(நேர்காணல்:- ஆர்.ராம்)
படப்பிடிப்பு.எஸ்.எம்.சுரேந்திரன்
- பஷிலின் கைப்பொம்மையாக ஜனாதிபதி கோட்டாபய
- ஒதுங்கியிருக்கின்றார் பிரதமர் மஹிந்த
- பகற்கனவாகிறது நாமலின் தலைமைத்துவக் கனவு
- அமெரிக்காவில், பஷில் மீது பணத்தூய்தாக்கல் குற்றச்சாட்டு
- எதிரணியுடன் கூட்டில்லை அரச எதிர்ப்பு தொடரும்
- ஜனாதிபதி வேட்பாளராகும் எண்ணமே எனக்கு இல்லை
நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவிடத்தில் தீர்மானம் எடுக்கும் அனைத்து அதிகாரங்களும் ஒப்படைக்கப்பட்டுள்ளதால் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபயவுடன், ராஜபக்ஷக்களின் குடும்ப ஆட்சி முழுமையாக நிறைவுக்கு வரவுள்ளது.
இந்நிலையில் எதிர்காலத்தில் இந்த நாட்டில் குடும்பமொன்று ஆட்சியதிகாரத்தில் செல்வாக்குச் செலுத்த முடியாது.
அதற்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதுமில்லை என்று தேசிய சுதந்திரன முன்னணியின் தலைவரும்,பொதுஜனபெரமுனவின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவசன்ச வீரகேசரிக்கு வழங்கிய விசேட செவ்வியின்போது குறிப்பிட்டுள்ளார்.
அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு,
கேள்வி:- அமைச்சுப்பதவியிலிருந்து நீங்கள் நீக்கப்பட்டதன் பின்னரான நாட்கள் கடினமானவையாக உள்ளதா?
பதில்:- அவ்வாறில்லை. அமைச்சுப்பதவிகளை அலங்கரித்துக்கொண்டு மக்கள் சேவையாற்ற வேண்டுமென்று அரசியலுக்கு வரவில்லை.
அமைச்சுப்பதவிகள் தற்காலிகமானவை. ஆகையால் அதுபற்றி கவலைப்படுவதற்கில்லை. கைத்தொழில் அமைச்சராக பணியாற்ற வாய்ப்புக் கிடைத்தது.
எனக்குரிய காலத்தில் முழுமையான ஈடுபாட்டுடன் செயற்பட்டேன். தற்போது ஆத்ம திருப்தியுடன் இருக்கின்றேன்.
கேள்வி:- அமைச்சருக்கான உத்தியோகபூர்வ இல்லம்,வாகனங்கள் உள்ளிட்டவற்றை கையளித்து விட்டீர்களா?
பதில்:- ஆம்
கேள்வி:- நாட்டின் பொருளாதார நெருக்கடிகளுக்கான காரணங்களையும், நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவுக்கு எதிரான கருத்துக்களையும் பொதுவெளியில் கூறும் போது அதற்கான பிரதிபலிப்புக்கள் ஏற்படுமென்று நீங்கள் கருதவில்லையா?
பதில்:- நாம் அரசாங்கத்தில் அங்கம் வகித்துக்கொண்டே இந்த விடயங்களை எடுத்துரைத்தோம், அப்போது யாரும் செவிசாய்க்கவில்லை. ஆகவே எதிர்காலத்தில் ஏற்படப்போகும் ஆபத்துக்களை தடுப்பதற்காக பொதுவெளிக்கு வந்தோம்.
இதில் எம்மைப்பற்றி சிந்திக்கவில்லை. நாட்டையும் மக்களையும் பற்றியே சிந்தித்தோம்.
கேள்வி:- ஜனாதிபதி கோட்டாபயவுக்காகவும்ரூபவ் பாராளுமன்ற அதிகாரத்திற்காகவும் நீங்கள் மக்கள் மத்தியில் தீவிர பிரசாரங்களை முன்னெடுத்தவர் என்ற வகையில் நாட்டின் தற்போதைய நிலைமைகளுக்கு பதிலளிக்க வேண்டிய கடப்பாடு உங்களுக்கும் உள்ளதல்லவா?
பதில்:- ஆம், அதனால் தான் நாம் அரசாங்கம் தவறான வழியில் செல்கின்றது என்பதை வெளிப்படுத்தி அதனை சரியான வழியில் பயணிக்க வைப்பதற்கு முயற்சிகளை எடுத்திருந்தோம்.
எதிர்வரும் காலத்திலும் அதற்கான நடவடிக்கைளை முன்னெடுப்போம். அமைச்சுப்பதவிகளை காப்பாற்றுவதற்காக நாங்கள் மௌனமாக இருக்கவில்லையே.
கேள்வி:- நிதி அமைச்சராக இருக்கும் பஷில் ராஜபக்ஷவுக்கும், உங்களுக்கும் என்ன பிரச்சினை?
பதில்:- தனிப்பட்ட ரீதியில் எனக்கும் அவருக்கும் இடையில் எவ்விதமான பிரச்சினைகளும் இல்லை.
கேள்வி:- ஆனால், நீங்கள் அமைச்சர் பஷிலின் ஜனாதிபதி கனவினை தகர்த்தாக கூறியுள்ளீர்களே?
பதில்:- ஆம், ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவதற்கு பஷில் உடைகளை தயார் செய்து புகைப்படபிடிப்பும் நிறைவடைந்ததன் பின்னர் மக்களின் ஆணையைப் பெறவல்லவராக கோட்டாபய இருக்கின்றார் என்ற உண்மையை நாம் எடுத்துரைத்தோம்.
அதன்படி மஹிந்த ராஜபக்ஷ தீர்மானம் எடுத்திருந்தார். அதனால் அவருடைய ஜனாதிபதிக் கனவு தகர்ந்து போனது. ஆனால் நாங்கள் கள நிலைமையைத் தான் குறிப்பிட்டிருந்தோம்.