புகைப்படத் தொகுப்பு

Home ஆன்மிகம் மாசி மகத்தில் புனித நீராடினால் பாவங்கள் தீரும் என்பது உண்மையா?

மாசி மகத்தில் புனித நீராடினால் பாவங்கள் தீரும் என்பது உண்மையா?

4 minutes read

மாசி மகம் அன்று கோவில் குளங்கள், புனித தீர்த்தங்கள், புனித நதிகள், கடல் போன்றவற்றில் புனித நீராடினால் பல ஜென்ம பாவங்கள் தீரும். நன்மைகள் அதிகரிக்கும் என்கிறார்கள். இந்த நாளில் அனைத்து நீர் நிலைகளிலும் கங்கை உள்ளிட்ட புண்ணிய நதிகள் எழுந்தருளி இருப்பதாகவும் சொல்கிறார்கள்.

மாசி மகத்தன்று புனித நீரானால் எப்படி பாவங்கள் தீரும்? இந்த நாளுக்கு மட்டும் அப்படி என்ன சிறப்பு? இந்த குறிப்பிட்ட நாளில் புனித நீராடினால் பாவங்கள் தீரும் என்பது உண்மை தானா? என்பதில் பலரும் சந்தேகம் உள்ளது. அதற்கான விளக்கங்கள் இதோ.

மாசி மகத்தில் நீராடினால் பாவம் தீருமா?

மாசி மகத்தன்று புனித நீராடினால் பாவங்கள் தீரும் என நம்பப்படுகிறது. இதனால் பலரும் புனித நீராட கும்பகோணம் மகாமகம் குளத்திற்கும், மற்ற புனித நதிகள்ல கடலுக்கு செல்கிறார்கள். ஆனால் இந்த நாளில் புனித நீராடினால் உண்மையாகவே பாவங்கள் தீரும்? இது உண்மை தானா? என்ற சந்தேகம் இருக்கும். மாசி மகத்தில் புனித நீராடினால் பாவம் எப்படி தீரும் என்பதற்கான விளக்கத்தை வாங்க தெரிந்து கொள்ளலாம்.

குரு சந்திர யோக நாள் :

நட்சத்திரங்கள் இருபத்தி ஏழு. ராசிகள் 12. இந்த 27 நட்சத்திரத்தில் 10வது நட்சத்திரம், (கர்ம நட்சத்திரம்) மகம். பதினோராவது ராசி கும்ப ராசி. மகம் நட்சத்திரத்தில் சந்திரன் இருக்க, கும்ப ராசியில் இருந்து சூரியன் சந்திரனை பார்க்கும் காலமே புனிதமான “மாசி மகம்” உற்சவமாகக் கொண்டாடப்படுகிறது. குரு, சந்திரனை பார்ப்பதால் மிகப் பெரிய குரு சந்திர யோகம் ஏற்படுகின்றது. கால புருஷனுக்கு 5 வது ராசியான சிம்ம ராசி பூர்வ புண்ணிய ராசியாகும். சூரியன் ஆன்மா. சந்திரன் மனம். உடல் என்றும் சொல்வார்கள். இந்த மாசி மகத்தில் நீராடுவதால், நீருக்கு காரணமான சந்திரன் மூலமாக, உடல் தூய்மையும், சூரியன் மூலமாக ஆன்ம தூய்மையும் கிடைக்கிறது. சந்திரன், சிம்ம ராசியில் கேதுபகவானின் மகம் நட்சத்திரத்தில் இருக்கும் பொழுது இந்த மாசி மகம் வருவதால், இந்த நீராட்டம் செய்கின்ற பொழுது நம்முடைய கர்ம வினைகள் தீர்த்து விடுகின்றன.

நல்வாழ்வைத் தரும் மாசி மகம் :

