“வடக்கு மாகாணத்தில் முப்படையினருக்குக் காணிகளை சுவீகரிக்கும் நோக்குடன் ஆளுநர் ஜீவன் தியாகராஜா கலந்துரையாடலை நாளைமறுதினம் (15) செவ்வாய்க்கிழமை நடத்துவாராக இருந்தால் அவரது அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தை நடத்துவோம்.”
– இவ்வாறு தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் காணி அமைச்சின் மேலதிக செயலர், காணி ஆணையாளர் நாயகம், காணி உரித்து திணைக்களத்தின் ஆணையாளர், நில அளவையாளர் நாயகம், இராணுவம், கடற்படை, விமானப் படை என்பனவற்றுடன், வடக்கு மாகாணத்தின் ஒவ்வொரு மாவட்டத்தினதும் காணி மேலதிக மாவட்ட செயலர்கள், பிரதேச செயலர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
காணி சுவீகரிப்பு தொடர்பில் ஆராயப்படவுள்ள இந்தக் கூட்டம் நடைபெறக்கூடாது என தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
மாவை சேனாதிராஜா
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை.சோ.சேனாதிராஜா கருத்துத் தெரிவிக்கையில்,
“வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் காணிகளைச் சுவீகரிக்கும் நோக்குடன் – அந்தக் காணிகளைப் படையினருக்கு வழங்கும் திட்டத்துடன் கூட்டம் நடைபெறுமாக இருந்தால் அதற்கு நாங்கள் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்.
அபகரிக்கப்பட்ட காணிகளை விடுவிக்கும்படியே நாங்கள் கோரி வருகின்றோம்.
நல்லாட்சியில் எமது கோரிக்கையின் பிரகாரம் வடக்கில் ஏராளமான காணிகள் விடுவிக்கப்பட்டன. அதேபோல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான இந்த ஆட்சியிலும் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்றே கோருகின்றோம்.
வடக்கில் ஆளுநர் காணிகளைச் சுவீகரித்துப் படையினருக்குத் தாரைவார்க்க நாங்கள் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்” – என்றார்.
செல்வராசா கஜேந்திரன்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் கருத்துத் தெரிவிக்கையில்,
“காணி சுவீகரிப்புக்கான கலந்துரையாடல்களை அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து ஆளுநர் நடத்துவாராக இருந்தால் ஆளுநர் அலுவலகம் உட்பட பிரதேச செயலகங்களை முடக்கிப் போராட்டம் வெடிக்கும்.
ஆளுநருடைய இந்த முயற்சியை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். படையினருக்கு ஒரு அங்குல காணியைக் கூட கொடுக்க முடியாது.
இந்த விடயம் தொடர்பாக அரசியல் தலைவர்களுக்கு தெரிவிக்காமல் தன்னிச்சையான முறையில் அதிகாரிகளை அழைத்து, அச்சுறுத்தி ,நெருக்கடிக்கு உள்ளாக்கி சம்மதம் பெறும் செயற்பாட்டை ஆளுநர் மேற்கொள்கின்றார். அது சட்டவிரோதமான செயற்பாடு.
மக்கள் பிரதிநிதிகள் இராணுவத்துக்கு காணி வழங்குவதற்கு முற்றாக எதிர்ப்பை முன்வைக்கின்றோம். அதனை மீறி அவர் செயற்படுவாராக இருந்தால் பிரதேச செயலகங்களையும், ஆளுநர் அலுவலகத்தையும் முடக்கி போராடுவதற்கு ஆளுநராகவே எங்களைத் தள்ளுகின்றார் என்று தெரிவித்துக் கொள்வதோடு போராட்டம் வெடிக்கும் என்பதையும் சொல்லிக்கொள்கின்றோம்” – என்றார்.
ந.சிறீகாந்தா
தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி ந.சிறீகாந்தா கருத்துத் தெரிவிக்கையில்,
“வடக்கில் தனியார் காணிகளை படைத்தரப்புகளுக்கும் மற்றும் அரச திணைக்களங்களுக்கும் காணிகள் தேவைப்படுகின்றன என்ற பெயரில் சுவீகரிப்பதற்கு எடுக்கப்படும் முயற்சிகளின் ஓர் அங்கமாகவே இந்தக் கூட்டம் இடம்பெறுவதாக நாங்கள் அறிகின்றோம்.
வடக்கு மாகாண ஆளுநர் நெருப்போடு விளையாடுவதற்கு முயற்சிக்கக் கூடாது. இது மக்களுடைய ஜீவாதாரப்பிரச்சினை.
