பொருளாதார நெருக்கடிக்க நான் காரணம் என அரசியல் தரப்பில் குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
பொருளாதார மீட்சிக்காக முன்வைக்கப்பட்ட திட்டங்களும், பொருளாதார முகாமைத்துவ திட்டங்களும் தற்போது செயற்படுத்தப்பட்டிருந்தால் சமூக கட்டமைப்பில் தற்போதைய பிரச்சினை இந்தளவிற்கு தீவிரமடைந்திருக்காது.
பொருளாதாரத்தில் நேரடி செல்வாக்கு செலுத்தும் அமைச்சு, நிறுவனங்களின் தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதை ஜனாதிபதியிடம் வலியுறுத்தினேன்.
நெருக்கடியில் இருந்து தப்பிப்பதற்காக பதவி விலகவில்லை.
முழமையான மாற்றம் ஏற்படுத்தப்பட்டால் மாத்திரமே பொருளாதார நெருக்கடியை முகாமைத்துவம் செய்ய முடியும் என்பதை அத்தருணத்தில் உணர்ந்து பதவி விலகினேன் என இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்தார்.
செவ்வியின் முழு வடிவம் வருமாறு
கேள்வி– நாட்டில் தற்போது தீவிரமடைந்துள்ள பொருளாதார நெருக்கடிக்கு தாங்கள் பொறுப்புக்கூற வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்கின்றீர்களா ?
பதில்– இல்லை பொருளாதார நெருக்கடிக்கு மத்திய வங்கியின் ஆளுநர் என்ற ரீதியில் நான் பொறுப்புக்கூற தேவையில்லை.பொருளாதார நெருக்கடியை முகாமைத்துவம் செய்ய மத்திய வங்கியின் தரப்பில் இருந்து அரசாங்கத்திற்கு பல திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு கொவிட் பெருந்தொற்று தாக்கம் பிரதான காரணியாக அமைந்தது.
கொவிட் தொற்றிற்காக பல பில்லியன் நிதியை மத்திய வங்கி செலவிட்டுள்ளது.வரையறுக்கப்பட்ட வெளிநாட்டு கையிருப்பி பொருளாதார நெருக்கடியை தீவிரப்படுத்தியுள்ளது.
கேள்வி -அமைச்சரவை அமைச்சர்கள் கூட்டாக பதவி விலகியதை தொடர்ந்து ,ஏன் நீங்களும் பதவி விலகுனீர்கள் ?
பதில் -பதவி விலக வேண்டியதற்கான சூழல் அப்போது ஏற்பட்டது.தீவிரமடைந்துள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முக்கியமான சகல கட்டமைப்பில் இருந்தும் மாற்றத்தை ஏற்படுத்துங்கள் என ஜனாதிபதியிடம் வலியுறுத்தினேன்.
பொருளாதாரத்தில் நேரடி செல்வாக்கு செலுத்தும் நிறுவனங்களின் தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தினேன்.
கேள்வி– பொருளாதார மீட்சிக்கான 6 மாத கொள்கைக்கு என்னவாயிற்று ?
பதில்– பொருளாதார மீட்சி கொள்கை திட்டத்தை செயற்படுத்தியிருந்தால் சமூக கட்டமைப்பில் தற்போதைய பிரச்சினை இந்தளவிற்கு தீவிரமடைந்திருக்காது.
மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த ஒக்டோபர் 1ஆம் திகதி பொருளாதார மீட்சிக்கான ஆறுமாத கொள்கையினை முன்வைத்தோம்.
வெளிநாட்டு கையிருப்பு வரையறுக்கப்பட்டதை தொடர்ந்து அது சமூக கட்டமைப்பிற்கு எவ்வகையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை முன்கூட்டியே அறிந்து அதனை முகாமைத்துவம் செய்யும் திட்டத்தை நிதியமைச்சிடம் சமர்ப்பித்தோம்.
சமர்ப்பிக்கப்பட்ட திட்டம் அமைச்சரவையின் அங்கிகாரத்துடன் தான் செயற்படுத்தப்பட வேண்டும்.ஆனால் அத்திட்டம் அமைச்சரவை வரை செல்லவில்லை.
கேள்வி- பொருளாதார மீட்சிக்கான 6 மாத கொள்கை திட்டத்தை நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ அமைச்சரவையில் சமர்ப்பிக்கவில்லை என நேரடியாக குறிப்பிட முடியாதா ?
பதில்- முடியும்,நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ பொருளாதார மீட்சிக்கான ஆறு மாத கொள்கை திட்டத்தை அமைச்சரவையில் சமர்ப்பிக்கவில்லை.
அதற்கான காரணத்தையும் குறிப்பிட்டார்.
அத்திட்டத்தை மறுபரிசீலனை செய்யுமாறும் கேட்டுக்கொண்டார்.
