தொண்டைமானாற்றிலுள்ள ‘செல்வச்சந்நிதி’ எனும் தலம் அதற்குரிய பக்திக் கவர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு நோக்கும் பொழுது அதிகம் ஆராயப்படாத ஒரு தலமாகவேயுள்ளது.
இலங்கையின் சைவக்கோயில்கள் பற்றிய முக்கிய ஆராய்ச்சிகள் சமூக அதிகாரமுடையோரின் கோயில்களையே பெரிதும் சுற்றி நின்றுள்ளன. இது மனித இயல்பின் பால்பட்டதே.
ஒரு குறிப்பிட்ட கோயிலோடு தொடர்புடையவர்களின் சமூக அதிகாரம், உயரிடச் செல்வாக்கு என்பனவற்றைக் கொண்டே அக்கோயிலுக்கு வெகுஜனத் தொடர்பு ஊடகங்களான பத்திரிகை வானொலியிற் கிடைக்கும் முக்கியத்துவம் தீர்மானமாகின்றது.
செல்வச்சந்நிதி அத்தகைய உயர் செல்வாக்கு மட்டத்தினுள் வரவில்லை. அது பெரும்பான்மையும் அடிநிலை மக்களிடையே தான் பக்தி ஈர்ப்பினை கொண்டுள்ளது.
இது மாத்திரமல்லாது சந்நிதியின் கோயிலொழுகு முறையில் தனிமனிதக் கொடைகள் பிரபல்யப்படுத்தப்படும் முறைமைகளோ அல்லது தனிமனித மேலாண்மை மேலோங்கத் தக்க ஒரு முகாமைச் சாத்தியப்பாடோ இல்லை. இது இக்கோயிலின் சமூகவியலடிப்படையில் முக்கியமான ஓர் அம்சமாகும்.
செல்வச்சந்நிதி பற்றிய விரிவான ஆய்வு யாழ்ப்பாணத்துத் தமிழ்ச் சைவ மரபின் சில முக்கிய இயல்புகளை – இதுவரை வற்புறுத்தப்படாத முக்கிய இயல்புகளை – வெளிக்கொணர உதவும். சந்நிதி ஆகம வழிபாட்டு முறைமையினைக் கொண்டதன்று.
ஆகம வழிபாட்டிற் காணப்படும் பல அம்சங்கள் இன்று அங்கும் இடம் பெறத் தொடங்கியுள்ளனவெனினும் (உருத்திராபிஷேகம் போன்றவை) அடிப்படையில் அது தனக்கேயுரிய சில சிறப்பான வழிபாட்டு முறைகளைக் கொண்டதாகும். இச்சிறப்பு முறைமைகளில் ஆகம வழிபாட்டு முறைமை தமிழ்நாட்டிற்கு வருவதன் முன்னர் காணப்பட்ட சில பூர்வீகப் பண்புகளைக் காணலாம்.
இன்னொரு மட்டத்திற் பார்க்கும் பொழுது சந்நிதியில் நாட்டார் நிலை’ மத வழக்காறுகள் பலவற்றைக் காணலாம்.
தமிழ்ப்பண்பாட்டின் செந்நெறி முறைமையும் நாட்டார் நெறி முறைமையும் முருக வணக்கத்தில் இணைந்து நிற்பது தெரிந்ததே. அத்துடன் வடமொழிக் கலப்பும் இவ்வழிபாட்டில் வந்துவிட்டது.
அக் கலப்பினைத் திருமுருகாற்றுப் படையிலே காணலாம்.
செல்வச்சந்நிதி வழிபாட்டு முறைமையில் வடமொழிக் கலப்புக்கு முற்பட்ட நிலையினை இப்பொழுதும் பிரித்தறியக் கூடியதாகவுள்ளது.
சந்நிதி பற்றிய ஆய்வில் முக்கிய இடம்பெற வேண்டியது அதனைத் தமது மிக முக்கிய வழிபாடு தலமாகக் கொள்வோருடைய சமூகவியற் பண்புகளாகும்.
(இவ்வேளையில் “அடியார்கள்” எனும் பதத்தை நான் இங்கு பிரயோகிக்க விரும்பவில்லை. ஏனெனில் அடியார் எனும் இக்கருதுகோள் வைதீகப் பக்தி எழுச்சியுடன் வந்த ஒரு எண்ணக்கருவாகும்) இவர்களுக்கும் கோயில் பொறுப்பாளர்களுக்குமுள்ள உறவு பற்றி ஆராய்தல் வேண்டும்.