மாசிமக காலத்தில் புனித நீராடுவதும், புண்ணிய யாத்திரை செய்வதும், புனித கோயில்களைத் தரிசிப்பதும், பாவங்களைப் போக்கும். புண்ணியங்களை அதிகரிக்கும். தோஷங்களை நீக்கி, நீடித்த நல் வாழ்வைத் தரும். சைவ ஆலயங்களாக இருந்தாலும், வைணவ ஆலயங்களாக இருந்தாலும், எந்த பெரிய விழாவிலும் நிறைவாக தீர்த்தவாரி நடைபெறும். வைணவ விழாவில் இதனை “அவபிரதம்” என்று சொல்லுவார்கள். திருமலையில் கூட பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளில் சக்கர தீர்த்தம் நடைபெறும். சைவத்தில், இதனை தீர்த்தவாரி என்பர். பிரம்மோற்சவம் எனப்படும் பெருவிழாவின் நிறைவு நாளில் மட்டுமல்லாது வேறு சில நாட்களிலும் தீர்த்தவாரி நடைபெறும். கிரகண காலங்களிலும், மாசிமகம், பங்குனி உத்திரம், சித்ரா பௌர்ணமி முதலிய நாட்களிலும் தீர்த்தவாரி விழா நடைபெறும். மாசி மாதத்திற்கு “மாகம்” என்று பெயர். மாசி பௌர்ணமி தினத்தன்று மகம் நட்சத்திரம் இணைவதால், மாகம் என்பது மகமாக மாறியது என்பார்கள். “அகம்” என்றால் பாவங்கள் அல்லது மாசுகள். “மா” என்றால் இல்லை என்று பொருள். “பாவங்களை இல்லை” என்று ஆக்கும் நாள் மாசி மகம்.

மாசி மகமும், மகா மகமும் :

பொதுவாகவே சூரியன் கும்ப ராசியில் இருக்கக்கூடிய மாசிமாதம் முழுக்கவே புனித நீராடலுக்கு மிக உயர்ந்த மாதம் என்று சொல்லப் பட்டாலும், மாசி மாதத்தில் வருகின்ற பௌர்ணமி தினம் மகம் நட்சத்திரத்தில் வருவதால், பௌர்ணமி நீராடல் என்பது மிக மிகத் தூய்மையானதாகவும், புண்ணியம் ஆனதாகவும் கருதப்படுகிறது. இப்பொழுது, குரு பகவான் கும்ப ராசியில் இருக்கிறார். இவர் சிம்ம ராசிக்கு வருகின்ற பொழுது, குருவும் சந்திரனும் ஒன்றாகச் சேர்வார்கள். இப்போது பார்வைத் தொடர்பு. அப்போது சேர்க்கை தொடர்பு. அப்போது அவர்கள் இருவரையும் சூரியன் கும்ப ராசியில் இருந்து பார்ப்பார். இந்த பௌர்ணமி தினமானது 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும். இதை “மகாமகப் பெருநாள்” என்று கொண்டாடுகிறோம். மகாமகத்தை பேச்சு வழக்கில் “மாமாங்கம்” என்று கூறுகின்றனர்.

மாசிமகம் கும்பகோணத்தில் ஏன் விசேஷம் ?

கும்பகோணத்திற்கு மட்டும் அப்படி என்ன ஒரு விசேஷம் என்று கேட்கலாம். ராசிகளில் மாசி மாதத்திற்கு உரிய ராசி கும்ப ராசி. அதிலே, கும்பத்தை எடுத்துக் கொள்ளுங்கள். குரு, சிம்ம ராசிக்கு வந்து சந்திரனுடன் சேரும் காலம் தான் மகாமகம். சிம்ம ராசி என்பது கால புருஷனுக்கு 5 ஆவது ராசி(புண்ணிய ராசி). ஐந்தாவது ராசியை திரிகோண ராசி அல்லது கோண ராசி என்று சொல்லுவார்கள். கும்பமும் (கும்பராசியும்) கோணமும் (திரிகோண ராசியான சிம்மம்) சந்திக்கக்கூடிய புனிதமான நாள் என்பதால் கும்பம் மற்றும் கோணம் இணைந்து கும்பகோணம் ஆகியது. கும்பகோணம் மிகச் சிறந்த புனிதத் தலமாக ஆதிகாலத்திலிருந்து கருதப்படுகிறது. அங்கே மகாமக குளம் இதற்கென்றே உருவாக்கப்பட்டது. மகாமக தீர்த்தம் “அமிர்த தீர்த்தம்” என்று சொல்லப்படுகின்றது. மகாமக தீர்த்தத்தில் நீராடி வணங்கினால் மறுபிறப்பற்ற அமரத்துவம் அடையலாம் என்று புராண நூல்களில் சொல்லப்பட்டிருக்கின்றன.

