நேர்காணல்:- ஆர்.ராம்
அதிகாரங்கள் ஒரிடத்தில் குவிந்துள்ளதால் அரச கட்டமைப்பு சிதைவடைந்துள்ளது. ஆகவே அரசியலமைப்பு திருத்தம் அவசியமாகின்றது என்று இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் வீரகேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார். அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு,
கேள்வி:- அண்மைய நாட்களில் நடப்பு விவகாரங்கள் குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உடனடியான பிரதிபலிப்புக்களைச் செய்துவருவதோடு அதீத கரிசனைகளை வெளிப்படுத்துவதற்கு பிரத்தியேக காரணங்கள் ஏதுமுண்டா?
பதில்:- இலங்கை சட்டத்தரணிகள் சங்கமானது தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள், மற்றும் அரசியல் ஸ்திரமற்ற தன்மை தொடர்பில் அதீத கரிசனையை கொண்டிருப்பதற்கு பிரத்தியேகமான காரணங்கள் என்று எதுவும் இல்லை.
இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கம் தனது கடமைகளையே முன்னெடுகின்றது. நாட்டின் பிரஜைகளின் அடிப்படை உரிமைகள் உறுதிப்படுத்தப்படுவதோடு, ஜனநாயகம், அமைதியான சூழல் ஆகியன ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதில் கரிசனைகளைக் கொண்டிருக்கின்றோம்.
அதனை அடிப்படையாகக் கொண்டே எமது செயற்பாடுகளும், அறிவிப்புக்களும் அமைந்துள்ளன.
கேள்வி:- நாட்டின் நெருக்கடிகளை முடிவுக்கு கொண்டுவருவதற்காக 13அம்சங்கள் அடங்கிய யோசனையைகளை அரசியல் தரப்பினரிடத்தில் கையளித்திருந்தீர்களே அதன் தற்போதைய நிலைமை என்ன?
பதில்:- இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கமானது, நாட்டின் பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரமற்ற நிலைமைகளை மிக நெருக்கமான அவதானித்ததன் அடிப்படையிலேயே அதற்கு தீர்வு காண்பதற்கான ஒரு செயற்றிட்டமாக 13அம்சங்கள் அடங்கிய யோசனைகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட அரசியல் தரப்பினரிடத்தில் கையளித்திருந்தோம். தொடர்ந்து ஒவ்வொரு தரப்பினருடனும் தனித்தனியான சந்திப்புக்களை நடத்தியிருந்தோம்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்பட வேண்டும், தேசிய ஐக்கிய இடைக்கால அரசாங்கம் 18 மாதங்கள் மாத்திரம் ஸ்தாபிக்கப்பட வேண்டும்.
அவ்வாறு ஸ்தாபிக்கப்படும் அரசாங்கம் 6 மாதங்களுக்குள் தேர்தலொன்றை அறிவிக்க வேண்டும். அரசியலமைப்பு பேரவையின் அனுமதியின்படி மத்திய வங்கியின் ஆளுநரும் நிதிச்சபையும் நியமிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட 13 அம்சங்கள் எமது யோசனையில் அடங்கியுள்ளன.
அதனடிப்படையில் அரசியல் கட்சித்தலைவர்களுடனான சந்திப்புக்களின்போது தலைவர்களும் எம்மால் முன்மொழியப்பட்ட அனைத்து அம்சங்களையும் ஏற்றுக்கொள்ளாதபோதும் சில அம்சங்களை அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். எனினும், பிரயோக ரீதியாக அத்தரப்பினர் அவற்றை நடைமுறைப்படுத்துவார்களா என்பதை தற்போது கூற முடியாதுள்ளது.
கேள்வி:- குறிப்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடனான கலந்துரையாடலின்போது உங்களின் ஆலோசனைக் கோவை தொடர்பில் எவ்விதமான பிரதிபலித்தார்?
பதில்:- சாதகமாக பரிசீலிப்பேன் என்ற வகையிலேயே கருத்துக்களை முன்வைத்திருந்தார். அவர் அவற்றை நடைமுறையில் முன்னெடுத்தால் வரவேற்கத்தக்கது.
கேள்வி:- ஜனாதிபதி கோட்டாபய இறுதியாக நாட்டுக்கு ஆற்றிய உரையின்போது 19ஆவது திருத்தச்சட்டத்தினை மீள அமுலாக்குவேன் என்று கூறியுள்ளார் அல்லவா?
பதில்:- ஆம், ஆனால் அவர் இலங்கைச் சட்டத்தரணிகளின் ஆலோசனைகள் பற்றியோ அவற்றை அமுலாக்குவது பற்றியோ குறிப்பிடவில்லை.
கேள்வி:- உங்களுடைய யோசனை தொடர்பில் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிரணியினரின் நிலைப்பாடு என்னவாக இருந்தது?
பதில்:- எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட அவருடைய பங்காளிக்கட்சிகள் கொள்கை அளவில் எமது யோசனையை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்திருந்தார். ஏனைய சில தரப்பினர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கத்திற்கு எதிரான நிலைப்பாடுகளை வெளிப்படுத்தினார்கள்.
கேள்வி:- நாட்டில் ஏற்பட்டுள்ள, பொருளாதார, அரசியல் நெருக்கடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முகமாக, புதிய பிரதமராக ஐ.தே.க.வின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். அதனை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
பதில்:- புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டமை தொடர்பில் தற்போது எவ்விதமான கருத்துக்களையும் என்னால் கூறமுடியாது. நாம் அந்த நியமனம் தொடர்பில் அவதானங்களைச் செலுத்தி, ஆராய்ந்து எமது நிலைப்பாட்டினை அறிவிக்கவுள்ளோம்.