இக்கட்டத்திலேதான் இக்கோயிற் பூசகர்களின் தனித்துவமான பண்புகள் நன்கு தெரியவரும். இக்கோயிற் பூசகர்களின் அடிப்படையான அணுகுமுறை இங்கு முக்கியமாகும். இங்கு நடக்கும் பூசை முறைமையை நோக்கும் பொழுது இவர்கள் தங்களைக் “கும்பிடுபவர்களுள் முன் நிற்போர் ஆகக் கருதிக் கொண்டே கிரியைகளைச் செய்கின்றமை தெரியவரும்.
செல்வச்சந்நிதியின் பூசகர்களாக உள்ளவர்கள் தொண்டைமானாற்றைச் சேர்ந்த முன்னொருகால் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த குடும்பத்தினர்.
இவர்கள் இப்பொழுது மச்சமாமிசம் உண்ணாத ஆசார சீலராய் உள்ளனர். குறிப்பிட்ட அப் பரம்பரையின் ஆண் வழியினருக்குக் கோயில் உரிமை உண்டு.
அடுத்து சந்நிதியை தமது உயர் வழிபாட்டுத் தலமாக (முறைப்பாட்டுத் தலமாக துயர் களை தலமாக) கொண்டு கும்பிடுபவர்களின் அடிப்படை மனநிலையும் சமூக உளவியலும் நின்று ஆராயப்படல் வேண்டும்.
அதாவது சந்நிதியிற் பெறப்படும் “மத அனுபவம்” யாது? அது மற்றைய வழிபாட்டிடங்களிற் காணப்படுவதிலிருந்து எவ்வகையில் வேறுபடுகின்றது? என்பன போன்றவற்றை ஆழமாக ஆராய்தல் வேண்டும்.
அப்பொழுது தான் சந்நிதியின் முக்கியத்துவம் புலனாகும்.
சந்நிதியிற் பெறப்படும் “அனுபவம்” சமூக நிலையுடன் எவ்வாறு தொடர்பு கொண்டுள்ளது என்பது தெளிவாக்கப்பட வேண்டும். சமூக உருவாக்கத்தை அறிய முனையும் பொழுது அச்சமூகத்தின் மத அனுபவம் பற்றிய ஆய்வும் முக்கியமாகின்றமை தெரிந்ததே.
செல்வச்சந்நிதி யாழ்ப்பாணக் குடாநாடு முழுவதற்குமான கோயிலெனினும் அதன் பிரதானமான “ஈர்ப்பாளர் வட்டம்” அது இடம் பெற்றுள்ள தொண்டைமானாறும், கிழக்கே அம்பன், குடத்தனை, நாகர் கோவில், துன்னாலை, கரவெட்டி, பருத்தித்துறை, வதிரி, உடுப்பிட்டி, சக்கோட்டை, இன்பருட்டி, பொலிகண்டி, வல்வெட்டித்துறை ஆகிய கிராமங்களும் மேற்கே , பலாலி, மாதகல், மயிலிட்டி முதலாம் கிராமங்களும், தென் மேற்கே கதிரிப்பாய், இடைக்காடு, பத்தமேனி, அச்சுவேலி முதலாம் கிராமங்களுமாகும்.
இக்கட்டத்தில் ஏற்கனவே குறிப்பிடப்பெற்ற ஓர் உண்மையை வலியுறுத்தல் வேண்டும். சந்நிதியின் வழிபடுவோர் வட்டம் மேனாட்டு மயப்படுத்தப்படாத ஒரு வட்டமே.
இது பெரும்பான்மையும் அடி நிலைச் சமூக மட்டமேயாகும்.
மேனாட்டு மயப்பட்ட வளர்ச்சியையுடையவர்களும் இங்கு வரும் பொழுது மேனாட்டு மயப்பாட்டின் சின்னமான விழுமியங்களையும், நடைமுறைகளையும் முதன்மைப்படுத்துவதில்லை.
கோயிலொழுகு முறையின் அடிப்படையான, ஆகம இறுக்கமற்ற, நெகிழ்ச்சியும் வழிபடுவோரின் மனநிலை நெகிழ்வும் இணையும் பொழுது, முற்றிலும் தனித்துவமான ஒரு அனுபவச் சூழல் இங்கு ஏற்படுகின்றது.
