செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home ஆன்மிகம் புண்ணியம் சேர்க்கும் சித்ரா பவுர்ணமி

புண்ணியம் சேர்க்கும் சித்ரா பவுர்ணமி

2 minutes read

சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரம் இணைந்த நாளில் வரும் பவுர்ணமி தினம், புராண நிகழ்வுகளின் நினைவாக சிறப்பைப் பெறுகிறது. மற்ற பவுர்ணமிகளில் சிறு களங்கத்துடன் தோன்றும் சந்திரன், சித்ரா பவுர்ணமியன்று, பூரணக்கலைகளுடன் பூமிக்கு மிக அருகில் தோன்றும். சந்திரனும் சூரியனும் முழு நீசம் பெறும் இந்த நாளில், நாம் தெய்வங்களிடம் சரணடைந்து வழிபடுவது நன்மைகளைத் தரும் என்பது ஐதீகம்.

மனிதர்களின் பாவ புண்ணியங்களை எழுதி வைத்து அதற்கேற்றார்ப் போல், அவர்களின் இறப்பையும் அதன்பின் அவர்கள் வசிக்கப் போகும் சொர்க்கம்- நரகம் ஆகியவற்றை நிர்ணயிக்கும் பெரிய பொறுப்பில் உள்ள எம தர்மனின் உதவியாளரான சித்திரகுப்தனை வழிபடும் நாள்தான் இந்நாள். சித்ரகுப்தனின் பிறப்புக் குறித்து பல்வேறு புராண சம்பவங்கள் விவரிக்கப்பட்டாலும் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிகழ்வாக இக்கதையே பெரும்பாலும் உள்ளது.

கயிலாயத்தில் ஒருநாள் அன்னை பார்வதி தேவி, பொழுதுபோக்காக ஒரு அழகிய ஆண் குழந்தையின் வடிவத்தை சித்திரமாக வரைந்து மகிழ்ந்தாள். அதே நேரத்தில் எல்லாம் வல்ல ஈசனிடம், விதி முடிந்த மனிதரின் உயிரைப் பறித்து பூமி மாதாவின் பாரத்தைக் குறைக்கும் பணியில் உள்ள எமதர்மன், அதிக வேலைப்பளு காரணமாகத் தான் அவதிப்படுவதாகவும், தனக்கு ஏற்ற சிறந்த உதவியாளரைத் தரும்படியும் வேண்டினான்.

அப்போதுதான் ஈசனிடம் தான் வரைந்த ஓவியத்தைக் காட்டினாள் அன்னை உமாதேவி. அழகில் சிறந்த அந்த ஆண் குழந்தையின் ஓவியம், ஈசனின் மனதை மயக்கியது. அந்நேரம் எமனின் வேண்டுகோள் நினைவில் தோன்ற, அவ்வோவியத்தைக் கையில் எடுத்த இறைவன் தன் மூச்சுக் காற்றை அவ்வோவியத்தில் செலுத்த, ஓவியத்தில் இருந்த குழந்தை உயிர்பெற்று வந்தது. சிவசக்தியின் அம்சமாக உருவான அக்குழந்தை, சித்திரத்தில் இருந்து உயிர் பெற்றதால் ‘சித்ர குப்தன்’ எனப்பெயர் பெற்றது. ஈசனை வேண்டித் தவமிருந்து பல ஞானங்களைப் பெற்று வளர்ந்தது.

கல்வி கேள்விகளில் சிறந்தவனான சித்ரகுப்தனை தகுந்த வயதில் எமதர்மனிடம் அனுப்பி, மனிதர்களின் பாவப்புண்ணிய கணக்குகளை நெறி தவறாமல் எழுதி, எமனுக்கு உதவி செய்யும்படி பணித்தார் சிவபெருமான் என்கிறது புராணம். ‘சித்’ என்றால் ‘மனம்’ என்றும், ‘குப்த’ என்றால் ‘மறைவு’ என்றும் பொருள். மனிதர்களின் மனதில் மறைந்திருக்கும் பாவ எண்ணங்களையும், மனதார செய்யும் நல்ல செயல்களின் புண்ணியத்தையும் கவனித்து எழுதி வைக்கிறார் சித்ரகுப்தர் என்பது நம்பிக்கை.

