ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான இந்தத் திருட்டு அரசைக் கூண்டோடு விரட்டியடிக்க வேண்டும் என்று ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் வலியுறுத்தினார்.
சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் வழங்கிய செவ்வியின் போது அவர் மேலும் கூறுகையில்,
“எமது ஆட்சியில் ஊழல், மோசடி இடம்பெறாது. ஊழல்வாதிகளுக்கு எமது ஆட்சியில் தண்டனை வழங்குவோம். இனி யாரும் ஊழல் புரிய முடியாதவாறு சட்டத்தை அமுல்படுத்துவோம்.
உள்நாட்டு உற்பத்தியை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவோம். புதிய அரசமைப்பை நாம் தயாரித்து வைத்துள்ளோம். அதை மக்கள் முன்னிலையில் சமர்ப்பிப்போம். சர்வஜன வாக்கெடுப்பு மூலம் அதை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுப்போம்.
இப்போது இருக்கும் அரசமைப்பு மக்கள் ஏற்றுக்கொண்ட அரசமைப்பு அல்ல. இது ஜே.ஆர். அவரது ஆறில் ஐந்து அதிகாரத்தைப் பயன்படுத்தி அவருக்காக உருவாக்கப்பட்டது. மக்களுக்காக உருவாக்கப்பட்டது அல்ல.
1972இல் ஸ்ரீமா உருவாக்கிய அரசமைப்பும் இப்படியான ஒன்றுதான். அதுவும் மக்களின் அனுமதி பெறப்பட்ட ஒன்றல்ல.
நாம் கொண்டு வருகின்ற அரசமைப்புதான் மக்கள் அனுமதி தருகின்ற அரசமைப்பாக இருக்கும். அது சர்வஜன வாக்கெடுப்பின் மூலமே நிறைவேற்றப்படும்.அப்படி நிறைவேற்றப்பட்டால் மாத்திரமே அது மக்கள் அனுமதி வழங்கிய அரசமைப்பாகும்.
மக்கள் இப்போது விரும்புவது புதிய ஆட்சியை. அதற்குத் தேவை நாடாளுமன்றத் தேர்தல். அதை அரசு அதை நடத்த
வேண்டும்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலின் ஊடாக தேசிய பிரச்சினையைத் தீர்க்க முடியாது. ஆனால், மக்களின் எதிர்ப்பை – எதிர்பார்ப்பை அந்தத் தேர்தலின் ஊடாக அரசுக்குத் தெரிவிக்க முடியும். அதனுடாக அரசு மக்களுக்குத் தீர்வை வழங்குவதற்குத் தள்ளப்படும்.
இந்தத் திருட்டு அரசுக்கு எமது ஆதரவை வழங்க முடியாது. நாம் ஆதரவு வழங்கினாலும் மக்களின் பிரச்சினைகளை இந்த அரசு தீர்க்காது. ஆகவே, ஒருபோதும் நாம் அரசுக்கு ஆதரவு வழங்கமாட்டோம். அதைவிட மக்களுக்குச் சந்தர்ப்பத்தை வழங்குங்கள். அவர்கள் புதிய அரசைத் தீர்மானிக்கட்டும். அந்தப் புதிய அரசின் ஊடாகத்தான் தற்போதைய பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்க்க முடியும்” – என்றார்.