உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.
இன்று காலை நடந்த 50 மீட்டர் பிரீஸ்டைல் நீச்சலில் அமெரிக்க வீரர் டிரெசல் புதிய ஒலிம்பிக் சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார்.
அவர் பந்தய தூரத்தை 21.07 வினாடியில் கடந்தார். இதற்கு முன்பு 2008-ம் ஆண்டு பீஜிங் ஒலிம்பிக்கில் பிரேசில் வீரர் சியலோ 21.30 வினாடியில் கடந்ததே சாதனையாக இருந்தது. 13 ஆண்டுகளுக்கு பிறகு இந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.
டிரெசல் டோக்கியோ ஒலிம்பிக்கில் கைப்பற்றிய 4-வது தங்கப்பதக்கம் இதுவாகும். ஏற்கனவே 100 மீட்டர் பட்டர்பிளை, 100 மீட்டர் பிரீஸ்டைல், 4100 பிரீஸ்டைல் தொடர் நீச்சல், 4100 மீட்டர் மெட்லி தொடர் நீச்சல் ஆகியவற்றில் தங்கம் வென்றிருந்தார்.
ஒட்டுமொத்தத்தில் ஒலிம்பிக்கில் டிரெசல் 6-வது தங்கத்தை கைப்பற்றினார். ரியோ ஒலிம்பிக்கில் அவர் 2 தங்கப்பதக்கமும் வென்றார்.
பெண்களுக்கான 4*100 மீட்டர் மெட்லே தொடர் நீச்சலில் ஆஸ்திரேலியா புதிய ஒலிம்பிக் சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றது.
ஹோட்சஸ், மெக்கவுன், கேம்பல், கெய்லிமெக்கூன் ஆகியோர் அடங்கிய ஆஸ்திரேலிய அணி பந்தய தூரத்தை 3 நிமிடம் 51.60 வினாடியில் கடந்தது. இதற்கு முன்பு 2012 லண்டன் ஒலிம்பிக்கில் அமெரிக்கா 3 நிமிடம் 52.05 வினாடியில் கடந்ததே சாதனையாக இருந்தது. அமெரிக்காவுக்கு வெள்ளிப்பதக்கமும், கனடாவுக்கு வெண்கலபதக்கமும் கிடைத்தன.
பெண்களுக்கான 50 மீட்டர் பிரீஸ்டைலில் ஆஸ்திரேலியாவும், ஆண்களுக்கான 1,500 மீட்டர் பிரீஸ்டைலில் அமெரிக்காவும் தங்கப்பதக்கத்தை கைப்பற்றின.
தடகள போட்டியில் இன்று காலை சீனாவுக்கு தங்கம் கிடைத்தது. பெண்களுக்கான குண்டு எறியும் போட்டியில் அந்நாட்டை சேர்ந்த லிஜியோ காங் 20.5 8 மீட்டர் தூரம் எறிந்து முதல் இடத்தை பிடித்தார்.
அமெரிக்காவை சேர்ந்த சான்டர்ஸ் 19.79 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப்பதக்கமும், அமெரிக்காவை சேர்ந்த வளாரி ஆடம்ஸ் 19.62 மீட்டர் தூரம் எறிந்து வெண்கல பதக்கமும் பெற்றனர்.