மனிதரின் பாவ புண்ணியக் கணக்குகளை எழுதும் பணிக்காக இறைவனால் தோற்றுவிக்கப்பட்ட சித்திரகுப்தன், பிறக்கும்போதே கையில் எழுத்தாணி ஏடுடன் பிறந்ததாக ஐதீகம். நாம் செய்யும் புண்ணிய செயல்களையும் பாவ செயல்களையும் தவறாமல் நடுநிலையாக, அவரவரின் பூர்வ புண்ணியங்களின் படி ஆராய்ந்து மறையாத எழுத்துகளால் கணக்குப் புத்தகத்தில் எழுதுவதாக நம்பிக்கை. ஆகவேதான் அன்று சித்திரகுப்த பூஜையில் எழுத்தாணி மற்றும் கணக்கு நோட்டுப் புத்தகங்கள் வைத்து வாழ்வு வளம் பெற வேண்டுகின்றனர்.

சித்ரா பவுர்ணமியன்று பூஜையறையை சுத்தம் செய்து, சித்ரகுப்தன் படத்தை தெற்கு திசையில் வைத்து பூக்களால் அலங்கரிக்க வேண்டும். பின்னர் சந்தனப்பொட்டு வைத்து, பழங்கள், காய்கறிகள், வேப்பம்பூ பச்சடி, பச்சரிசி வெல்லத்துடன் இனிப்புகள் மற்றும் கலவை சாதங்களை நைவேத்தியமாகப் படைக்க வேண்டும். ஐந்து முகம் கொண்ட குத்து விளக்கு ஏற்றி மனதில் உள்ள தீய எண்ணங்களை விலக்கி நல்ல எண்ணங்களை புகுத்தி தீப தூபம் காட்டி சித்ரகுப்தனை மனதார வழிபட வேண்டும்.

சித்ரா பவுர்ணமியன்று களங்கமில்லாத முழுநிலவின் அழகைக் கண்டு ரசிக்க, கடற்கரை பூங்கா போன்ற இடங்களில் மக்கள் ஒன்று கூடுவார்கள். அவரவர் வீடுகளில் செய்த ‘சித்ரா அன்னம்’ எனப்படும் கலவை சாதங்களை எடுத்து வந்து, நிலாச்சோறு உண்ணும் வழக்கம் குடும்ப உறுப்பினர்களிடையே ஒற்றுமையையும், அன்பையும் பெருக வைக்கும் என்பதால் நம் பெரியோர்கள் கடைப்பிடித்த நல்வழி இது. சித்ரா பவுர்ணமியின் சிறப்புகளாக பல ஆன்மிக வழிபாடுகளும், பூஜைகளும் ஆலயங்கள்தோறும் நடைபெற்று வருகின்றன.

இதையும் படியுங்கள்: சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவிலில் தேரோட்டம்
குறிப்பாக மதுரையில் அன்று கள்ளழகர் ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு தரிசனம் தருவது ஆண்டுதோறும் நிகழும் சிறப்புமிக்க வைபவமாகிறது. கன்னியாகுமரியில் அன்றுமட்டும் ஒரே நேரத்தில் சூரியன் மறைவதையும் சந்திரன் தோன்றுவதையும் கண்டுமகிழலாம். திருவண்ணாமலையில் கிரிவலம் வரும் நிகழ்வு பிரசித்தி பெற்றதாக இருக்கிறது. இந்த தினத்தில் சித்ரகுப்தனை வேண்டி, வருட பலாபலன்களை அறிந்து கொள்ளும் பஞ்சாங்கம் படிப்பதும், கடல் நீரில் நீராடுவதும் வாழ்வில் சுபீட்சத்தை அருளும். அன்றைய தினம் சித்ராதேவிக்கு (அம்பிகை) தேங்காய் சாதம், புளியோதரை, எலுமிச்சை சாதம், தயிர்சாதம், பருப்புபொடி சாதம், கறிவேப்பிலைப்பொடி சாதம், மாங்காய் சாதம், வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல், அரிசி உப்புமா, அவல் உப்புமா, கோதுமை உப்புமா ஆகியவைகளைப் படைத்து அவற்றை பசித்தோருக்கு தானமாகத் தந்து புண்ணியம் பெறலாம்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More