்கள். இவங்களுக்குத் தெலுங்கு தெரியாது. தெலுங்கில் ‘நைனா’ன்னு சொல்வதைத் தவிர வேறு ஒண்ணும் தெரியாது. அப்போ வடுகத் தெருவோடதான் எனக்கு நெருங்கிய பழக்கம். என்னோட மொழியைத் தீர்மானச்சது எல்லாம் அந்தத் தெரு மனுசங்கதான். எங்க அப்பா, பெரியப்பா எல்லோரும் மேனேஜ்மெண்ட் ஸ்கூல் நடத்தியவர்கள். எலிமெண்டரி ஸ்கூல் – எங்க அப்பா பெரியப்பாவுக்கு எல்லாம் வடுகத் தெரு ஆட்கள் பழக்கம் என்பதால் எனக்கு அதே பழக்கம் வந்தது. “மொட்டைய நாயக்கர்” கதை எழுதியிருக்கேன். மொட்டைய நாயக்கர் வேறொரு ஜாதிப் பெண்ணை கல்யாணம் பண்ணிக்கிறதால ஒதுங்கிப்போய் இருந்தாரு. தோட்டம், வீடு, வயல் என்று வைத்துக்கொண்டு வேறொரு அந்தஸ்தில் வாழ்ந்தார். அவருடைய பையன் மாணிக்கம் என்னோட நண்பன். இதையெல்லாம் வைத்துத்தான் “மொட்டைய நாயக்கர்” கதையை ‘இந்தியா டுடே’யில் எழுதினேன். அந்தக் கதையை படித்த அவரது பேரன்கள் என்மீது நீதிமன்றத்தில் கேஸ் போட்டுவிட்டார்கள். மான நஷ்ட வழக்கு. நீண்ட நாள் வழக்கு நடந்தது. க்ரியா ராமகிருஷ்ணன் மூலமாத்தான் சந்துருவைப் பார்க்கப் போனேன். சந்துரு ஒரு பேனா பிரியர். என்கிட்ட லேமி என்ற பேனா இருந்தது. அவரும் லேமி பேனா வைத்திருந்தார். இதன் மூலமா எனக்கு நண்பராகிவிட்டார். லேமி பேனாவைக் கொலம்பியாவில் வாங்கினதைச் சொன்னேன்.

முதல் வருசம் எங்க சொந்தக்காரர் வீட்டில் எங்கள் தாத்தா என்னை விட்டுட்டுப்போனார். அங்க இருக்க எனக்குப் பிடிக்கல. அடுத்த வருசம் என் மனைவி வீட்டிற்குப் போனேன். அங்கேயிருந்து செகண்ட் ஃபார்ம் படிக்கும்போது எனக்கு டைபாய்டு வந்துச்சு. அந்த சுரத்தோடயே கிளம்பி கிராமத்திற்குப் போயிட்டேன். அந்தச் சமயம் எனக்கு எலும்பில் தோல்தான் ஒட்டிக்கிட்டிருந்தது. குளிக்காததால் தோலில் எல்லாம் பொறுக்குப் பொறுக்காய் இருந்தது. அவ்வளவு கஷ்டமானது. அப்போதெல்லாம் டைபாய்டு வந்தால் அவ்வளவுதான். அவுட். செம்பனார் கோவிலிருந்து ஒரு கம்பௌண்டர் மருந்தெல்லாம் எனக்குக் கொடுத்து சரி பண்ணினார். எங்க அப்பா செத்துப்போய் சில வருசங்களில் எங்கள் பெரியப்பாவும் செத்துப்போனார். அப்ப அவரோட நிலம் சொத்துக்கள் எல்லாம் வெளியில் போயிடக் கூடாதுன்னு பெரியம்மா என் தம்பியைச் சுவீகாரம் எடுத்துக்கொள்ள ஊர்காரர்கள் நிர்பந்தம் பண்ணினார்கள். எங்க வீட்டு நிலங்கள் என்னோடையும், எங்க பெரியப்பா வீட்டு நிலங்கள் எல்லாம் தம்பிக்கும். இப்போ நிலம் எல்லாம் இல்லை. விற்றுவிட்டோம். நண்பர்கள் மட்டும்தான் அங்கே உள்ளார்கள். வீட்டை ஒரு நண்பருக்கு வித்தேன். அவர்தான் இப்போது அங்கு இருக்கிறார்.