அக்காலக்கட்டத்தில் இந்திய கடனுதவி திட்டம் தொடர்பிலும்,2022ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டம் மீது அதிக கவனம் செலுத்தப்பட்டது.
கேள்வி– அமைச்சரவை அமைச்சருக்கான அதிகாரமுடைய ஆளுநராக நியமிக்கப்பட்டீர்கள்.
அந்த அதிகாரத்தை பயன்படுத்தி செயற்பட்டிருக்கலாமே ?
பதில் -அமைச்சரவை அதிகாரமுடைய ஆளுநராக நான் செயற்படவில்லை அதற்கான தேவைகளும் அப்போது ஏற்படவில்லை.நீதியமைச்சின் சட்டத்திற்கும்,அதிகாரத்திற்கும் அப்பாற்பட்டு செயற்பட முடியாத நிலைமை காணப்பட்டது.
மத்திய வங்கி சுயாதீனமான தீர்மானங்களை முன்னெடுத்து அதனை அரசாங்கத்திடம் ஒப்படைத்துள்ளது.
தீர்மானங்களை செயற்படுத்தாமலிருந்தது அரசாங்கத்தின் தவறு . மத்திய வங்கி சுயாதீனமாக செயற்படவில்லை,அரசியல் தலையீடு காணப்பட்டது என ஒருசிலர் குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
கேள்வி- சர்வதேச நாணய நிதியத்திற்கு ஆரம்பத்தில் செல்லாமை தவறு என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்வதை தடுத்தது யார் ?
பதில் -பொருளாதார நெருக்கடிக்கு சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளாமல் உள்ளக முறையில் முகாமைத்துவம் செய்ய பல திட்டங்களை அரசாங்கத்திடம் ஒப்படைத்துள்ளேன்.எதனையும் மறுக்க முடியாது.
நிலைமை கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு வந்ததை தொடர்ந்தே சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள தீர்மானித்துள்ளது.ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ தலைமையில் கடந்த மாதம் 23ஆம் திகதி இடம்பெற்ற சர்வகட்சி மாநாட்டின் போது இவ்விடயங்கள் குறித்து தெளிவுப்படுத்தியுள்ளேன்.
கேள்வி- சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதற்கு நீங்கள் ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்தீர்கள்.தற்போது இலங்கை நிதியத்தின் உதவியை பெற்றுக்கொள்ள தீர்மானித்துள்ளமை தொடர்பில் உங்களின் நிலைப்பாடு?
பதில் – தற்போதைய நிலையில் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதை தவிர்த்து மாற்று வழிமுறை கிடையாது.நாணய நிதியத்தின் சாதக காரணிகளை மாத்திரம் குறிப்பிடும் தரப்பினர் அதன் எதிர்விளைவுகள் குறித்து கருத்து தெரிவிக்காமலும்,அவதானம் செலுத்தாமல் இருப்பது பிரதான குறைப்பாடு என குறிப்பிடுவேன்.
கேள்வி – பொருளாதார நெருக்கடி தொடர்பில் முன்னாள் நிதியமைச்சருடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டீர்களா ?
பதில் -நிதி சட்டத்திற்கமையே மத்திய வங்கி செயற்பட முடியும்.நாட்டின் நிதி நிலைமைக்கு பாதிப்பு ஏற்படும் போது அதனை மத்திய வங்கியின் ஆளுநர் நிதி சட்டத்தின் 64 மற்றும் 68ஆவது அத்தியாயத்திற்கு அமைய நிதியமைச்சருக்கு அறிவிக்க வேண்டும்.இச்சட்டத்திற்கமைய பதவி வகித்த 06மாத காலத்தில் நாட்டின் நிதி நிலைமை குறித்து நிதியமைச்சருக்கு அறிவுறுத்தியுள்ளேன்.
கேள்வி -ரூபாவின் பெறுமதியை தளம்பல் நிலைப்படுத்தியமை தவறான தீர்மானம் என தற்போது குறிப்பிடப்படுகிறது ?
பதில் -பொருளாதார நெருக்கடியின் போது ரூபாவின் பெறுமதியை தளம்பல் நிலைக்கு நிலைப்படுத்தியமை அவதானமிக்கது.
அதனை விளங்கிக்கொள்வது அவசியம்.ரூபாவை தளம்பல் நிலைப்படுத்தாமல் நிதி நெருக்கடியை முகாமைத்துவம் செய்ய மாற்று வழிமுறைகளை முன்னெடுத்தோம்.எரிபொருள்,மின்கட்டணத்தை அதிகரிக்குமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்தினோம்.
அத்தியாவசியமற்ற பொருட்கள் இறக்குமதியை தற்காலிகமான இடைநிறுத்துமாறும் வலியுறுத்தினோம்.
ரூபாவின் பெறுமதியை தளம்பல் நிலைப்படுத்தியமை தவறாயின் அதனை திருத்திக்கொள்ளலாம் என்றார்.
நன்றி – வீரகேசரி