புகைப்படத் தொகுப்பு

Home ஆன்மிகம் ஆரம்பமாகவுள்ள கதிர்காம கந்தன் பாதயாத்திரை

ஆரம்பமாகவுள்ள கதிர்காம கந்தன் பாதயாத்திரை

3 minutes read

இவ்வருடம்  கதிர்காம பாத யாத்திரை ஜூன் மாதம் தொடங்குகிறது.(வருகின்ற ஜூன் மாதம் 19ம் திகதி கதிர்காம கொடியேற்ற  பாத யாத்திரையை தொடங்குகிறது.)

இவ்வருட சித்தர்களின் குரல் நண்பர்களின் யாத்திரை ஜூன் 14ம் திகதி புதன்கிழமை உகந்தையில் இருந்து தொடங்குகிறது.இலங்கை ஒரு பொக்கிஷ புண்ணிய பூமி. போகர் தொடங்கி இமயமலை கிரியா பாபாஜி வரை எத்தனையோ பல்லாயிரம் சித்த ரிஷிகள், யோகிகள், ஞானிகள்  கால் தேயத் தேய முருகனை தரிசிக்க நடந்த பாதை கதிர்காம காட்டுப்பதை பாத யாத்திரை . ஒவ்வொரு வருடமும் 15 நாட்கள் மட்டும் திறக்கப்படும்.

06/05/2023 : கன்னியாகால் நடும் நிகழ்வு
19/06/2023 : கொடியேற்றம், புனித பேழை ஊர்வலம்  ஆரம்பம்
03/07/2023 : வள்ளி அம்மன் தரிசனம்
04/07/2023 : தீர்த்தம் ( நீர்வெட்டு நிகழ்வு)

உகந்தையில் இருந்து காட்டுக்குள்ளே குமண, குமுக்கன் ஆறு, உப்பாறு, நாவலடி, யால, வள்ளியாற்று பாலம், கட்டகாமம், வீரசோலை வழியாக கதிர்காமத்தை அடைந்து இறையருள் முழுமை பெறும் பயணம்.ஆதியில் நடந்த சித்த பெரு மக்கள் இங்கே ஆறு இடங்களில் தங்கி ஆறு வகையான சக்திகளை வனத்தில் விட்டு சென்றுள்ளார்கள் என வரலாறு சொல்கிறது.

(1) முதல் நாள் தங்கும் “வண்ணாத்தி வெட்டை” என்ற கிணத்தடியில் “கருப்பண்ண சாமி” என்ற பாலாவடி கறுப்பையும், (14/06/2023 புதன்கிழமை)
(2) இரண்டாவது நாள் தங்கும் “குமுக்கன் ஆற்றங்கரையில்” வன தேவதைகளான “காளி” சக்திகளையும், (15/06/2023 வியாழக்கிழமை)
(3) மூன்றாவது நாள் தங்கும் ஆமானுஷ்ய பூமியான “நாவலடி” வனத்தில் பாதாள “பைரவ” சக்திகளையும், (16/06/2023 வெள்ளிக்கிழமை)
(4) நான்காவது நாள் தங்கும் “யாள” ஆற்றங்கரையில் “நாக” சக்திகளையும்,” (17/06/2023 சனிக்கிழமை)
(5) ஐந்தாவது நாள் தங்கும் “வள்ளியாற்று” பாலத்தில் “ஜல தேவதையின்” சக்திகளையும் கடந்து, (18/06/2023 ஞாயிற்றுக்கிழமை)
(6) ஆறாவது நாள் கதிர்காம மண்ணை அடைய நமக்குள் உள்ள “ஆறு ஆதார சக்கரங்களும் உயிர் பெற்று” மிக பெரிய யோகியாக உங்கள் உடல் மனம் தயாராகும். (19/06/2023 திங்கட்கிழமை)
மனதுக்கு அமைதி தரும் பயணம்.

