இந்து மதத்தில் முழு முதற் கடவுளாக போற்றப்படுபவர் விநாயகப் பெருமான். இவர் தடைகளையும், துன்பங்களையும் நீக்கி, அதிர்ஷ்டம், வெற்றி, ஞானம், செல்வம் ஆகியவற்றை தரக் கூடியவர் என்பதால் பலரும் இவரை விருப்பமுடன் வணங்குவது உண்டு. விநாயகரை வழிபட்ட பிறகு தான் மற்ற தெய்வங்களை வணங்க வேண்டும். எந்த ஒரு காரியத்தையும் துவக்க வேண்டும் என சொல்லி வைத்துள்ளனர். விநாயகர் மிக எளிமையான கடவுள் என்றாலும் அவரின் அருளை முழுவதுமாக பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
விநாயகரின் அருளை பெற…
விநாயகரின் அருளை முழுவதுமாக பெற வேண்டும் என நினைப்பவர்கள் வீட்டில் விநாயகரின் படம் அல்லது சிலையை வைத்து தினமும் வழிபட்டு வர வேண்டும். தினமும் விநாயகர் வணங்கி, வழிபட்டு வந்தால் அவர் பாதுகாப்பு, ஞானம், அதிர்ஷ்டம் ஆகியவற்றை நமக்கு வழங்குவார். மிகவும் மென்மையான, சுத்தமான துணியை வைத்து விநாயகரின் படம் அல்லது சிலையை தினமும் சுத்தப்படுத்த வேண்டும். விநாயகரின் அடையாள குறியீடுகளை உடன் வைத்திருப்பது சிறப்பு.
தினமும் செய்ய வேண்டியவை:
விநாயகரின் உள்ளம் மகிழும் படி தினமும் வாசனையான மலர்களால் அலங்கரித்து, அருகம்புல் சாற்ற வேண்டும். மிகவும் சுத்தமான இடத்தில், மரியாதையுடன் அவரது படம் அல்லது சிலையை அலங்கரித்து வைக்க வேண்டும். பக்தியுடன் நம்மால் என்ன முடிகிறதோ, அதை அவருக்கு நைவேத்தியமாக படைத்து வழிபடலாம். விநாயகரை எந்த நாளிலும், எந்த நேரத்திலும் வழிபடலாம். ஆனால் சதுர்த்தி, புதன்கிழமை போன்ற நாட்களில் அவரை வழிபடுவது அவரின் அருளை எளிதில் பெற்றுத் தரும்.
இது தான் ரொம்ப முக்கியம் :
விநாயகரிடம் மட்டுமின்றி மற்ற தெய்வங்களிடமும் எதையும் வேண்டும் என கேட்காமல், இறைவனின் அருள் மட்டும் போதும். உன்னை வழிபட வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி என்று மட்டும் தான் தெரிவிக்க வேண்டும். அது மட்டுமின்றி, நமக்கு நெருக்கமானவர்களிடம் அமர்ந்து எப்படி மனம் விட்டு பேசுவோமோ, அதே போல் தெய்வத்திடமும் மனம் விட்டு பேச வேண்டும். இது கடவுளுடன் மிக விரைவில், ஒரு தெய்வீக பந்தத்தை ஏற்படுத்தும். விநாயகருக்கு எந்த பூ கிடைக்கிறதோ அதை வைத்து, அருகம்புல் வைத்து, சிறிய அகல் விளக்கு ஏற்றி வைத்து வழிபட்டாலும் கூட போதும்.
விநாயகர் மந்திரம் :
“ஓம் கம் கணபதயே நமஹ” என்ற சக்தி வாய்ந்த மந்திரத்தை தினமும் சொல்லி வந்தாலே விநாயகரின் அருள் கிடைத்து விடும். விநாயகரை வழிபடும் போது மிக முக்கியமானது நம்பிக்கையும், பக்தியும் தான். எதையும் எதிர்பார்க்காமல் உண்மையான பக்தியுடனும், நம்பிக்கையுடனும் தன்னை வழிபடும் பக்தர்களுக்கு வேண்டிய அனைத்தையும் விநாயகர் வாரி வழங்குவார். பூ, நைவேத்தியம் படைத்து, தினசரி பூஜை செய்ய முடியாவிட்டாலும் நம்பிக்கை மற்றும் அன்புடன் விநாயகரை மனதார நினைத்து, அவரது நாமங்களை சொன்னாலே அவர் மனம் இறங்கி அருளை வழங்குவார்.
விநாயகர் அருள் துணை நிற்கும் :
நாம் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றிகரமாக நல்லபடியாக முடிவதற்கு வழிகாட்டக் கூடியவர் விநாயகர். மனதிற்கு மகிழ்ச்சியையும், அமைதியையும் தரக் கூடியவர் இவரே. அவர் எந்த காரியத்தை துவங்கினாலும் முதலில் விநாயகரை வழிபட்டு விட்டு, அவரது ஆசியுடனேயே அனைத்து காரியங்களையும் செய்ய வேண்டும். செல்வம், ஆரோக்கியம், வெற்றி என அனைத்திலும் விநாயகரின் அருள் நமக்கு கிடைத்துக் கொண்டே இருக்கும். விநாயகரின் அருள் நமது வாழ்க்கையின் அங்கம் என்பதால் தினமும் அவரை மனதார நினைத்து வழிபடுவதால் பல விதமான சோதனைகள், கஷ்டங்கள் ஆகியவற்றில் இருந்து விடுபட்டு, சாதனைகள் பல செய்வதற்கும், மனதில் அமைதியும், அனைத்து விதமான நன்மைகளும் பெறுவதற்கு விநாயகரின் அருள் துணை செய்யும்.