“அரசுடன் சேர்ந்து பணியாற்ற வடக்கு – கிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வர வேண்டும். அப்போதுதான் பொருளாதாரத் தீர்வையும், அரசியல் தீர்வையும் நாம் விரைவில் வென்றெடுக்க முடியும்.”
– இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
ஜனாதிபதி நான்கு நாள் பயணம் மேற்கொண்டு நாளை (04) வடக்குக்கு வருகின்றார். இந்நிலையில், நாட்டின் பொருளாதாரப் பிரச்சினை, தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஒருபுறத்தில் நாட்டின் பொருளாதாரத்தை நாம் கட்டியெழுப்ப வேண்டும். அதேவேளை, மறுபுறத்தில் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை நாம் காண வேண்டும். இந்த இரண்டு பிரதான விடயங்களும் நிறைவேற வடக்கு – கிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் முழுமையான ஆதரவு மிகவும் அவசியமானது.
எனவே, இந்த இரண்டு கருமங்களையும் முன்னெடுக்கின்ற அரசுடன் சேர்ந்து பணியாற்ற தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வர வேண்டும்.
இன, மத, மொழி வேறுபாடின்றி அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒரே குடையின் கீழ் பயணித்தால்தான் பொருளாதாரத் தீர்வையும், அரசியல் தீர்வையும் நாம் விரைவில் வென்றெடுக்க முடியும்.” – என்றார்.