புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு ஐ.பி.எல்.: மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி!

ஐ.பி.எல்.: மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி!

4 minutes read

ஐ.பி.எல். ரி-20 தொடரின் 34ஆவது லீக் போட்டியில், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 7 விக்கெட்டுகளால் சிறப்பான வெற்றியை

பதிவுசெய்துள்ளது.
இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி, பிளே ஒஃப் சுற்றுக்கு நுழைவதற்கான வாய்ப்பினை பிரகாசப்படுத்தியுள்ளது.

அபுதாபியில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும், நடப்பு சம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தயில், ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி சிறப்பான ஆரம்பத்தை கொடுத்தது.

ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான குயிண்டன் டி கொக் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் அதிரடியான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினர்.

இருவரும் இணைந்து 56 பந்துகளுக்கு 78 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்திருந்த வேளை, ரோஹித் சர்மா 33 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார்.

ஐ.எல். தொடரில் சுனில் நரேனின் பந்துவீச்சுக்கு ரோஹித் சர்மா ஏழு முறை ஆட்டமிழந்துள்ளார். இதுவே ஒரு பந்து வீச்சாளரொருவருக்கு துடுப்பாட்ட வீரரொருவர் ஆட்டமிழக்கும் மூன்றாவது அதிகப்பட்ச ஆட்டமிழப்பாகும்.

குறிப்பாக இந்த போட்டியில் ஹிட் மேன் தனித்துவமான சாதனையொன்றை பதிவுசெய்தார். ஐ.பி.எல். தொடரில், ஒரு அணிக்கெதிராக ஆயிரம் ஓட்டங்களை பெற்றுக்கொண்ட முதல் வீரர் என்ற சாதனையை பதிவுசெய்தார்.

குறிப்பிட்ட ஒரு ஐபிஎல் அணிக்கு எதிராக எந்தவொரு வீரரும் 1,000 ஓட்டங்கள் எடுத்ததில்லை. இதன்மூலம், தனித்துவமான சாதனைக்குச் சொந்தக்காரர் ஆகியுள்ளார் ரோஹித் சர்மா.

இதனையடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ், 5 ஓட்டங்களுக்கு ஏமாற்ற அடுத்து இசான் கிசான் களமிறங்கினார்.

மறுமுனையில் சிறப்பாக துடுப்பெடுத்தாடி வந்த குயிண்டன் டி கொக் 55 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேற பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், கிய்ரன் பொலார்ட் களமிறங்கினார்.

இதன்போது இசான் கிசான் 14 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க அடுத்து களமிறங்கிய குர்ணல் பாண்ட்யா பொலர்டுடன் ஜோடி சேர்ந்து 18 ஓட்டங்களுக்கு 30 ஓட்டங்களை பகிர்ந்துக் கொண்டார்.

இதனையடுத்து பொலார்ட் 19.2 ஓவரின் போது 21 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க குர்ணல் பாண்ட்யாவும் அடுத்த பந்தில் 12 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினார்.
……………
சௌரவ் திவாரி 5 ஓட்டங்களுடனும் ஆடம் மில்ன் ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காது களத்தில் இருக்க, மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 155 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

பவர் பிளேயில் விக்கெட் இழப்பின்றி 56 ஓட்டங்களை பெற்றிருந்த மும்பை இந்தியன்ஸ் அணி, அடுத்த 84 பந்துகளில் 99 ஓட்டங்களை மட்டுமே பெற்றிருந்தது.

இதுதவிர மும்பை இந்தியன்ஸ் அணியின் மத்திய தரவரிசை துடுப்பாட்ட வீரர்கள் சொதப்பியது ஹர்திக் பாண்ட்யாவின் இழப்பு என்பன மும்பை அணியின் மந்தமான ஓட்ட குவிப்புக்கு காரணமாக அமைந்தது.

சூர்யகுமார் யாதவ் கடந்த மூன்று ரி-20 போட்டிகளில் ஒற்றை இலக்க ஓட்டங்களிலேயே ஆட்டமிழந்துள்ளார். அதேபோல இசான் கிசான் கடந்த ரி-20 போட்டிகளில் பெரிதாக பிரகாசிக்கவில்லை.

