கரீபியன் பிரீமியர் லீக் ரி-20 தொடரின் எட்டாவது அத்தியாயம் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமாகவுள்ளது.
ஆரம்பப் போட்டியில், கடந்த ஆண்டு இரண்டாவது இடம் பிடித்த கயானா அமேசான் வோரியர்ஸ் அணியும், ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
தாராபோவில் உள்ள பிரையன் லாரா கிரிக்கெட் அகாடமி மைதானத்தில், உள்ளூர் நேரப்படி இரவு 7.30 க்கு இப்போட்டி ஆரம்பமாகவுள்ளது.
மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபையால் நடத்தப்படும் இந்த ஆண்டுக்கான கரீபியன் பிரீமியர் லீக் ரி-20 தொடர், கொரோனா வைரஸ் தொற்றுக்குப்பின் நடைபெறும் முதல் ரி-20 லீக் தொடராக அமையவுள்ளது.
இந்த ஆண்டுக்கான தொடர், இன்று முதல் செப்டம்பர் 10ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. ஆறு அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரில் 33 போட்டிகள் நடைபெற இருக்கின்றன.
தாராபோவில் உள்ள பிரையன் லாரா கிரிக்கெட் அகாடமி, போர்ட் ஒஃப் ஸ்பெயினில் உள்ள குயின்ஸ் பார்க் ஓவல் ஆகிய இரண்டு மைதானங்களில் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. அரையிறுதிப் போட்டிகளும் இறுதிப் போட்டியும் லாரா கிரிக்கெட் அகாடமி மைதானத்தில் நடைபெறவுள்ளன.