சந்நிதியின் சிறப்பம்சங்களாக நான்கினைக் குறிப்பிடலாம். முதலிரண்டைப் பற்றி ஏற்கனவே குறிப்பிட்டாயிற்று. அவையாவன.
1. இக்கோயிலின் சடங்கு முறைமைகள்
2. வழிபடுவோரின் மனப்பாங்கும்
நடைமுறையும்
இவைபற்றி சில முக்கியமான அம்சங்களுண்டு.
இக்கோயிலின் சடங்கு முறைமை மிக முக்கியமானது. எப்பொழுதும் மதம் என்பது சடங்கும் அச் சடங்குக்கு அடிப்படையான ஐதீகமும் இவற்றின் பாலுள்ள நம்பிக்கையுமேயாகும்.
இம் மூன்றும் ஒரு குறிப்பிட்ட உலக நோக்கை வளர்க்கும். முதல் மூன்றுக்கும் சமூக அமைப்புக்கும் தொடர்புண்டு.
சந்நிதி கோயிலின் பூசைமுறை பிராமணிய முறையைச் சாராதது. அக்கோயிற் பூசையிலும் பல்வேறு சடங்குகளிலும் இக்கோயில் பற்றிய பல ஐதீகங்கள் அடிப்படையாய் அமைவதைக் காணலாம்.
உதாரணமாக பூசை முடிவில் பூசகர் மணி ஆகியவற்றை வைத்துத் தானே முதன் முதலிற் கும்பிடுவதை எடுத்துக் கூறலாம். இது இக்கோயிலின் தோற்றம் பற்றிய கதைகளோடு தொடர்புடைய ஒரு சடங்காகும்.
சந்நிதியின் ஐதீகங்களையும் சடங்குகளையும் அவதானிக்கும் பொழுது கதிர்காமத்திற்கும் சந்நிதிக்கும் கற்பிக்கப்பட்டுள்ள உறவுகள் தெரியவரும்.
கதிர்காமத் திருவிழாவுக்கு முதல் நாள் முருகன் இங்கிருந்து கதிர்காமஞ் செல்லுவதாகவும் அங்கு தீர்த்தம் முடிந்ததும் இங்கு வருவதாகவும் சொல்லப்படும் கிரியைகள் மிக முக்கியமானவையாகும்.
வழிபடுவோரின் மனப்பாங்கு நடைமுறையில் சந்நிதிக்கான நேர்த்திக்கடன் முறை மிக முக்கியமானதாகும்.
காவடி எடுத்தல், குழந்தைகளை விற்றுவாங்கல், மொட்டையடித்தல், மாவிளக்கு எரித்தல் ஆகியன உண்டு. இக்கோவிலின் முக்கிய நடைமுறை களில் ஒன்று இங்கு நடைபெறும் அன்னதானமாகும்.
இக்கோயில் பற்றிய நேர்த்திக்கடன்களுள் அன்னதானமும் ஒன்று. இக்கோயிலுக்கு வரும் மரபுநிலை வழிபடுவோர் அன்னதானச் சோறு சாப்பிடுவதை வழிபாட்டில் ஓரம்சமாகவே கொள்வதுண்டு.
அன்னதானம் வணக்க முறையாகவே இங்கு தொழிற்படுகின்றது.
அன்னதானத்தின் சமூக பொருளாதார முக்கியத்துவத்தை நோக்குதல் வேண்டும். ஒரு நிலையில் இது ‘குழுநிலை உணவுப் பகிர்வினைக் குறிக்கும்.
இன்னொரு மட்டத்தில் உபரிச்செல்வத்தைக் குழுமத்துக்குப் பயன்படும் முறையில் செலவு செய்வதையும் குறிக்கும்.
மூன்றாவதாகக் குறிப்பிடப்பட வேண்டிய சந்நிதியின் சிறப்பம்சம் இங்கு காணப்படும் மடங்களாகும்.
தீராநோய் தீர்க்கும் மருத்துவனாக சந்நிதியானைக் கொள்ளும் நம்பிக்கையும் அன்னதான நேர்த்திக்கடன் முறைமையும் இங்கு மடங்களின் தோற்றத்துக்கும் தொடர்ச்சிக்கும் காரணமாக அமைகின்றனவெனலாம்.
பல்வேறு ஊர்களைச் சேர்ந்தவர்கள், பல்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள் மடங்களைக் கட்டி அவற்றின் நிருவாகத்துக்கு ஏற்ற ஒழுங்குகளைச் செய்துள்ளனர்.
