செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் இலங்கை லெஜண்ட்ஸை வீழ்த்தி சம்பியனான இந்திய லெஜண்ட்ஸ்

இலங்கை லெஜண்ட்ஸை வீழ்த்தி சம்பியனான இந்திய லெஜண்ட்ஸ்

2 minutes read

வீதி பாதுகாப்பு டி-20 உலக சம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய லெஜண்ட்ஸ் 14 ஓட்டங்களினால் வெற்றி பெற்று கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.

இந்தியா, இங்கிலாந்து, மேற்கிந்தியத்தீவுகள், பங்களாதேஷ், அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள் களம் காணும் 2021 வீதி பாதுகாப்பு உலக இருபதுக்கு : 20 சம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டியானது இந்தியாவில் ஆரம்பமாகி நடைபெற்று வந்தது.

இதில் லீக் போட்டி முடிவுகளின் அடிப்படையில் இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷ் லெஜண்ட்ஸ் ஆகிய அணிகள் வெளியேற, அரையிறுதிப் போட்டிக்கு இலங்கை, இந்தியா, மேற்கிந்தியத்தீவுகள் மற்றும் தென்னாபிரிக்க லெஜண்ட்ஸ் அணிகள் நுழைந்தன.

ராய்பூர் மைதானத்தில் கடந்த 17 ஆம் திகதி நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான இந்திய அணியும், பிரையன் லாரா தலைமையிலான மேற்கிந்தியத்தீவுகள் லெஜண்ட்ஸ் அணியும் மோதின.

இப் போட்டியில் இந்திய அணியானது 12 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.

அதேபோல் கடந்த 19 ஆம் திகதி அதே மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் திலகரத்ன டில்சான் தலைமையிலான இலங்கை லெஜண்ட்ஸ் அணியினறும், ஜோன்டி ரோட்ஸ் தலைமையிலான தென்னாபிரிக்க லெஜண்ட்ஸ் அணியினரும் மோதினர்.

இப் போட்டியில் இலங்கை அணியானது 8 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது.

இந் நிலையிலேயே மும்பையில் நேற்றிரவு 7.00 மணிக்கு இலங்கை லெஜண்ட்ஸ் மற்றும் இந்திய லெலஜண்ட்ஸ் அணிகளுக்கிடையில் இறுதிப் போட்டி நடைபெற்றது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணித் தலைவர் டில்சான் முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பினை இந்தியாவுக்கு வழங்கினார்.

அதன் பிரகாரம் துடுப்பெடுத்தாடிய இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் யுவராஜ் சிங் – யுசப் பத்தானின் வலுவான இணைப்பாட்டத்தினால் 4 விக்கெட்டுகளை இழந்து 181 ஓட்டங்களை குவித்தது.

சேவாக் 10 ஓட்டங்களையும், சச்சின் டெண்டுல்கர் 23 பந்துகளில் 5 பவுண்டரிகள் அடங்கலாக 30 ஓட்டங்களையும், பத்ரீநாத் 7 ஓட்டங்களையும், யுவராஜ் சிங் 41 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் அடங்கலாக 60 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழக்க, யுசப் பத்தான் 36 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் அடங்கலாக 62 ஓட்டங்களையும், இர்பான் பத்தான் 8 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழக்காதிருந்தனர்.

182 என்ற ஓட்ட இலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை லெஜண்ட்ஸ் அணியானது, ஆரம்பத்தில் வலுவானதொரு ஓட்ட எண்ணிக்கையை குவித்தது.

ஆரம்ப வீரர்களாக களமிறங்கிய திலகரத்ன டில்சான் – சனத் ஜெயசூரியா ஜோடி 7 ஓவர்களின் நிறைவில் 61 ஓட்டங்களை குவித்தது.

அதன் பின்னர் டில்சான் 7.2 ஆவது ஓவரில் யுசப் பத்தானின் ஓவரில் 21 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க அடுத்து வந்த சமார சில்வாவும் நீண்ட நேரம் தாக்குப் பிடிக்காது, இர்பான் பத்தானின் முதல் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

மூன்றாவது விக்கெட்டுக்காக களமிறங்கிய உபுல் தரங்கவுடன் ஜோடி சேர்ந்து அதிரடி காட்டிய சனத் ஜெயசூரியாவும் 11.1 ஆவது ஓவரில் 35 பந்துகளில் ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகள் அடங்கலாக 43 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, உபுல் தரங்கவும் 13 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

இதனால் இலங்கை அணியானது 91 ஓட்டங்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. எனினும் 5 ஆவது விக்கெட்டுக்காக கைகோர்த்த கெளசல்ய வீரரத்ன – சிந்தக ஜெயசிங்க ஜோடி இந்திய அணிப் பந்து வீச்சாளர்களை சாமர்த்தியமாக எதிர்கொண்டது.

இவர்கள் இருவரும் இணைந்து ஓரளவு அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த இலங்கை அணி 18 ஓவர்களுக்கு 154 ஓட்டங்களை குவித்தது.

ஒரு கட்டத்தில் வெற்றிக்கு 12 பந்துகளில் 30 ஓட்டம் என்ற நிலை இருந்தது.

எனினும் 18.4 ஆவது ஓவரில் வீரரத்ன 15 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் அடங்கலாக 38 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, 20 ஆவது ஓவரின் 5 ஆவது பந்து வீச்சில் ஜெயசிங்க 30 பந்துகளில் 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி அடங்கலாக 40 ஓட்டத்துடனும், இதனிடையே களமிறங்கிய ஃபர்வீஸ் மஹாரூப், அந்த ஓவரின் இறுதிப் பந்திலும் ஆட்டமிழந்தனர்.

அதனால் இலங்கை அணி 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 167 ஓட்டங்களை மாத்திரமே பெற்று, 14 ஓட்டங்களினால் தோல்வியைத் தழுவியது.

பந்து வீச்சில் இந்திய லெஜண்ட்ஸ் அணி சார்பில் யுசப் பத்தான் மற்றும் இர்பான் பத்தான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், கோனி மற்றும் முனாப் படேல் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

போட்டியின் ஆட்டநாயகனாக யுசப் பத்தானும், தொடரின் நாயகனாக திலகரத்ன டில்சானும் தெரிவானார்கள்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More