செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் அவுஸ்திரேலியாவை அசத்திய பங்களாதேஷ்!

அவுஸ்திரேலியாவை அசத்திய பங்களாதேஷ்!

2 minutes read

டாக்கா மிர்பூர் விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற கடைசி சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியாவை மிகக் குறைந்த மொத்த எண்ணிக்கைக்கு ஆட்டமிழக்கச் செய்த பங்களாதேஷ், 5 போட்டிகள் கொண்ட தொடரை 4 – 1 என கைப்பற்றியது.

நேற்றைய போட்டியில் அவுஸ்திரேலியாவை 62 ஓட்டங்களுக்கு சுருட்டிய பங்களாதேஷ், 60 ஓட்டங்களால் மிக இலகுவாக வெற்றிபெற்றது.

இந்த வெற்றியானது ஐக்கிய இராச்சியத்திலும் ஓமானிலும் இன்னும் இரண்டு மாதங்களில் நடைபெறவுள்ள இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பிரகாசிக்க முடியும் என்ற நம்பிக்கையை பங்களாதேஷுக்கு கொடுத்துள்ளது.

ஷக்கிப் அல் ஹசன், மொஹம்மத் சய்புதின் ஆகியோரின் மிகத் திறமையான பந்துவீச்சுக்கள் அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர்களைத் திணற வைத்தன.

பங்களாதேஷினால் நிர்ணயிக்கப்பட்ட  சுமாரான 123 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா, 13.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 62 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

7ஆவது ஓவரில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 38 ஓட்டங்களைப் பெற்று சிறந்த நிலையில் இருந்த  அவுஸ்திரேலியா, அதன் பின்னர் 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில்  8 விக்கெட்களை இழந்து படுதோல்வியை அவுஸ்திரேலியா  தழுவியது.

துடுப்பாட்டத்தில் மெத்யூ வேட் (22), பென் மெக்டர்மட் (17) ஆகிய இருவரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.

பங்களாதேஷ் பந்துவீச்சில் சிரேஷ்ட வீரர் ஷக்கிப் அல் ஹசன் ஒரு ஓட்டமற்ற ஓவர் உட்பட 3.4 ஓவர்கள் பந்துவீசி 9 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் மொஹம்மத் சய்புதின் 3 ஓவர்களில் 12 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் நாசும் அஹ்மத் 8 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

முன்னதாக இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த பங்களாதேஷ் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 122 ஓட்டங்களைப் பெற்றது. மொஹம்மத் நய்ம் 23 ஓட்டங்களையும் மஹ்முதுல்லாஹ் 19 ஓட்டங்களையும் அதிகப்பட்சமாக பெற்றனர். பங்களாதேஷுக்கு உதிரிகளாக 18 ஓட்டங்கள் கிடைத்தன.

அவுஸ்திரேலிய பந்துவீச்சில் நெதன் எலிஸ் 16 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் டான் கிறிஸ்டியன் 17 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர். கடைசிப் போட்டியில் ஆட்டநாயகனாகத் தெரிவான ஷக்கிப் அல் ஹசன, தொடர்நாயகன் விருதையும் தனதாக்கிக்கொண்டமை குறிப்பிடதக்கது. 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More