தனி வாழ்க்கை, மண வாழ்க்கை என இரு நிலைகளில் மனிதன் வாழலாம். இதை துறவறம், இல்லறம் என்பார்கள். எல்லோருக்கும் துறவியாக வாழும் தகுதி இருப்பதில்லை. எளிமை, அடக்கம், துாய்மை, ஒழுக்கம் போன்ற பண்புகள் துறவுக்கு அவசியம். உணவு, உடையில் எதிர்பார்ப்பு இருப்பது கூடாது. இருப்பதை ஏற்க வேண்டும்.
கடவுளுக்காக தன்னையே அர்ப்பணிக்க தயாராக இருப்பவனே உண்மையான துறவி. லட்சத்தில் ஒருவருக்கே துறவியாகும் தகுதி இருக்கும். மற்ற அனைவரும் திருமண வாழ்வில் ஈடுபடுவதே தர்மம்.
பெண் இல்லாத வாழ்க்கை வாளி இல்லாத கிணற்றுக்குச் சமம். அதன் தண்ணீர் யாருக்கும் பயன் தராமல் பாசி படிந்து விடும்.
திருமணம் இல்லாவிட்டால் வாழ்வு முழுமை பெறாது. திருமணமானவருக்கு சமூகத்தில் கிடைப்பது போல திருமணம் ஆகாதவருக்கு யாரும் மரியாதை கொடுப்பதில்லை. 30 வயதில் பிரம்மச்சாரியாக இருப்பவருக்கு வாடகைக்கு வீடோ, அறையோ கிடைப்பது கடினம்.
இந்த வயதில் திருமணமாகாத பெண்களைக் காண்பது அரிது. அப்படி இருந்தாலும் அவர்களை சமூகம் புறக்கணிக்கும். இதனாலேயே படிப்பு முடிந்தவுடன் திருமண பந்தத்தை நாடுகிறார்கள்.
ஆண்கள் 25 வயதிலும், பெண்கள் 23 வயதிலும் திருமணம் செய்வது அவசியம். எதிர்பாலின கவர்ச்சி, உடல் சார்ந்த தேவை இருந்தாலும் திருமணத்திற்கான காரணம் பல உள்ளன.
* வாழ்வில் பிடிப்பு உண்டாகும்.
* பொறுப்பின்மை என்ற நிலை மாறி குடும்பஸ்தர் என்ற நிலை உயரும்.
* புதிய உறவுகள், சமூக அங்கீகாரம் உண்டாகிறது.
* வம்சத்தின் தொடர்ச்சியாக நல்ல சந்ததிகள் உருவாகிறது.
* தனியாக இருப்பதை விட அதிக பாதுகாப்பு உணர்வும், நிம்மதியும் கிடைக்கும்.
* தொழில், உறவு, நட்பு என பலவழியில் ஏற்படும் மன அழுத்தம் குறையும்.
* அந்தரங்கம், குறிக்கோள், விருப்பு, வெறுப்பு என ரகசியங்களை வெளிப்படையாக பகிர துணைவர்/ துணைவியால் மட்டுமே முடியும்.
மணவாழ்க்கை அமைந்தாலே வாழ்வில் பிரச்னைகள் ஏற்படுவதில்லை. இதைத் தான் ‘இல்லறமே நல்லறம்’ என்கிறோம்.
தனித்திருக்கும் கடவுளை ‘உக்கிர தெய்வம்’ என்றும், ஜோடியாக உள்ளவர்களை சாந்த தெய்வம் என்றும் சொல்கிறது ஹிந்து மதம். தேவாரப் பாடலை பாடிய ஞான சம்பந்தர்,
‘மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலை
கண்ணில் நல்லதுறும் கழுமல வளநகர்ப்
பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே”
என சிவனும், பார்வதியும் இணைந்த கோலத்தை போற்றுகிறார்.
உமா மகேஸ்வரர், லட்சுமி நாராயணர், சீதாராமர் என தெய்வங்களை மனைவியின் பெயரோடு சேர்த்தே அழைக்கிறோம்.
‘இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை’
என்கிறது திருக்குறள்.
நல்ல மனைவி வாய்த்து விட்டால் அந்த குடும்பத்தில் இல்லாதது என்ன… எல்லா நன்மைகளும் ஒருசேர இருக்கும் என்கிறார் திருவள்ளுவர்.
‘இல்லறம் அல்லது நல்லறம் அன்று’ என்கிறார் அவ்வைப்பாட்டி. இருமனம் இணையும் திருமணத்தால் அன்பு செலுத்துதல், விட்டுக்கொடுத்தல், உறவுகளை மதித்தல் போன்ற நற்பண்புகள் உண்டாகின்றன. குடும்பமாக வாழ்பவன் தெய்வ நிலையை அடைகிறான்.