“முப்படைகளுக்கும் காணிகளை தாரைவார்க்கும் வடக்கு மாகாண ஆளுநரின் முயற்சியைக் கண்டிக்கின்றோம். இது தொடர்பில் நடத்தவுள்ள கூட்டத்தை ஆளுநர் உடனடியாக நிறுத்தவேண்டும். மீறி நடத்தினால் கடும் விளைவுகளை எதிர்கொள்ளும் வகையில் எமது போராட்டங்கள் அமையும்.”
– இவ்வாறு தமிழ்க் கட்சித் தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.
செல்வம் அடைக்கலநாதன்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர்களுள் ஒருவரும் ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்ததாவது:-
“ஆளுநரால் நாளை (15) செவ்வாய்க்கிழமை நடத்தப்படும் கூட்டத்துக்கு மக்கள் பிரதிநிதிகள் ஏன் அழைக்கப்படவில்லை? முப்படைகளையும் தனியாக அழைத்து கூட்டம் நடத்துவது நன்றாக இருக்காது. இராணுவத்தினுடைய பிரச்சினையை மாத்திரமே தீர்ப்பதற்காக இந்தக் கூட்டம் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது போல் தெரிகின்றது.
நில அபகரிப்புக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான கூட்டம் என்றால் அதை நாம் பரிசீலிக்க முடியும். ஆனால், இந்தக் கூட்டம் முப்படையினருக்கும் பொலிஸாருக்கும் காணிகளை பகிர்ந்தளிக்கும் கூட்டமாக இருந்தால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது.
ஆளுநர் இந்தக் கூட்டத்தை மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு கூட்டியிருந்தால் அது வரவேற்கத்தக்கது. ஆனால், மக்களின் பிரச்சினையை தீர்க்காமல் முப்படைகளுக்கு காணிகளை வழங்கும் கூட்டமாக இருப்பதால் மக்கள் பிரதிநிதிகள் அழைக்கப்படாமல் நடத்தக்கூடாது” – என்றார்.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்ததாவது:-
“இந்தச் செயற்பாடு அரசின் உண்மையான முகத்தைக் காட்டுகின்றது. சர்வதேச மட்டத்தில் இனங்களுக்கிடையே ஒற்றுமை நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாகப் போலியான தோற்றப்பாட்டைக் காட்டுவதற்கு ஜனாதிபதி நாடாளுமன்றில் பேச்சுக்கு அழைத்துக்கொண்டு அதேசமயம் அவருடைய தூதுவராக இருக்கக்கூடிய வடக்கு, கிழக்கு ஆளுநர்களை கொண்டு காணி சுவீகரிப்பு என்ற விடயத்தை மிகவும் நாசூக்காக செய்கின்ற உண்மை முகம் இப்போது அம்பலமாகியுள்ளது.
எம்மைப் பொறுத்தவரையில் இந்தப் பேச்சு என்ற போலி முகம் இப்படிப்பட்ட செயற்பாடுகள் உண்மைகளை மக்களுக்கு எடுத்துக்காட்டும் என நம்புகின்றோம். இந்த நடவடிக்கைகளுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து மக்களுடன் போராட்டங்களை நடத்துவோம்” – என்றார்.
ஈஸ்வரபாதம் சரவணபவன்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தருமான ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்ததாவது:-
“வடக்கு ஆளுநரின் முயற்சியை முளையிலே கிள்ளியெறியவேண்டும். இந்த மாகாணத்தின் மக்களுடன் ஆராயாமல், மக்கள் பிரதிநிதிகளை அழைக்காமல் அதிகாரிகளை வரவழைத்து அவர்களை நிர்ப்பந்தித்து முப்படையினருக்கும் காணிகளை தாரைவார்க்கும் செயற்பாட்டை ஏற்க முடியாது.
தனது பதவியை காப்பாற்றிக் கொள்வதற்கு எமது மக்களின் காணிகளை படைகளுக்கு சுவீகரித்துக் கொடுக்கும் ஆளுநரின் மிக்க கேவலமான செயற்பாட்டை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.
நாளைய கூட்டத்தை ஆளுநர் நிறுத்தாவிட்டால், மக்களின் போராட்டத்தை அவர் சந்திக்க நேரிடும் என்பதுடன் முன்னைய ஆட்சித் தலைவர் கோட்டாபய ராஜபக்ச எப்படி தப்பியோடினாரோ அதேபோன்று செல்ல நேரிடும் என்பதையும் எச்சரிக்கையுடன் சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன்” – என்றார்.