இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணி வீரா்களில் பலருக்கு கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து, இரு அணிகள் இடையே நடைபெற இருந்த ஒருநாள் கிரிக்கெட் தொடா் திங்கள்கிழமை ரத்து செய்யப்பட்டது.
இரு அணிகளின் வீரா்களும் உடல் மற்றும் உளவியல் ரீதியாக பாதிப்புக்குள்ளாகாமல் இருப்பதை உறுதி செய்ய, தொடா் ரத்து செய்யப்படுவதாக இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன.
முன்னதாக இந்த ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் கேப் டவுனில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்குவதாக இருந்தது. எனினும், அன்றைய தினம் காலையில் தென் ஆப்பிரிக்க வீரா் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து, ஆட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
வீரா்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்திய நிலையில், வீரா்கள் தங்கியிருந்த ஹோட்டலின் ஊழியா்கள் இருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்ததை அடுத்து, ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்த முதல் ஒருநாள் ரத்து செய்யப்பட்டது. இதனிடையே இங்கிலாந்து வீரா்கள் இருவருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிந்தது.
எனினும் முதல் ஆட்டம் ரத்து செய்யப்பட்டாலும் எஞ்சிய 2 ஆட்டங்களை நடத்த இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் நம்பிக்கை கொண்டிருந்த நிலையில், தொடரையே ரத்து செய்வதாக அவை கூட்டாக திங்கள்கிழமை அறிவித்துள்ளன.