பல்லாயிரம் பேர் வாழ்க்கையில் தெய்வீக  மாற்றத்தை முருக பெருமானே நேரடியாக வந்து வழிநடத்தும் பயணம்.முருகப் பெருமானின் வழித்தடத்தை ஒற்றி, அகத்தியர், புலத்தியர், காசியப்ப முனிவர், கபில முனிவர், போகர், பாபாஜி, கோரக்கர், அருணகிரிநாதர், யோகர் சுவாமிகள் உட்பட பல சித்தர்களும், முனிவர்களும், யோகிகளும், ஞானிகளும் நடந்து வந்த பாதையில் எமது பாதங்களையும் பதித்து  குமனை, யாளை, கட்டகாமம் ஆகிய காடுகளை கடந்து, ஆறு  நாட்களாக பாத யாத்திரை சென்று கதிர்காம கந்தனை தரிசிகின்றனர்.

1000 வருட பாரம்பரியமிக்க இந்த புனித பாத யாத்திரையானது ஆன்மீக பயணம் என்பதையும் தாண்டி வாழ்க்கையில் ஒரு புதிய பரிமானத்திற்கே நம்மை கூட்டி செல்கிறது.இந்தக் கதிர்காம பாதயாத்திரை, தீராத இன்னல்களையும், சொல்லொணா துயரங்களையும், பாரிய பிரச்சினைகளையும் வேண்டுதல்கள் மூலம் தீர்க்கும் அற்புதமான களமாகும்.

தீராத நோய் நொடிகள் தீர அருள் வேண்டி, குழந்தை வரம் வேண்டி, திருமண வரன் வேண்டி, நிம்மதியான வாழ்க்கை வேண்டி, மன நிம்மதி வேண்டி, கல்வி வேண்டி, தொழில் வேண்டி, பதவி உயர்வு வேண்டி, செல்வம் வேண்டி, வீடு வேண்டி, வெளிநாட்டு பயணம் வேண்டி இப்படி எத்தனையோ வேண்டுதல்களை மனம் உருகி முருகப்பெருமானிடம் கேட்கும் களம் .பக்தர்களின் பலவிதமான நேர்த்திக்கடன்களை நிறைவு செய்யும் பாதை . தனது தீராத நோய் தீர்ந்த மகிழ்ச்சியுடன் வயோதிபர்கள், தனக்கு பல ஆண்டுகளின் பின் பிள்ளை வரம் கிடைத்த பெருமிதத்தில் கைக்குழந்தையுடன் தாய்மார்கள், தடைப்பட்ட திருமணம் நிறைவேறிய நிலையில் ஆனந்தத்துடன் இளம் தம்பதிகள், குடும்ப பிரச்சினைகள் தீர்ந்த மன நிம்மதியுடன் பெரியவர்கள், மகளைக் கரையேற்றிய பேரானந்தத்துடன் பெற்றோர்கள், பரீட்சையில் சித்தியடைந்த குதூகலத்துடன் மாணவர்கள், வெளிநாட்டுப் பயணம் கைகூடிய நிலையில், தொழில் கிடைத்த உற்சாகத்துடன் இளைஞர்கள் இப்படி எத்தனையோ விடயங்களைத் தாங்கி செல்லும் பாதை .

இவை மட்டுமா? ஆன்மீக பயணம், பக்தி வழிபாடு என்பதையும் தாண்டி இன்னும் பல விடயங்கள் இப்பாதயாத்திரையில் உள்ளன. ஏழை, பணக்காரன், உயர்ந்தோர், தாழ்ந்தோர், படித்தவன், படிக்காதவன், தொழிலாளி, முதலாளி என்ற பேதமின்மை, ஏராளமான புதிய நண்பர்களின் அறிமுகம், ஒன்றாக இருந்து உணவு உண்ணுதல், அனைவருக்கும் பகிர்ந்தளித்து உண்ணுதல், ஒருவருக்கு ஒருவர் உதவி செய்யும் மனப்பான்மை, உடல் சுகாதாரம், எளிமை, ஒற்றுமை, கூட்டுப் பிரார்த்தனை, பஜனை வழிபாடு என பல நன்மை பயக்கும் விடயங்களை இந்த பாதயாத்திரை நமக்குக் கொடுக்கிறது.