சென்னைக்கு எப்போது வருகிறீர்கள்? எதற்காக?

1960இல் என் மனைவியோட அப்பாவும் அம்மாவும் சின்ன வயசுல செத்துப்போய்ட்டாங்க. பாட்டிதான் என் மனைவியை வளர்த்தாங்க. அவங்க குடும்பம் ஒண்ணும் கஷ்டப்படல. இருந்த பணத்தை வட்டிக்குக் கொடுத்து வாங்கினாங்க. நிலம் இருந்தது. குத்தகைகாரர்களிடம் ரொம்ப சண்டை போட்டுத்தான் அந்த நிலத்தோட பலனை வாங்கிவரும்படி இருந்தது. சம்பாதிக்கணும்னு ஒரு கட்டாயம். அப்போ டைப்பிங் எல்லாம் படித்துவிட்டு இருந்தார். உடனே சென்னையில் வேலை கிடைச்சது.

1955-57ல் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இண்டர்மீடியட் படிச்சேன். அதில் நான் தேர்ச்சி பெறவில்லை. படிப்பில் ஆர்வம் இல்லை. சென்னைக்கு வந்துவிட்டேன். அப்போ திருமணம் ஆகலை. முதன்முதலா சென்னைக்கு வந்தது இந்தி எதிர்ப்பு மாநாட்டுக்குத்தான். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நான் படித்தபோது திராவிட முன்னேற்றக் கழகத்தில் மாணவர் அமைப்பாளர் குழு இருந்தது. இருபது பேர் கொண்ட ஒரு குழு. அதில் நான் ஒரு உறுப்பினராய் இருந்தேன். அப்போது கோகலே ஹாலில் நடந்த இந்தி எதிர்ப்பு மாநாட்டுக்குப் போயிருந்தேன். அந்த மாநாட்டில் எம்.ஜி.ஆர். இந்தி எதிர்ப்பை முன்மொழிய நான் அதை வழிமொழிந்து பேசினேன். எஸ்.எஸ்.எல்.சி. படிச்சிட்டிருக்கும்போதே என்னுடைய கட்டுரை ‘திராவிடன்’ பத்திரிகையில் வந்தது. 1955ஆம் ஆண்டு அது. ‘மாணவ உலகத்தின் மகத்தான பணி’ங்கிற கட்டுரை அது. 

கதைகள் எழுதக்கூடிய சூழல் எப்படி வந்தது?

புஞ்சையில் வைத்திநாதன் எங்கிறவன் என்னோட நண்பன். அவனைக் குப்பு குப்புன்னுதான் கூப்பிடுவோம். பள்ளிப்படிப்பு முடிஞ்சவுடன், அடுத்து என்ன பண்றதுன்னு அவன் கேட்டான். தர்மபுரம் ஆதினத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில் தமிழில் வித்வான் படிப்புக்குச் சேர்ந்துடுன்னேன். அதில் சேர்ந்தான். படிச்சான். பம்பாயில் வேலை கிடைச்சது. அங்கேயே அந்தப் பள்ளிக்கூடம் சம்மந்தப்பட்ட ஒருத்தரோட பேத்தியைக் கல்யாணம் பண்ணிக்கிட்டான். அங்கேயே வாழ்ந்து செத்தும் போய்ட்டான். அவனும் நானும் செம்பனார் கோவிலில் உள்ள டெண்ட் சினிமா கொட்டகையில் ‘சொப்பன சுந்தரி’ படம் பாக்கப்போனோம். மகாலிங்கம் என்ற பையனோட வீட்டில் இருக்கும் அழகான ஊஞ்சலில் எல்லாப் பையன்களும் சேர்ந்து ஊஞ்சல் ஆடிக்கொண்டிருப்போம். எந்தம்பி பிரமாதமாய்ப் பாடுவான். சாமா என்பவனும் ரொம்பப் பிரமாதமாய்ப் பாடுவான். சாமா என்பவன் ரொம்ப ஏழ்மையான குடும்பம். சாமிநாதன் அவன் பெயர். சாமா என்று கூப்பிடுவோம். அவன் சாப்பிட்டானா, சாப்பிடலையா. இதெல்லாம் எங்களுக்குக் தெரியவே தெரியாது. பசி, பட்டினி, ஒண்ணுமே காமிச்சுக்கமாட்டான். அவங்க வீட்லயும் அப்படித்தான். ரொம்ப அமைதியா இருப்பாங்க. அவங்க அப்பா சரியான தொழிலைத் தேர்ந்தெடுக்கலை. அவர் புஞ்சையில் பூர்வீகமாக இருக்கிற ஒருத்தர். எங்களுக்கும் சொந்தக்காரர்தான். இருந்தாலும் அவருக்கு நிலம் இல்லை. நிரந்தரமான தொழில் இல்லை. அதனால் நகரங்களில் போய் சுத்தித் திரிந்து வருவார். அவர் மூலமாகத்தான் எனக்கு ரமண மகரிஷி தெரியும். அவர் வீட்டில் ரமணர் படம் தொங்கும். அவர் ரமண மகிரிஷியைப்பற்றிச் சொல்வார். பிறகுதான் ரமணர் பற்றியெல்லாம் நான் படிக்க ஆரம்பிச்சது. இதையெல்லாம் நான் எதற்காகச் சொல்ல வந்தேன்?

