இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது 16 ஆண்டுகளின் பின்னர் இரு இருபதுக்கு : 20 போட்டிகளில் விளையாடுவதற்காக பாகிஸ்தானுக்கு 2021 ஒக்டோபர் மாதம் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.
கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் இங்கிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவில்லை.
இவ்வாறான சூழ்நிலையில் 2009 ஆம் ஆண்டு லாகூரில் இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது துப்பாக்கி ஏந்தியவர்கள் தாக்குதல் மேற்கொண்டமையினால் பாகிஸ்தானுக்கான சர்வதேச நாடுகளின் சுற்றுப் பயணம் கைவிடப்பட்ட நிலையில் இருந்தது.
இந் நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்த ஆண்டு இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வேளையில் 2021 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளுமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் இங்கிலாந்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.
அந்த அழைப்பினை ஏற்றே இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது அடுத்த வருடம் ஒக்டோபர் மாதம் பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு இரு இருபதுக்கு : 20 போட்டிகளில் விளையாடவுள்ளது.
இந்த சுற்றுப் பயணம் குறித்து கருத்து தெரிவித்த இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் நிர்வாகத்தின் தலைவர் டொம் ஹாரிசன்,
இந்த கோடையில் நிரூபிக்கப்பட்டதைப் போல, நாங்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகத்துடன் ஒரு வலுவான உறவைக் கொண்டுள்ளோம்,
இந்த சுற்றுப் பயணத்தில் வழமைபோல் எங்கள் வீரர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் நலன் மிக முக்கியமானதாக இருக்கும்.
இதற்கு தேவையான அனைத்து திட்டங்களும் நடைமுறையில் இருப்பதை உறுதிசெய்ய நாங்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகத்துடன் நெருக்கமாக பணியாற்றி வருகிறோம்.
குறிப்பாக அணியைச் சுற்றியுள்ள பாதுகாப்பு நிலைகள், முன்மொழியப்பட்ட பயண நெறிமுறைகள் மற்றும் கொவிட்-19 நிலைமைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இலங்கை அணி மீதான தாக்குதலைத் தொடர்ந்து 10 ஆண்டுகளாக பாகிஸ்தானில் எந்த சர்வதேச கிரிக்கெட் போட்டிகளும் விளையாடவில்லை என்றாலும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பாகிஸ்தான் தங்களது சொந்த போட்டிகளில் பெரும்பகுதியை நடத்தியது.
எனினும் கடந்த மாதம் ஜிம்பாப்வே அணி அங்கு விஜயம் செய்ததோடு, பாகிஸ்தான் சூப்பர் லீக் இருபதுக்கு : 20 தொடரில் அநேக வெளிநாட்டு வீரர்கள் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.