சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் பதவி வெற்றிடத்துக்கான சரியான தெரிவு இந்திய கிரிக்கெட் சபையின் தலைவர் சவ்ரவ் கங்குலியாக இருப்பார் என குமார் சங்கக்கார தன்னுடைய கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
“சவ்ரவ் கங்குலியின் கிரிக்கெட் மீதுள்ள விவேகத்துவமான அறிவு, நிர்வாகம் தொடர்பிலான அனுபவம், ஐ.சி.சி இன் தலைவர் பதவிக்கு சரியாக பொருந்தும்” என குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார். அத்துடன், அவருடைய சர்வதேச கிரிக்கெட் அனுபவமும் இந்த பதவிக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என குமார் சங்கக்கார மேலும் குறிப்பிட்டுள்ளார்.
“சவ்ரவ் கங்குலியால் சரியான மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என நான் நினைக்கிறேன். அவருடைய கிரிக்கெட் திறமைக்கு மாத்திரமல்லாமல், அவருடைய விவேகமான மூளை என்பவற்றுக்கு நான் மிகப்பெரிய ரசிகன்” என தற்போதைய எம்சிசி இன் தலைவர் குமார் சங்கக்கார சுட்டிக்காட்டியுள்ளார்.
“கங்குலியின் மனதில் உணர்வுபூர்வமாக கிரிக்கெட்டின் மீது ஈடுபாடு உள்ளது. அதனால், அவர் இந்திய கிரிக்கெட் சபை, இலங்கை கிரிக்கெட் சபை அல்லது வேறு கிரிக்கெட் சபைகள் உட்பட ஐ.சி.சி இன் தலைவராக இருந்தாலும், அவருக்கு கிரிக்கெட் மீதுள்ள ஈடுபாடு மாற்றமடையாது.
பதவிக்கு வரும் ஒருவரின் மனநிலை சர்வதேச கிரிக்கெட்டை அடிப்படையாகக்கொண்டதாக இருக்க வேண்டும். அவருக்கு சாதகமான இடத்தையோ அல்லது அவர் வந்த இடத்தையோ பார்க்கமுடியாது. நான் இலங்கை, இந்தியா, அவுஸ்திரேலியா அல்லது இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும், நான் ஒரு கிரிக்கெட் வீரர் என்பதை அறிந்துவைத்து, அதனை விளையாடும் நாடுகளுக்கு உதவவேண்டும்.”
இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார, கங்குலியால் சர்வதேச கிரிக்கெட் பிரதானிகளுடன் சரியான உறவை பேணமுடியும். குறித்த திறனானது ஐ.சி.சி இன் தலைவர் பதவிக்கு முக்கியமானதாகும் என குறிப்பிட்டுள்ளார்.
“இந்திய கிரிக்கெட் சபையின் தலைவர் என்ற ரீதியில் கங்குலியின் பணிகளை நான் பார்த்திருக்கிறேன். கிரிக்கெட் சபையின் நிர்வாகம் மற்றும் பயிற்றுவிப்பு குழாத்தை அவர் அமைப்பதற்கு முன்னர், வீரர்கள் மற்றும் ஏனைய நாடுகளுடன் அவர் மேற்கொண்ட உறவு மிக முக்கியமான ஒன்றாகும்” என குமார் சங்கக்கார மேலும் சுட்டிக்காட்டினார்.
சர்வதேச கிரிக்கெட் சபையின் தலைவர் பதவியிலிருந்து இந்த மாத ஆரம்பத்தில் சஷாங் மனோஹர் விலகியிருந்த நிலையில், அவரின் வெற்றிடத்துக்கு தற்காலிகமாக இம்ரான் கவாஜா நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.