ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் கீழ் வரும் இரு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கு இலங்கை்ககான தனது சுற்றுப் பயணத்துக்கு முன்னதாக ஜாக் காலிஸை துடுப்பட்ட ஆலோசகராக இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் பெயரிட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் ஐ.சி.சி ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் பெயரிடப்பட்ட காலிஸ், தென்னாப்பிரிக்காவின் மிகச் சிறந்த டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களும் ஒருவர் ஆவார்.
45 வயதான காலிஸ் 166 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 45 சதங்களை பதிவுசெய்துள்ளார்.
2013 ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற காலிஸ், பல்வேறு அணிகளுக்கு பயிற்றியாளராக செயற்பட்டுள்ளார்.
குறிப்பாக 2019/20 பருவத்தில் இங்கிலாந்துக்கான சுற்றுப் பயணத்தின் போது தென்னாபிரக்க அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக இருந்துள்ளார்.
2021 ஜனவரி 2 ஆம் திகதி இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.
ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக இடம்பெறும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி ஜனவரி 14 ஆம் திகதி காலியில் ஆரம்பமாகும்.
இலங்கை சுற்றுப்பயணத்தின் பின்னர் இங்கிலாந்து இந்தியாவுக்கு எதிராக நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடும்.