கொல்கத்தா நைட்ரைடரஸ் அணியின் பந்துவீச்சில், பிரசீத் கிருஸ்னா மற்றும் லொக்கி பெர்குசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் சுனில் நரேன் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 156 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி, ஆரம்பம் முதலே அதிரடியான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியது.

வெங்கடேஷ் ஐயர் மற்றும் சுப்மான் கில் ஆகியோர் ஆரம்ப விக்கெட்டுக்காக 40 ஓட்டங்களை பகிர்ந்துக் கொண்டனர்.

இதன்போது சுப்மான் கில் 13 ஓட்டங்கள் பெற்றிருந்த வேளை பும்ராவின் பந்துவீச்சுக்கு ஆட்டமிழந்து வெளியேற அடுத்து களமிறங்கிய ராகுல் திரிபாத்தி களத்தில் நங்கூரமிட்டார்.

ராகுல் திரிபாத்தியும் வெங்கடேஷ் ஐயரும் இணைந்து அதிரடியான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி ஓட்டங்களை அள்ளிக் குவித்தனர்.

இவர்கள் நடப்பு ஆண்டின் ஐந்தாவது சிறந்த பவர் பிளே ஓட்டத்தினை பதிவுசெய்தனர். இதற்கமைய கொல்கத்தா அணி 63 ஓட்டங்களை பெற்றது.

முன்னதாக கொல்கத்தா அணிக்கெதிராக டெல்லி கெபிடல்ஸ் அணி 67 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதே நடப்பு ஆண்டின் சிறந்த பவர் பிளே ஓட்டமாகும்.

இருவரும் இணைந்து ஒவருக்கு சராசரியாக 10 ஓட்டங்களை குவித்தனர். 11.4ஆவது ஓவரின் போது அதிரடியான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய வெங்கடேஷ் ஐயர், 53 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினார்.

அனைத்து பந்துகளையும் எல்லைக் கோட்டுக்கு வெளியே அடிக்க முயன்ற வெங்கடேஷ் ஐயர், 30 பந்துகளில் 3 சிக்ஸர்கள் 4 பவுண்ரிகள் அடங்களாக 53 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். இது அவரது முதல் ஐ.பி.எல். அரைசதமாகும்.

குறிப்பாக ராகுல் திரிபாத்தியும் வெங்கடேஷ் ஐயரும் இணைந்து 52 பந்துகளில், 88 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்துக் கொண்டனர்.

இதனையடுத்து களமிறங்கிய அணித்தலைவர் ஓய்ன் மோர்கன், ராகுல் திரிபத்தியுடன் ஜோடி சேர்ந்தார்.

இருவரும் இணைந்து 19 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்திருந்த வேளை, மோர்கன் 7 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதன்பிறகு களமிறங்கிய நிதிஷ் ரணாவும் ராகுல் திரிபாத்தியும் இணைந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

இதன்படி கொல்கத்தா அணி, 15.1 ஓவர்கள் நிறைவில், 3 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது.

நிதிஷ் ரணா 5 ஓட்டங்களுடனும் மறுமுனையில் ராகுல் திரிபாத்தி 74 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது களத்தில் இருந்தனர்.

குறிப்பாக சிறப்பாக துடுப்பெடுத்தாடிய ராகுல் திரிபாத்தி 42 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 8 பவுண்ரிகள் அடங்களாக ஆட்டமிழக்காது 74 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக நான்கு ஓவர்கள் வீசி ஓவருக்கு 5 ஓட்டங்கள் என்ற சராசரியுடன் 20 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டினை சாய்த்த கொல்கத்தா வீரர் சுனில் நரேன் தெரிவுசெய்யப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி தான் விளையாடிய 9 போட்டிகளில் நான்கில் வெற்றி, ஐந்தில் தோல்விகளுடன் மொத்தமாக, 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணி, தான் விளையாடிய 9 போட்டிகளில் நான்கில் வெற்றி, ஐந்தில் தோல்விகளுடன் மொத்தமாக, 8 புள்ளிகளுடன் நிகர ஓட்ட வீகிதத்தில் பின்தங்கிய நிலையில், ஆறாவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More