உங்களுடைய இலக்கிய ஈடுபாடு எப்படி வந்தது பற்றி…

‘சொப்பன சுந்தரி’ சினிமா பார்த்து வந்துட்டு அதேபோலக் கதை எழுதணும் என்று நானும் குப்புவும் எழுதத் தொடங்கியதுதான் முதல் முயற்சி. அப்போது படித்தது எல்லாம் திராவிடக் கழக எழுத்துக்கள்தான். சி. பி. சிற்றரசு, சாமிநாத சர்மா இவர்கள் எழுதிய புத்தகங்கள்தான். திராவிட இயக்கத்திலிருந்து வந்த எழுத்துக்கள் நிறைய விஷயங்களை அறிமுகப்படுத்தியது. பிரெஞ்ச் அறிஞர்கள், அரசியல்வாதிகளின் சிறு வாழ்க்கைக் குறிப்புகளை எல்லாம் வெளியிடுவார்கள். சி. பி. சிற்றரசு சின்னச் சின்னப் புத்தகங்களாய் நிறைய எழுதியுள்ளார். மாயூரத்திற்கு வந்த பிறகுதான் நூலகம் எல்லாம் பழக்கம். அங்கு நடராஜன் வாசகசாலை என்ற ஒன்று இருந்தது. அங்கே நண்பர்கள் இருந்தார்கள். அங்கேதான் நல்ல புத்தகங்கள் அறிமுகமாச்சு. War and Peace, அன்னா கரினினா, டால்ஸ்டாய் கதைகள் எல்லாம் தமிழில் கிடைத்தன. என் மனைவியும் அதெல்லாம் அப்பவே படிப்பாங்க. மாயூரத்திற்கு வந்த சமயம் கட்சிகள் பற்றி ஒண்ணும் தெரியாது.