இவை மட்டுமல்ல! இன்னும் பலவற்றை நாம் பார்த்து, கேட்டு, ரசித்து, உணர்ந்து. அனுபவித்துச் செல்கிறோம். காடு, ஆறு, குளம், களப்பு, வெளி, மலை, சேறு, மணல், தென்றல், கூதல்காற்று, கச்சான்காற்று, மழை, சுட்டெரிக்கும் வெயில், பனி இப்படி இயற்கை நமக்களித்த கோடை இங்கே கொட்டிக் கிடக்கிறது.

அழகிய மலைகள், வெளிகள், காடுகளைப் பார்த்து ரசித்து, காட்டு மூலிகைகளைத் தழுவி வரும் ஆறுகளில் குளித்து, சுத்தமான நல்ல காற்றை சுவாசித்து, மூலிகைகள் நிறைந்த காற்றை உடலில் படச் செய்து, புல் தரைகளிலே, ஆற்று மணலிலே, மரங்களின் கீழே படுத்து உறங்கி, காட்டிலே தேவாமிர்தமாகக் கிடைத்த உணவை அளவாக உண்டு மகிழ்ந்து, பறவைகளின் கீச்சொலிகளைக் கேட்டு, இறைவனின் நாமத்தை எந்நேரமும் உச்சரித்து, இந்த உணர்வுகளை எல்லாம் அனுபவித்து, அசைபோட்டு. அப்பப்பா எத்தனை மனநிறைவான விடயங்கள்.

நாம் வாழும் சூழலில், நகரத்தில் எள்ளளவும் எண்ணிக் கூடப் பார்க்க முடியாத அத்தனையும் இந்த பாதயாத்திரை மூலம் நமக்குக் கிடைக்கிறது. பணமும், பதவியும், புகழும், சுகமும் மட்டுமா வாழ்க்கை? அதை விட நாம் பெற வேண்டியவை எத்தனையோ உள்ளன என்பதை உணர்த்தும் யாத்திரை இது. போலியாக, நிழலாக வாழும் எமக்கு உண்மையை, நிஜத்தைக் காட்டும் இந்தப் பாத யாத்திரையின் பேரானந்தத்தை அனுபவிக்க வேண்டுமென்றால் கதிர்காமத்திற்கு ஒரு முறையாவது பாதயாத்திரை செல்ல வேண்டும்.

மொத்தத்தில் ஒரே வார்த்தையில் சொன்னால் முருக பெருமானே நேரடியாக பயணத்தில் அனைவரையும் அழைத்து செல்கிறான். இது மட்டும் சத்தியம்.எல்லாம் அவனுக்கே வெளிச்சம்.இதுதான் இந்த பாத யாத்திரையின் மூல ரகசியம். ஒரு காடுகளையும் கடக்கும் போது, ஒவ்வொரு இரவும் ஒவ்வொரு இடத்திலும் தங்கும் போதும், அங்குள்ள பிரபஞ்ச சக்தி, தேவதா சக்தி நம் உடலில் மாற்றத்தை ஏற்படுத்தும். முறையாக இந்த ரகசியங்களை எல்லாம் உணர்ந்து பயணியுங்கள்.

ஓம்-நமசிவாய-சரவணபவ-சிவாயநம-ஓம்
ஓம்-நமசிவாய-சரவணபவ-சிவாயநம-ஓம்
ஓம்-நமசிவாய-சரவணபவ-சிவாயநம-ஓம்

மேலதிக தகவல்களுக்கு,
தலைவர் – ஆதித்தன் (+94 77 313 8048)
துணைதலைவர் – மனோகரன் (+94 77 119 2223)
இது சுற்றுலா பாதை அல்லயாத்திரை

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More