பங்குனியை சிறப்பிக்கும் பங்குனி உத்திர நட்சத்திரம் சைவசமயத்தவரால் பழமை தொட்டு சிறப்பான நாளாக பேணப்படுகிறது.
நாம் சில நட்சத்திரத்திற்கு சிறப்பினை தந்து விழாக்கள் எடுப்பதும், விரதம் இருப்பதும் வழக்கம், அதில் வைகாசி விசாகம், ஆடிப்பூரம், ஆவணி அவிட்டம், கார்த்திகையில் வரும் கார்த்திகை, தைப்பூசம் ஆகிய சிறப்பு நட்சத்திரங்களின் வரிசையில் வருவது பங்குனி உத்திரம் ஆகும்.
பங்குனி மாதம் பவுர்ணமியுடன் உத்திர நட்சத்திரம் சேர்ந்து வரும் தினத்தையே பங்குனி உத்திரமாகக் கொண்டாடுகிறோம்.
கங்கா மேளா, வசந்த உத்சவம், வசந்த பஞ்சமி, மஞ்சள் குளி, டோல் பௌர்ணமி என்று மற்ற மாநிலங்களிலும் பங்குனி உத்திர விரதத்தை கொண்டாடுகிறார்கள்.
இந்தத் திருநாளில்தான் மிக அதிகமான தெய்வத் திருமணங்கள் நடைபெற்றதாகப் புராணங்கள் கூறுகிறது. அதில் பார்வதி-பரமேஸ்வரர், ராமர்-சீதை திருமணம் மேலும் முருகன்-தெய்வானை, ஸ்ரீரங்கநாதர்-ஆண்டாள் முதலிய தெய்வ திருமணங்கள் பலவும் பங்குனி உத்திரத்தன்று தான் நடைபெற்றன. இதனால் பங்குனி உத்திர விரதம் திருமண விரதம் என்றும், கல்யாண விரதம் என்றும் போற்றப்படுகிறது.
தெய்வங்களின் திருமணம் மட்டுமல்லாது, பல தெய்வ அவதாரங்களும் இந்த பங்குனி உத்திரத்தில் நடந்துள்ளது.
மஹாலட்சுமி பார்க்கவ மகரிஷியின் மகளாக பூமியில் பார்கவி என்னும் பெயரில் அவதரித்தது, சுவாமி ஐயப்பனாக அவதாரம் எடுத்ததும், அர்ஜூனன் பிறந்ததும், ஶ்ரீ வள்ளி அவதரித்ததும் இந்த திருநாளில் தான்.
இதைத்தவிர முருகப் பெருமான் சுவாமிமலையில் பிரணவ மந்திரத்தை உபதேசித்ததும், ரதியின் பிரார்த்தனைக்கு இணங்க மன்மதனை சிவன் உயிர்பிழைக்க வைத்ததும், மார்க்கண்டேயனுக்காக சிவன் காலனை தன் காலால் உதைத்ததும், சுந்தரமூர்த்தி நாயனாருக்கு ஸ்ரீபரமேஸ்வரர் மணக்கோலத்தில் திருக்காட்சி தந்த தினமும் பங்குனி உத்திரத்தன்றுதான்.
இந்த நாளில் புனித தீர்த்தங்கள் எல்லாம் திருப்பதியில் உள்ள ஏழு புனித தீர்த்தங்களில் ஒன்றான தும்புரு தீர்த்தத்தில் இணைவதாக ஸ்ரீமத் பாகவதம் சொல்லுகிறது.
அதுபோல பங்குனி உத்திரம் அன்று குலதெய்வ வழிபாடு செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கூறப்பட்டுள்ளது.
நாம் நமது குலதெய்வ கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்வது மிக முக்கியமானதாகும். கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள், தங்களது வீட்டிலேயே குல தெய்வ படத்தை வழிபட குல தெய்வத்தின் அருளாசி அவர்கள் குடும்பத்துக்கு கிடைக்கும்.
பங்குனி உத்திரவிரதம் மேற்கொள்பவர்களுக்கு வரும் பிறவி தெய்வப்பிறவியாக அமையும். அதன் மூலம் ஜனன, மரண சுழற்சியில் இருந்து உயிர் விடுபட்டு முக்தி பெறும் என்பது ஐதீகம்.
பங்குனி உத்திரத்தன்று ஆலயங்களுக்கு அருகில் தண்ணீர் பந்தல் வைத்து பக்தர்களுக்கெல்லாம் மோர் மற்றும் பானகம் கொடுப்பது நற்பலனை தரும்.
இத்தினத்தில் சிவனையும், முருகனையும் திருமணக் கோலத்தில் வணங்கி வழிபட்டால், திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என நம்பப்படுகிறது. செவ்வாய் தோஷம் அகலும், கணவரின் நெடு நாள் நோய் விரைவில் குணமாகும்.
நாம் பங்குனி உத்திரத்தன்று விரதம் இருந்தும், அருகிலுள்ள கோயிலுக்கு சென்றும் நற்பலனை பெறுவோம்.
-நயினை ஆணந்தன்-