புஞ்சையில் வடுகத் தெருவில் சில திராவிடக் கழகத்தார் இருந்தார்கள். பாக்கி எல்லோரும் காங்கிரஸ்காரர்கள். ஆறாவது ஏழாவது நான் படிக்கும்போது கோவிந்தசாமின்னு ஒரு பையன் படிச்சான். அப்ப அவனைக் கம்யூனிஸ்ட்னு நினைச்சுக்கிட்டிருந்தேன். அவனிடம் ஒண்ண மாதிரிக் கம்யூனிஸ்ட் ஆக விரும்புறேன்டான்னு சொன்னேன். உள்ளபடியே பார்த்தால் அவங்க திராவிடக் கழகத்துக்காரர்கள். அவனது அண்ணன் என்னிடம் புலவர் குழந்தையுடைய ‘இராவண காவியம்’ புத்தகத்தைக் கொடுத்தார். அந்த வயசில் அந்தப் புத்தகத்தை என்னால் படிக்க முடியுமா? புலவர் குழந்தை அந்த நூலைக் கம்பன் எழுதியதைப் போலவே எழுதியிருக்கார். அது தடை செய்யப்பட்ட புத்தகம் வேற. அதைத் தட்டுத்தடுமாறி வாசிச்சுப் பார்த்தேன். பிறகு கொடுத்துட்டேன். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நான் படித்தபோது எஸ். டி. சோமசுந்தரம் படித்தார். அவர் திராவிட முன்னேற்றக் கழகம். அவரை அண்ணாச்சின்னு சொல்வோம். ரொம்ப அற்புதமான மனுசன். நிறைய மாணவர்கள் அப்போ அரசியலில் இருந்தாங்க. பழ. நெடுமாறன் இருந்தார். ஒரு சமயம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மாணவர் போராட்டத்தில் Lab-க்கு கியாஸ் கொண்டு செல்லும் குழாய்களை எல்லாம் உடைச்சுக் கட்டடங்களைத் தகர்க்கப் பார்த்தாங்க. இது நடக்கிறது 1958. அப்போ நான் வெளியில் வந்துட்டேன். பழ.நெடுமாறன்தான் அதைத் தடுத்துப் பல்கலைக்கழகத்தைக் காப்பாற்றினார். இல்லையானால் எரிஞ்சு சாம்பலாய்ப் போயிருக்கும். நெடுமாறன் ரொம்ப இனிமையான மனிதர். வி. து. சீனிவாசன்தான் நெடுமாறனுக்கு தகவல் சொன்னவர். அப்போ வீரமணி அங்கே படிச்சிட்டிருந்தார். அவரோட எங்களுக்குத் தொடர்பில்ல. அவர் திராவிடர் கழகம். தி.மு.க.விற்கு அப்போ பெரியார் வைத்த பெயர் ‘கண்ணீர்த் துளிகள்’ என்பதுதான். அப்போ ஈ.வி.கே. சம்பத்தோட இளைய சகோதரர் கஜராஜ் என்னோட ரூம்மேட். சேக்கிழார் என்ற விடுதியில் ஒண்ணாயிருந்தோம். அவனும் சின்ன வயசுல செத்துட்டான். கல்யாணமெல்லாம் ஆச்சு. பெரியார் சிதம்பரத்திற்குக் கூட்டத்திற்கு வந்தால் கஜராஜ் பணமெல்லாம் வாங்கிட்டு வந்திடுவான். அதனால் செலவு செய்ய அவனிடம் தாராளமாய்ப் பணம் இருக்கும்.

நவீன இலக்கியம் சார்ந்த ஈடுபாடு உங்களுக்கு எப்போது வருகிறது? 

நான் சென்னைக்கு வந்தவுடன் 1958இல் என் திருமணம் நடக்கிறது. அண்ணாவோட தலைமையில்தான் என் திருமணம் நடக்க வேண்டும் என்று சொன்னேன். ஆனால் வீட்டில் யாரும் ஒத்துக்கலை. ஒரு சாஸ்திரிகள் சில மந்திரங்களைச் சொல்லி தாலி எடுத்துக் கொடுத்தார். லா. ச. ராமாமிருதம் வந்திருந்தார். “என்ன கல்யாணம் இது” என்று ஆச்சரியப்பட்டார். எங்க வீட்டு மொட்டை மாடியில் டிபன் போட்டு கல்யாணத்தை முடித்தேன். மொத்தச் செலவே நானூறு ரூபாய்தான். எங்க வீட்டிலிருந்து யாரும் வரலை. தம்பி மட்டும்தான் வந்தான். சென்னைக்கு நான் வந்தவுடன் முதன்முதலில் அறிமுகமான நவீன எழுத்தாளர் லா.ச.ரா.தான். நான் தங்கியிருந்த வீட்டுக்குப் பக்கத்திலதான் அவரோட வீடு இருந்தது.

