புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு தோல்விக்கான காரணத்தை கூறும் மெதிவ்ஸ்.

தோல்விக்கான காரணத்தை கூறும் மெதிவ்ஸ்.

1 minutes read

இந்திய அணிக்கு எதிரான 2011 கிரிக்கெட் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் மேலும் 20 அல்லது 30 ஓட்டங்களை பெற்றிருந்தால், முடிவை மாற்றியிருக்கலாம் என இலங்கை அணி வீரர் அஞ்செலோ மெதிவ்ஸ் கூறுகிறார்.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை அணி மஹேல ஜயவர்தனவின் சதத்துடன், சவாலான இலக்கை நிர்ணயித்திருந்தது. அத்துடன், பந்துவீச்சில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் வீரேந்தர் ஷெவாக் ஆகியோரின் விக்கெட்டுகளை கைப்பற்றி சிறந்த ஆரம்பத்தை பெற்றிருந்தது. கம்பீர் மற்றும் விராட் கோஹ்லியின் இணைப்பாட்டம் மற்றும் டோனியின் அதிரடியின் ஊடாக இந்திய அணி போட்டியில் வெற்றிபெற்று கிண்ணத்தை வென்றது.

இலங்கை அணியின் வெற்றிகளுக்கு முக்கிய துறுப்புச்சீட்டாக இருந்த அஞ்செலோ மெதிவ்ஸ் இறுதிப் போட்டியிலிருந்து உபாதை காரணமாக வெளியேறியமை அணியின் பின்னடைவுக்கு மற்றுமொரு முக்கிய காரணமாக அமைந்திருந்தது.

குறித்த அனுபவம் தொடர்பில் இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் கருத்து தெரிவித்த அஞ்செலோ மெதிவ்ஸ்,

“50 ஓவர்கள் கொண்ட உலகக் கிண்ண போட்டியில் 2011ம் ஆண்டு நான் முதன்முறையாக விளையாடினேன். இதற்கு முன்னர் 2009 மற்றும் 2010ம் ஆண்டுகளில் T20 உலகக் கிண்ணத்தில் விளையாடியிருந்தேன். 2011 உலகக் கிண்ணம் மிகச்சிறப்பு வாய்ந்தது. எமக்கு ஏற்ற காலநிலை மற்றும் ஆடுகள தன்மைகளில் நாம் விளையாடியிருந்தோம். அத்துடன், இறுதிப்போட்டிக்கு வருவதற்கு முன்னர் மிகச்சிறந்த போட்டிகளை கொடுத்திருந்தோம். இறுதிப் போட்டியில் விளையாட ஆர்வமாக இருந்த போதும், துரதிஷ்டவசமாக எனது உபாதை அதற்கு வாய்ப்பளிக்கவில்லை. குறித்த விடயம் எனக்கு ஏமாற்றத்தை வழங்கியது.”

“நாம் 320 ஓட்டங்கள் வரை பெற்றிருந்தால், வெற்றிபெற்றிருக்கலாம் என இப்போதும் எனக்கு தோன்றுகிறது. பலமான இந்திய அணியின் துடுப்பாட்டத்துக்கு எதிராக நாம் சிறப்பாக செயற்பட்டிருந்தோம். இந்திய ஆடுகளங்கள் துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமானது. இந்திய அணி மிகச்சிறந்த துடுப்பாட்ட வரிசையை வைத்திருந்தது. அத்துடன், வான்கடே மைதானம் அவ்வளவு பெரிய மைதானம் அல்ல. துடுப்பாட்ட வீரர்களுக்கு ஓட்டங்களை வெகுவாக பெறமுடியும். 20-30 ஓட்டங்கள் எமக்கு குறைவாக இருந்தது. கம்பீர் மற்றும் விராட் கோஹ்லி சிறப்பாக துடுப்பெடுத்தாடியதுடன், டோனி இணைந்து போட்டியை முடிவுக்கு கொண்டுவந்தார். எவ்வாறாயினும், அதுவொரு சிறந்த போட்டி” என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More