ந ம்முடைய தத்துவத்தில் தன்னைத்தவிர தனதெல்லாவற்றையும் நீக்கிய பிறகு மிஞ்சுவதெதுவோ அதுவே ஆத்மா (ஆன்மா) எனப்படுகிறது. ஆத்மா , உயிர் இரண்டும் ஒரே விஷயத்தைக் குறித்தாலும் , மனித உயிரினத்தின் உயர்வு கருதி புனிதத்தன்மை மிக்க வழக்காகவும் ‘ஆத்மா’ பயன்படுத்தப்படுகிறது.
ஆன்மீத் தொடர்புடைய சொல்லாக, தத்துவ வழக்காக சிக்கலான பொருள்பட – பெரும்பாலும் உயிர் , மனதைக் குறித்து நீட்சியடைந்த பொருளில் இன்றைக்கு இருப்பினும், இது மிக மிக எளிமையான மூலத்திலிருந்து உருவாக்கப்பட்ட, அழகான தமிழ்ச்சொல்லாகும்.
அகத்துமன் – என்ற தமிழ்சொல்லே திரிந்து “ஆத்மா” ஆனது. அகம்,மனம் என்ற இரண்டுச் சொற்களின் கூட்டாக … ‘உள்மனசு’ என்ற பொருள்பட அமைக்கப்பட்டதே ‘அகத்துமன்’ ஆகும்.
* அகத்துமன் > ஆத்மன் > ஆத்மா.
அகம் என்றால் என்ன?
* உள்ளமே அகம்.
* உள்ளிருப்பது அகம்.
* உள்ளுணர்வைக் குறிப்பது அகம்.
* உங்களின் உணர் வடிவம் அகம்.
( அகம் = inner being/ inner soul).
மன் – என்பது என்ன?
மன் : ஒரு எளிய மூல சொல் – இது மிகவும் சிக்கலான அர்த்தங்களைக் குறிக்கிறது.
* எண்ணமே மனம்.
* சிந்தையே மனம்.
* ஞாபக அடுக்குகளே மனம்.
மனம், மனிதன் ஆகிய உயரிய சொற்கள் மன் – னிலிருந்தே பிறந்தவை. மனம் – என்னும் சிந்திக்கும் திறன் அடிப்படையிலேயே மனிதன் – என்ற பெயரைத் தந்ததும் ‘மன்’ – என்ற மூலமே!