நாங்க காதலிச்சுக் கல்யாணம் செய்துக்கிறதை எங்க அம்மா ஏத்துக்கலை. என் மனைவி வீட்டில் படிக்கும்போது எங்களுக்குள் சின்ன வயசுலேயே அன்பு உண்டாயிடுச்சு. மாயூரம் முனிசிபில் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில்தான் என்னோட மனைவி படிச்சாங்க. என் மனைவி பெயர் அவயாம்பாள். அவயாம்பாள்கிறது மாயூரம் சாமியோட அம்மன் பெயர். நான் கூப்பிடற பெயர் குஞ்சலி. எங்களுக்கு ரெண்டு பையன்கள். ரவி சிங்கப்பூரில் இருக்கான். நடேஷ் எங்களோட இருக்கான். நடேஷ்க்குத் திருமணம் ஆச்சு; கலைராணியோட. அப்புறம் விவாகரத்து ஆயிடுச்சு. நாங்க வேண்டான்னு முதலிலேயே சொன்னோம். வேற வேற சாதியில் கல்யாணம் நடக்குது. அது எந்த அளவில் பொருந்தி வரும்னு தெரியலன்னு என்னோட மனைவியும் நானும் அவர்கள் திருமணத்தை ஒத்துக்கலை. நடேஷ் பிடிவாதமாய் இருந்தான். கலைராணி வீட்டில் இவனுக்குக் கல்யாணம் பண்ணிக்கொடுக்கப் பெரிய தடை. க்ரியா ராமகிருஷ்ணன் முயற்சியில்தான் அந்தக் கல்யாணம் நடந்தது. மறுபடியும் நடேஷ் திருமணம் பண்ணிக்கலை. வேண்டானுட்டான்.

நவீன இலக்கியம் சார்ந்த அறிமுகம் உங்களுக்கு எப்போது கிடைக்கிறது?

சென்னைக்கு நான் வந்தவுடன் மா. கு. நெடுமாறன் மூலமா பூவை எஸ். ஆறுமுகம் எனக்கு அறிமுகமானார். ஒரு முறை நாங்க மூணு பேரும் மெரினா கடற்கரைக்குப் போனபோது க.நா.சு., சி.சு.செல்லப்பா, கிருஷ்ணன் நம்பி மூணு பேரும் பேசிட்டு இருந்தாங்க. அப்போது அவர்கள் அறிமுகமானாங்க. அதற்கு ஒரு மாதத்திற்கு முன்புதான் ‘எழுத்து’ பத்திரிக்கையின் முதல் இதழ் வந்திருந்தது. அப்போ மெரினா பீச்சை ரேடியோ பீச்சுன்னு சொல்வாங்க. ‘எழுத்து’ பத்திரிக்கை வருவதற்கு முன்பு நடந்த இலக்கியச் சண்டை விவாதங்களை எல்லாம் படிச்சிருந்தோம். முதல் ஐந்து தமிழ் நாவல்கள் பற்றியெல்லாம் அப்போவே க.நா.சு எழுதிட்டார். விமர்சனம் பற்றி, பத்திரிகைத் தரமான எழுத்து, இலக்கியத் தரமான எழுத்து என்று சுதேசமித்ரன் ஆண்டு மலரிலேதான் நினைக்கிறேன், அப்பவே க.நா.சு. எழுதிட்டார். அதை எழுதிய உடன் பெரிய கலாட்டா நடந்தது. அது சம்மந்தமா ஒரு கடிதம் கூட உமா பத்திரிகைல எழுதியிருந்தேன். க.நா.சு.வின் விமர்சன எழுத்து விவாதங்களுக்குப் பிறகுதான் ‘எழுத்து’ பத்திரிகை வந்தது.

அப்ப நான் உமாவில் எழுதின கடிதத்தை ஏற்கனவே செல்லப்பா படிச்சிருந்தார். நானும் ‘எழுத்து’ இதழைப் படிச்சிருந்தேன். பூவை எஸ். ஆறுமுகம்தான் ‘எழுத்து’ பத்திரிகையைக் கொடுத்துப் படிக்க சொன்னவர். இப்போ அவர் இருக்கார இல்லையான்னு தெரியலை. அவரை எப்படித் தொடர்பு கொள்கிறதுன்னு தெரியலை. ஆனா அவரைப்பற்றி நெனப்பிருக்கு. இப்ப அவர் இருந்தாருன்னா வயது எண்பதுகளில் இருக்கும். செல்லப்பாதான் எனக்கு முதல் அறிமுகம். அதற்குப் பின்தான் க.நா.சு. தெரியும். சி.மணி, வி. து. சீனிவாசன், இரா. வெங்கடேசன் எல்லாம் சிதம்பரத்தில் படிக்கிறபோதே பழக்கம் வந்தாச்சு.

