மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தை முன்னிட்டு இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவுகளில் எவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகவில்லை என உறுதி செய்யப்ப்பட்டதையடுத்து இரு அணிகளுக்குமிடையிலான கிரிக்கெட் தொடர் திட்டமிட்டபடி நடைபெறும் என இலங்கை கிரிக்கெட் வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.
கடந்த பெப்ரவரி மாதம் 3ஆம் திகதி இலங்கை அணி வீரர் லஹிரு திரிமான்ன, பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து இம்மாதம் 18ஆம் திகதி முதல் ஆரம்பமாகவிருந்த இலங்கைக் கிரிக்கெட் அணியின் மேற்கிந்திய சுற்றுப்பயணத்தை ஒத்திவைக்க இலங்கை கிரிக்கெட் கடந்த வாரம் நடவடிக்கை எடுத்திருந்தது.
இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் மற்றும் அணியின் பயிற்சியாளர்களுக்கு கடந்த 10ஆம் திகதி பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் மேற்கிந்திய தீவுகள் தொடருக்காக அறிவிக்கப்பட்ட இலங்கை வீரர்கள் 35 பேருக்கும், அணியின் பயிற்சியாளர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்துக்கான பயிற்சி முகாமை மீண்டும் ஆரம்பிக்கும் நோக்கில், இலங்கை கிரிக்கெட் அணியிலுள்ள வீரர்களுக்கான உடற்தகுதி பரிசோதனை கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் முன்னெடுக்கப்பட்டது.
2 கிலோ மீற்றர் தூரத்தை ஓடி கடப்பதற்கான இப்பரிசோதனையில் மேற்கிந்திய தீவுகள் அணியுடனான தொடரில் விளையாடுவதற்காக தெரிவுசெய்யப்பட்ட இலங்கை அணியின் 36 வீரர்களில் 32 பேர் பங்கேற்றிருந்தனர்.
மேற்கிந்திய தீவுகள் அணியுடனான சுற்றுப்பயணம் நடைபெறுமா? என்பது தொடர்பில் இலங்கை கிரிக்கெட் சபையின் நிறைவேற்று அதிகாரி ஏஷ்லி டி சில்வா அளித்த பேட்டியில்,
மேற்கிந்திய சுற்றுப்பயணத்தில் இடம்பிடித்த வீரர்களுக்கான உடற்தகுதி பரிசோதனை நேற்றுமுன்தினம் இடம்பெற்றது. அதன் இறுதி முடிவுகள் எமக்கு இதுவரை கிடைக்கவில்லை. பெரும்பாலும் விரைவில் அதன் முடிவுகள் எமக்கு கிடைக்கும். அதேபோல, பிசிஆர் பரிசாதனைகளின் முடிவும் திருப்தியளிக்கின்றன. எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் வீரர்களின் பயிற்சி முகாம் ஆரம்பமாகவுள்ளது. இதற்கான அனுமதி கிரிக்கெட் குழுவிடம் இருந்து கிடைக்கும் என எதிர்பார்க்கின்றோம் என தெரிவித்தார்.
இலங்கை அணியின் மேற்கிந்திய சுற்றுப்பயணம் பெப்ரவரி 18ஆம் திகதி ஆரம்பமாகவிருந்ததுடன், இதன் முதலாவது டெஸ்ட் போட்டி பெப்ரவரி 28ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 3 ஒருநாள் சர்வதேச போட்டிகள் மற்றும் 3 இருபதுக்கு 20 போட்டிகளில் இலங்கை அணி விளையாடவிருந்தன. பங்களாதேஷ் அணியின் இலங்கை சுற்றுப்பயணம் எப்போது? நாங்கள் போட்டி அட்டவணையில் ஒருசில போட்டிகளை குறைப்பதற்கு அவதானம் செலுத்தியிருந்தோம்.
ஆனால், தற்போதுள்ள நிலையில் திட்டமிட்டபடி அனைத்து போட்டிகளையும் ஒருசில மாற்றங்களுடன் நடத்துவது குறித்து மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபையிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றோம்.
நாங்கள் ஆரம்பத்தில் 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் மற்றும் 3 போட்டிகளைக் கொண்ட ரி 20 தொடர்களில் விளையாடி இறுதியாகத் தான் டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது ரி 20 தொடரை ஆரம்பத்தில் விளையாடி ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடுவதற்கு எதிர்பார்த்துள்ளோம்.