பூசகர் குடும்பங்களைத் தவிர இங்கு நிலையான ஒரு சனத்தொகை காணப்படுவதற்கும் மடங்களே காரணமாகும். தத்தம் குடும்பங்களிலிருந்து பிரிந்தவர்களும் பிரிக்கப்பட்டவர்களும் மடங்களைத் தமது வதிவிடமாகக் கொண்டிருந்தமை ஒரு முக்கியமான உண்மையாகும்.
மடங்களற்ற சந்நிதியைக் கற்பனை பண்ணக் கூட முடியாத அளவுக்கு மடங்கள் சந்நிதியின் ஓரம்சமாகவுள்ளன.
சந்நிதியின் மிக முக்கியமான ஆனால் விதந்து காணப்படாத ஒரு சிறப்பம்சம், அது யோகியர் பலரின் தங்குமிடமாக இருப்பதேயாகும்.
கிராம வீதிகளில் காணப்படும் சாதாரண சாமியார் முதல் யோக சாதனைகளை புரியும் ஜேர்மன் சாமியார், ஆணைக்குட்டிச் சாமியார் வரை பல யோகியர் இங்கு காணப்படுகின்றனர்.
சந்நிதி கோயிலின் அன்றாடப் பூசை முறைகளிற் பங்கு கொள்ளாத இப்பெரு யோகியர் பலர் செல்வச்சந்நிதி அளிக்கும் சூழலைத் தமக்கு ஏற்ற இடமாகக் கொண்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்துச் சித்தர் பரம்பரைக்கும் சந்நிநிதிக்குமுள்ள தொடர்பினை ஆராய்தல் வேண்டும்.
செல்வச்சந்நிதியின் சிறப்பம்சங்களை ஆராய முனையும் பொழுதுதான் இதன் பெயரின் அசாதாரணத் தன்மை புலனாகின்றது.
தமிழ்ச்சைவ மரபில் பெரும்பாலும் கோயில்களின் பெயர்கள் இடத்தின் பெயரையும் தலமூர்த்தியின் பெயரையும் கொண்டிருக்கும். ஆனால் இங்கோ செல்வச்சந்நிதி என்று மாத்திரமே பெரிதும் வழங்கப்படுகிறது.
“தொண்டைமானாற்றுச் செல்வச் சந்நிதி” என்னும் மரபும் இல்லையென்றே கூற வேண்டும். அது போல “சந்நிதி முருகன்” என்றும் விதந்தோதப்படுவதில்லை.
“சந்நிதியான்” என்றே குறிப்பிடப்படுவதுண்டு.
“ஆற்றங்கரையான்” எனும் மரபுண்டு என்பதை இங்கு குறிப்பிடல் வேண்டும். ஊர்ப்பெயரையும் உறையும் தெய்வத்தின் பெயரையும் குறிப்பிட வேண்டாத அளவுக்கு முக்கியத்துவம் பெற்றுள்ள “சந்நிதி” என்ற இப்பெயரின் கருத்தை அறிவது அவசியம். ‘சந்நிதி’ என்னும் சமஸ்கிருதச் சொல் சம்+நி+தி என நிற்பது இதன் கருத்து.
1. அண்மையில் இருப்பது, அண்மை நிலை
2. முன் நிற்றல்
என்பனவாகும்.
காலக்கிரமத்தில் தெய்வம், குரு, பெரியோர் முன்நிற்பதை ‘சந்நிதி’, ‘சந்நிதானம்’ என்பன குறித்தது. எனவே, ‘சந்நிதி’ என்பது முருகன் முன் நிற்றலைக் குறிக்கின்றன.
‘செல்வச் சந்நிதியில்’ செல்வம் என்ற அடைமொழி முருகனையே செல்வமாகவும், அவன் தருவனவற்றைச் செல்வமாகவும், அவனைப் செல்வத்தைப் பெறுவதற்கான வழியாகவும் கொள்ளும் அர்த்தங்களும் மனநிலைகளும் அதிலே தொனிக்கின்றன.
கோயில்களிற் “சந்நிதி”கள் உண்டு. இங்கு “சந்நிதி”யே கோயிலாகவுள்ளது. செல்வச்சந்நிதி ஓர் அசாதாரண பெயர். செல்வச் சந்நிதி ஓர் அசாதாரணமான கோயில்.
பேராசிரியர் கா.சிவத்தம்பி