இருப்பினும், எமது 13அம்சங்கள் அடங்கிய யோசனையில் பிரதமராகத் தெரிவு செய்யப்படுபவர் அனைத்து கட்சிகளும் அங்கீகரிக்க வல்லவராகவும், அனைத்துக் கட்சிகளையும் உள்ளீர்த்து செயற்பாட்டை முன்னெடுத்துச் செல்லக் கூடியவராகவும் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளோம் என்பதை இங்கு குறிப்பிட்டுக் கூறுகின்றேன்.
கேள்வி:- புதிய பிரதமரின் நியமனத்திற்கு பிரதான எதிர்க்கட்சி உட்பட நான்கு அரசியல் தரப்புக்கள் கடுமையான விமர்சனத்தினை வெளியிட்டுள்ளன அல்லவா?
பதில்:- அரசியல் கட்சிகள் வெளிப்படுத்தியுள்ள தத்தமது நிலைப்பாடுகள் பற்றி சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக எனக்கு பதிலளிக்க முடியாது.
கேள்வி:- மக்கள் ஆணையற்ற, தேசியப் பட்டியல் மூலமாக வந்த ஒருவர் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார் என்ற விமர்சனத்தினை எதிரணியில் உள்ள அரசியல் கட்சிகள் முன்வைத்துள்ளமையானது ஏற்புடையதா?
பதில்:- தேசியப் பட்டியல் ஊடாக பாராளுமன்றத்திற்கு வருகை தந்த ஒருவர் பிரதமராக நியமிக்கப்பட்டமையானது சட்டத்திற்கு முரணானது அல்ல.
அத்துடன் எமது யோசனையிலும் அனைத்து தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளவல்ல ஒருவரை பிரதமராக நியமிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்விதமாக நியமிக்கப்படுபவர் பாராளுமன்றத்தினை பிரதிநிதித்துவப்படுத்துபவராக இருக்க முடியும் அவ்வாறில்லையேல் பாராளுமன்றத்திற்கு வெளியில் இருப்பவராக இருந்தால் தேசியப் பட்டியல் மூலமாக பாராளுமன்றத்திற்கு அழைக்கப்பட்டு நியமிக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளோம்.
கேள்வி:- பொதுமக்களின் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளமையை ஏற்றுக்கொள்கின்றீர்களா?
பதில்:- பொதுமக்கள் தமது கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கு அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகளின் பிரகாரம் உரித்துடையவர்கள்.
அவர்களின் நிலைப்பாடுகளை வெளிப்படுத்திய தருணங்களில் வன்முறைகள் ஏற்பட்டுள்ளன.
குறிப்பாக, மிரிஹான, ரம்புக்கன, இறுதியாக அலரிமாளிகை மற்றும் காலிமுகத்திடல் உள்ளிட்ட இடங்களில் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.
இவ்விதமான செயற்பாடுகளை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.
மேலும், அமைதியான மக்கள் போராட்டங்களின் மீது வன்முறைகள் நிகழ்ந்தமைக்கு காரணமாக இருந்தவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டு பக்கச்சார்பற்ற முறையில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு சட்டத்தின் நிறுத்தப்பட வேண்டும்.
இதனை நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம்.
கேள்வி:- 20தடவைகள் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள அரசியலமைப்பில் மீண்டும் திருத்தங்கள் செய்வது பொருத்தமானதா?
பதில்:- தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமைகளில் புதிய அரசியலமைப்பொன்றை வரைவது நடைமுறையில் சாத்தியமற்றது. ஆகவே அரசியலமைப்பில் திருத்தம் அவசியமாகின்றது.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை, சுயாதீன ஆணைக்குழுக்களின் வினைத்திறனான செயற்பாடுகள், பாராளுமன்றத்திற்கான அதிகாரங்கள் உள்ளிட்ட விடயங்களில் மாற்றங்கள் தேவையாக உள்ளன.
அரசியலமைப்பில் காணப்படும் குறைப்பாடுகள் காரணமாகவே, அதிகாரங்கள் ஒரு இடத்தில் குவிக்கப்பட்டதோடு, அரச கட்டமைப்பும் சிதைவடைந்துள்ளது.
ஆகவே அந்த நிலைமையை உடனடியாகச் சீர் செய்வதற்கு அரசியலமைப்பில் திருத்தங்கள் அவசியமாகின்றன.
அவ்விதமான திருத்தத்தினை எமது யோசனையில் முன்வைக்கப்பட்டதன் பிரகாரம் வரையறுக்கப்பட்ட காலத்தினுள் மேற்கொள்கின்றபோது நிலைமைகளை சீராக்க முடியும்.
குறிப்பாக ஜனநாயக கட்டமைப்புக்களை பரிசீலைக்குட்படுத்தி சமத்துவதற்கும் உதவுவதாக இருக்கம்.
கேள்வி:- நீங்கள் முன்வைத்துள்ள யோசனைகளை அமுலாக்காது பிறிதொரு பொறிமுறைக்கு ஆட்சியாளர்கள் செல்வார்களாக இருந்தால் சுமூகமான நிலைமைகள் ஏற்படுமெனக் கருதுகின்றீர்களா?
பதில்:- நாம் முன்வைத்துள்ள 13அம்சங்கள் அடங்கிய யோசனைகள் பல்வேறு துறைசார்ந்த நிபுணத்துவம் வாய்ந்தவர்களுடனான கலந்தாய்வுகள், மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டவையாக உள்ளது.
தற்போதைய சூழலுக்கு மிகப்பொருத்தமானதாகவே கருதுகின்றோம்.
ஆகவே அதனைவிட பிறிதொரு வழிமுறையை பின்பற்றி நிலைமைகள் மாற்றியமைக்கப்பட்டால் அது வரவேற்கத்தக்கதே.