மகாமக குளத்தின் சிறப்பு:

மாசிமகம் என்றதும் நினைவுக்கு வரும் கும்பகோணத்தில் புனிதமான மகாமகக்குளம் உள்ளது. குளத்தைச் சுற்றி 16 மண்டபங்கள் உள்ளன. அதில் பிரம்ம தீர்த்தேஸ்வரர், முகுந்தேஸ்வரர், தாளேஸ்வரர், விருஷபேஸ்வரர், பரணேஸ்வரர், கோணேஸ்வரர், பக்திஹேஸ்வரர், பைரவேஸ்வரர், அகத்தீஸ்வரர், வியாசேஸ்வரர், உமைபாகேஸ்வரர், நைருதீஸ்வரர், பிரம்மேஸ்வரர், கங்காதரேஸ்வரர், முக்த தீர்த்தேஸ்வரர், க்ஷேத்ரபாலேஸ்வரர் ஆகிய 16 வகையான லிங்கங்கள் அருள்பாலிக்கின்றனர். இங்குள்ள சிவன் கோயில்களுக்கு தலைமையாக கும்பேஸ்வரர் கோயில் உள்ளது. 15 ஏக்கர் பரப்புள்ள இக்குளத்தை உருவாக்கியவர் அச்சுதப்ப நாயக்க மன்னரின் அமைச்சர் கோவிந்த தீட்சிதர். இந்நகரில் ஏழு குளங்கள், மூன்று கிணறுகள், நான்கு காவிரித் தீர்த்தங்கள் உட்பட 14 தீர்த்தங்கள் உள்ளன.

மாசி மகத்தில் செய்ய வேண்டியது :

பிற இடங்களில் வாழ்வோர் தங்கள் பாவம் தீர காசியில், கங்கையில் நீராடுவார்கள். காசியில் இருப்போர் செய்த பாவம் தீர வேண்டுமானால் குடந்தை மாமாங்கக் குளத்தில் நீராடுவராம். மகாமககுளத்தில் 66 கோடி தீர்த்தங்கள் கலந்துள்ளன. 9 நதிகளும் மாசியில் வந்து கூடும் இக்குளத்திற்குள் 16 ஊற்றுக் கிணறுகள் உள்ளன. இக்குளத்தில் அமிர்தம் கலந்துள்ளதால் எப்போது நீராடினாலும் புண்ணியம். அதிலும் மகாமகத்தன்று நீராட ஏராளமான புண்ணிய பலன் கிடைக்கும். இக்குளத்தில் ஒருமுறை வலம் வந்தால் பூமியை 100 முறை வலம் வந்த பலன் கிட்டும். இக்குளத்தை வணங்கினால் சிவபிரானோடு சேர்த்து எல்லா தேவர்களையும் வணங்கிய பலன் கிடைக்கும். இக்குள நீரை சிறிதளவு உட்கொண்டாலே சகலவித பாவங்களும் தீரும். இங்கு நீராட வேண்டுமென மனதால் நினைத்தாலே கூட புண்ணியம் தான்.

குழந்தை பாக்கியம் பெற…

தொடர்ந்து ஐந்து வருடங்கள் மாசிமகத்தன்று மகாமகக் குளத்தில் மூழ்கி எழுவதால் புத்திரபாக்யம் கிட்டும். மகாமகத்தன்று நீராடினால் வாரிசுகளின் ஆயுள் அதிகரிக்கும். மாசிமக நாளில், இங்கு அமைந்த 17 சிவாலயத்தையும், 5 விஷ்ணு ஆலயத்தையும் அத்துடன் மாமாங்கக் குளக்கரையில் பக்கத்துக்கு நான்கு வீதம் அமைந்த பதினாறு சின்ன சிவ சன்னதிகளையும் தரிசிப்பது நல்லது. மாசி மகத்தன்று இத்தனை சுவாமிகளும் இக்குளத்தில் தீர்த்தவாரி காண்பர். அவற்றுள் ஒரு ஆலயமான ஏகாம்பரேஸ்வரர் ஆலய இறைவன் ஏகாம்பரநாதருக்கு பதில் காமாட்சியம்மை தீர்த்தவாரிக்கு எழுந்தருள்வார். அப்பனும் அம்மையும் ஒன்றே என்பதே இதனால் அறியலாம்.பாணபுரிஸ்வரர், கம்பட்டவிஸ்வநாதர், கொட்டையூர் கோடீஸ்வரர், சாக்கோட்டை அமிர்தகலசநாதர், ஏகாம்பரேஸ்வரர், நாகேஸ்வரர் ஆகிய 6 சிவன் கோயில்களில் மாசி மகம் மட்டும் ஏகதினம் உற்சவம் நடைபெறும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More