வார இறுதியில் நடைபெற்ற ஒவ்வொரு நாடுகளுக்குமான தனித்துவமான, முதன்மையான கால்பந்து லீக் தொடர்களில் நடைபெற்ற முக்கியப் போட்டிகளின் முடிவுகளை சுருக்கமாக பார்க்கலாம்.
முதலாவதாக ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து தொடரில், நடைபெற்ற ரியல் மட்ரிட் மற்றும் ஈபர் அணிகள் மோதிய போட்டியின் முடிவினை பார்க்கலாம்.
முனிசிபல் டி இபுருவா விளையாட்டரங்கில் நடைபெற்ற இப்போட்டியில், இரு அணிகளும் களத்தில் ஆக்ரோஷமாக மோதிக் கொண்டன.
பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் நகர்ந்த இப்போட்டியில், ரியல் மட்ரிட் அணி 3-1 என்ற கோல்கள் கணக்கில் சிறப்பான வெற்றியை பதிவுசெய்தது.
இது நடப்பு தொடரில் ரியல் மட்ரிட் அணியின், ஒன்பதாவது வெற்றியாகும். இந்த வெற்றியின் மூலம் ரியல் மட்ரிட் அணி 29 புள்ளிகளுடன் புள்ளிபட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது.
தோல்வியை தழுவிய ஈபர் அணி 15 புள்ளிகளுடன் 14ஆவது இடத்தில் உள்ளது.
இந்தப் போட்டியில் ரியல் மட்ரிட் அணி சார்பில், கரீம் பென்ஸிமா போட்டியின் 6ஆவது நிமிடத்திலும், லுகா மொட்ரிச் 13ஆவது நிமிடத்திலும் லுகாஸ் வெஸ்கியுஸ் 92ஆவது நிமிடத்தில் ஒரு கோலும் அடித்தனர்.
ஈபர் அணி சார்பில், கிகி 28ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.
அடுத்ததாக, இத்தாலியில் நடைபெறும் செர்ரி ஏ கால்பந்து தொடரில் நடைபெற்ற லஸியோ மற்றும் நபோலி அணிகளுக்கிடையிலான போட்டியின் முடிவினை பார்க்கலாம்.
ஒலிம்பிக்கோ விளையாட்டரங்கில் நடைபெற்ற இப்போட்டியில், லஸியோ அணி 2-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது.
இந்த வெற்றியின் மூலம் லஸியோ அணி, புள்ளிப்பட்டியலில் 21 புள்ளிகளுடன் ஏழாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
தோல்வியடைந்த நபோலி அணி 23 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது.
இதில் லஸியோ அணி சார்பில், சிரோ இம்மோபைல் 9ஆவது நிமிடத்திலும் லுயிஸ் அல்பர்டோ 56ஆவது நிமிடத்தில் கோல் அடித்தனர்.
அடுத்ததாக இங்லீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் நடைபெற்ற வெஸ்ட் ப்ரோம் மற்றும் அஸ்டன் விலா அணிகள் மோதிய போட்டியின் முடிவினை பார்க்கலாம்.
ஹவ்த்ரோன்ஸ் விளையாட்டரங்கில் நடைபெற்ற இப்போட்டியில், அஸ்டன் விலா அணி 3-0 என்ற கோல்கள் வெற்றிபெற்றது.
இந்த வெற்றியின் மூலம் அஸ்டன் விலா அணி, புள்ளிபட்டியலில், 22 புள்ளிகளுடன் 9ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
தோல்வியடைந்த வெஸ்ட் ப்ரோம் அணி, 7 புள்ளிகளுடன் 19ஆவது இடத்தில் உள்ளது.
இதில் அஸ்டன் விலா அணி சார்பில், அன்வர் எல் காஸி 5ஆவது நிமித்தில் ஒரு கோலும், 88ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி ஒரு கோலும் அடித்தனர்.
பெர்ட்ராண்ட் ட்ரோர் 84ஆவது நிமிடத்தில் அணிக்காக ஒரு கோல் அடித்துக்கொடுத்தார்.