இலங்கையின் குறுந்தூர ஓட்ட வீரரான யுப்புன் அபேகோன் மற்றும் 3000 மீற்றர் தடைத்தாண்டல் ஓட்ட வீராங்கனையான நிலானி ரத்நாயக்க ஆகிய இருவரும் டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்பார்கள் என இலங்கை மெய்வல்லுநர் சங்கத் தலைவர் பாலித்த பெர்னாண்டோ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
யுப்புன் மற்றும் நிலானி ஆகிய இருவரும் டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்குகொள்வதற்கான உத்தியோகபூர்வ அனுமதி இன்னும் ஒரு சில தினங்களில் கிடைக்கும் என தாம் எதிர்பார்த்துள்ளதாக இலங்கை மெய்வல்லுநர் சங்கத் தலைவர் மேலும் தெரிவித்தார்.
உலக தரவரிசையில் 49 ஆவது இடத்திலும் ஒலிம்பிக் தரவரிசையில் 46 ஆவது இடத்திலும் யுப்புன் அபேகோன் காணப்படுவதன் காரணமாக அவர் டோக்கியோ ஒலிம்பிக்குக்கான தகுதியைப் பெறுவார்.
1996 அட்லாண்டா ஒலிம்பிக்கின் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் சின்த்தக்க டி சொய்சா பங்கேற்றிருந்தமைக்குப் பின்னர் 25 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒலிம்பிக்கின் 100 மீற்றர் ஓட்டப் போட்டிக்கான வாய்ப்பை இலங்கையரொருவர் பெறுகின்றமை விசேட அம்சமாகும்.
இலங்கையின் 3000 மீற்றர் தடைத்தாண்டல் ஓட்ட வீராங்கனையான நிலானி ரத்நாயக்க ஒலிம்பிக் தரவரிசையில் 42 ஆவது இடத்திலும், உலக தரவரிசையில் 45 ஆவது இடத்திலும் காணப்படுவதால் டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் தகுதியை பெறறவுள்ளார்