“இலங்கை வரலாற்றில் ஜே.வி.பி. நாட்டுக்குச் செய்த அநியாயம்போல் விடுதலைப்புலிகள் கூட செய்யவில்லை. ஜே.வி.பியினருடன் ஒப்பிடும்போது விடுதலைப்புலிகள் உத்தமர்கள்.”
– இவ்வாறு இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்தார்.
தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நிலைமை தொடர்பில் கருத்துக் கூறியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“ஜே.வி.பியினரின் சண்டித்தனம் காரணமாக மே 9ஆம் திகதி எமது அரசியல்வாதிகளின் வீடுகள் எரிக்கப்பட்டன. எல்லா வீடுகளும் ஒரே மாதிரி திட்டமிட்டபடி எரிக்கப்பட்டன.
வீட்டுக்குள் நுழைந்த காடையர்கள் முதலில் பாதுகாப்பு கமராக்களை உடைத்தனர். பின்னர் நீரைத் துண்டித்தனர். அடுத்து பெறுமதியான பொருள்களைக் கொள்ளையடித்தனர். இறுதியாக வீட்டுக்கும், வாகனங்களுக்கும் நெருப்புவைத்து எரித்து நாசமாக்கினர்.
ஜே.வி.பியினருக்கு இதைத் தவிர எதுவும் செய்யத் தெரியாது. அவர்கள் இலங்கை வரலாற்றில் இந்த நாட்டை அழித்து நாசம் செய்தவர்கள். அரச ஊழியர்களைக் கொலை செய்தார்கள்; அரச கட்டடங்களுக்குத் தீ வைத்தார்கள். விடுதலைப்புலிகள்கூட இந்தளவு சேதத்தை நாட்டுக்கு ஏற்படுத்தியது கிடையாது.
எமது ஆட்சியில் ஏற்பட்ட சில தவறுகள் காரணமாக நாட்டின் பொருளாதாரம் சீரழிந்தது. அதை நாம் இப்போது சீர்செய்து கொண்டு வருகின்றோம்.
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவியில் இருந்து விலகியதைத் தொடர்ந்து மிகத் திறமையானவரான ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக நியமித்துள்ளோம். அவர் வந்ததன்பின் பொருளாதாரத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதை உணர முடிகின்றது.
இன்று எரிபொருளுக்கான வரிசை இல்லை. எரிபொருள்களின் விலைகளும் கட்டம் கட்டமாகக் குறைந்து வருகின்றன. சுற்றுலாத் துறை மீண்டும் கட்டியெழுப்பப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்திடம் கடன்பெறும் முயற்சி வெற்றி பெற்றுள்ளது. 2.9 பில்லியன் அமெரிக்க டொலரைத் தருவதற்கு அந்த நிதியம் இணங்கியுள்ளது. மேலும் பல நாடுகளிடம் உதவி கோரப்பட்டுள்ளது. அந்த உதவிகளும் விரைவில் கிடைக்கும்.
இந்தநிலையில், ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது அர்த்தமற்ற ஒன்று. அதனால் எங்களது பொருளாதாரம்தான் பாதிப்படையும். பொருளாதார நிலைமை மெல்லமெல்ல தலைதூக்கும்போது நாம் எல்லோரும் ஒன்றுசேர்ந்து அதைத் தூக்கிவிட வேண்டும். தள்ளிவிடக்கூடாது. அது முழு நாட்டையும் பாதிக்கும்” – என்றார்.