காணி என்பது ஒரு மனிதரை பொறுத்தமட்டில் உணர்வுகளுடன் சங்கமித்த ஒன்று. வடக்கு மாகாண மக்கள் பல்வேறு துன்பங்கள், துயரங்களுக்கு முகம்கொடுத்துத் கொண்டு இருக்கும் நிலையில் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல இத்தகைய முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுக்கொண்டு இருக்கின்றன. இது பெரும்மக்கள் போராட்டத்துக்கு வழிவகுக்கும்.
மக்கள் அனைவரும் வீதிகளுக்கு வர வேண்டும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் எதிர்பார்கிறார்களா? என்ற கேள்வியைதான் நான் எழுப்ப விரும்புகின்றேன்.
இந்த முயற்சிகள் உடனடியாகக் கைவிடப்படவேண்டும். இது மக்களுடைய அடிப்படை உரிமைகளை சுரண்டிப் பார்க்கின்ற, சவால் விடுகின்ற ஒரு முயற்சி.
காணி சுவீகரிப்பு என்பது அரசுக்கு ஒரு நியாயமான தேவைக்காக மக்கள் நலன் கருதி சுவீகரிப்பு தேவைப்படுமாக இருந்தால் அதை நாம் புரிந்துகொள்ள முடியும். ஆனால், தூர நோக்கத்தோடு வடக்கிலே காணிகளை கபளீகரம் செய்து, அரசினுடைய பிடியை, பௌத்த சிங்கள பேரினவாதத்தின் பிடியை வடக்கிலே பல்வேறு இடங்கிளிலும் இறுக்குகின்ற நோக்கத்தோடு எடுக்கப்படுகின்ற முயற்சியாகவே இதனை நாம் பார்க்கின்றோம்.
இது இன்று நேற்று எடுக்கப்படுகின்ற முயற்சி அல்ல. கடந்த சில வருடங்களாக தொடர்ந்து பல்வேறு இடங்களில் பல முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.
நிலத்தை அளவீடு செய்ய அதிகாரிகள் வருவது மக்கள் எதிர்ப்பு காட்டுவது மக்களின் எதிர்பைக் கண்டு பின்வாங்குவது, பல சாட்டுகள் கூறி மீண்டும் அதிகாரிகள் களத்துக்கு வருவது இவையெல்லாம் பழக்கப்பட்டுப்போன சங்கதிகள்.
இவை எமக்கு ஒரு விடயத்தை சுட்டிக்காட்டுகின்றன. இலங்கைத் தீவில் தமிழ் மக்களின் உண்மையான அரசியல் அந்தஸ்து என்ன என்பதை எங்கள் மத்தியில் எவராவது இதுவரை புரிந்துகொள்ள முடியாமல், உணர்ந்துகொள்ள முடியாமல் இருந்தால் அவர்களுக்கு கூட உணர்த்தக்கூடிய விதத்திலே இந்த நடவடிக்கைகள் உள்ளன.
இவற்றுக்கு நாங்கள் நிச்சயம் முகம் கொடுப்போம். இன்றைய சூழ்நிலையில் பொருளாதார நெருக்கடிக்கு மக்கள் முகங்கொடுத்துக்கொண்டிருக்கும் நிலையிலே இவை முன்னெடுக்கப்படுமாக இருந்தால் பெரும் போராட்டம் ஒன்றுக்கு வழிவகுக்கும் என்பதை பணிவாகவும் நேர்மையாகவும் சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன்.
இந்த ஆளுநர் வடக்கை பொறுத்தமட்டிலே என்ன செய்துகொண்டிருக்கின்றார் என எமக்குப் புரியவில்லை. வடக்கின் நிலைமை அவருக்கு தெரியவில்லை. அவர் ஒரு தமிழர். ஆனால், அவர் தற்போது அரசின் ஒரு முகவராக வடக்கில் தமிழ் மக்களின் நலன்களுக்கு விரோதமாகச் செயற்படுவது ஒரு சாபக்கேடு.
ஆளுநர் தன்னை மாற்றிக்கொள்ள முன்வரவேண்டும். இல்லையெனில் அவரை இங்கிருந்து மாற்றுங்கள் என்ற கோரிக்கையை வைக்க வேண்டிய நிலை ஏற்படும்.
இந்த நிலைமை தொடருமாக இருந்தால் இந்த ஆளுநர் எமக்குத் தேவையில்லை. இவருக்கு பதிலாக நேர்மையான ஒரு சிங்களவரே காரியங்களைக் கொண்டு செல்ல முடியும். எடுபிடித் தமிழரை விட நேர்மையான சிங்களவர் எவ்வளவோ மேல் என நான் நம்புகின்றேன்” – என்றார்.