சிறுகதைகளில் உங்கள் சாதனை முக்கியமானது. பரவலான வாசகக் கவனம் பெறாதது ஏன்? 

வாசகக் கவனம் பெற்றிருக்கிறதா, இல்லையா என்று எனக்குத் தெரியாது. என் கதையை முக்கியமான ஆட்கள் பலரும் பாராட்டிச் சொல்லியிருக்கிறார்கள்.

ஆனால், நாடகத்துறை சார்ந்து உங்களைச் சொல்லும் அளவிற்கு இலக்கியம் சார்ந்து உங்களைச் சொல்வதில்லை. அது எதனால்?

அதற்குப் பல காரணங்கள் உள்ளது. ஒரு சமயம் இலக்கியச் சிந்தனை கூட்டத்தில் டாக்டர். ஃபிராங்ளின் பேசினார். அப்போது “நவீன தமிழ்ச் சிறுகதைப் பாணியை ‘முத்துசாமி ஸ்கூல்’ என்றுதான் சொல்லவேண்டும்” என்று பேசினார். இந்த ஒரு காரணத்தினாலேயே செல்லப்பாவிற்கும் எனக்குமான உறவு முறிஞ்சுபோச்சு. ஃபிராங்ளின் சென்னை அமெரிக்கன் கல்ச்சுரல் சென்டரில் இருந்தார். தமிழ் படிச்சவர். தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்பு செய்தவர். என்னோட ‘நாற்காலிக்காரர்’ நாடகத்தை மொழிபெயர்த்துள்ளார். அதை அமெரிக்காவில் வெளியிட ஏற்பாடெல்லாம் செய்தார். சென்னையிலிருந்து போன பிறகு, கான்சாஸ் பல்கலைக்கழகத்தில் ஆசிரியராய் இருந்தார். முத்துசாமியை ஒரு சிறுகதை எழுத்தாளராய்ப் பேசாமல் இருப்பது ஒரு வசதியாய் இருக்கு. நான் இலக்கியத்தில் பிரச்சாரம் பண்றது கிடையாது. புத்தகம் வெளிவந்த பிறகு விற்றதா, இல்லையா என்று பார்ப்பது கிடையாது. அன்றைய இலக்கியத்தில் சிறுகதை பெரிய பங்கு வகிச்சது. விமர்சனம் பெரிய பங்கு வகிச்சது. க.நா.சு. விமர்சன ரீதியாய் வெளியிடும் எழுத்தாளர்களின் லிஸ்ட் ரொம்ப கவனிக்கப்பட்டது. எழுத்தாளர்கள், வாசகர்கள் எல்லோரும் அக்கறை காண்பித்தார்கள். ஒரு லிஸ்ட்ல ஒருவரை விட்டுவிடுவார். அடுத்த லிஸ்ட்ல இன்னொருவரைச் சேர்ப்பார். க.நா.சு.வை ஒத்துக்காதவர்கள் கூட லிஸ்ட்ல பேர் இருக்கான்னு பார்த்துக்கிட்டிருந்தாங்க. எல்லோருக்கும் ஆசை இருக்கு இல்லையா? அது நியாயமானது. பலரால் பேசப்படணும், என்னோட எழுத்து சிறப்பானதாய் இருக்கணும். இப்படிச் சொல்றதை எல்லோரும் ஆசைப்படறாங்க. பத்திரிகை எழுத்து, இலக்கிய எழுத்து என்று பேச்சு கடுமையாகத் தாக்கப்பட்டது.

நாடகத்தையே எடுத்துக்கொண்டால் கூத்துப்பட்டறை நடத்திய எல்லா நாடகத்தையும் விட தெனாலிராமன் ரொம்ப பாப்புலராய் போய்விட்டது என்று ஒருத்தர் சொன்னார். தரமான விஷயங்கள் பாப்புலராய் வரணும். சமுகத்தில் நல்ல விஷயங்களுக்கு இடம் வரணும்!

காலத்தை வரைந்த தூரிகைகள்-நேர்காணல் இதழின் நேர்காணல்கள்

பவுத்த அய்யனார்

பக்கம் 320

விலை ரூ.320

துருவம் வெளியீடு

எண்.5. கம்பர் தெரு, ஆலந்தூர்,

சென்னை- 600 016 

editor@dhuruvam.in

9841943437 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More