செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு ஐ.பி.எல். கிரிக்கெட்: டெல்லியை வீழ்த்தியது கொல்கத்தா!

ஐ.பி.எல். கிரிக்கெட்: டெல்லியை வீழ்த்தியது கொல்கத்தா!

2 minutes read

சார்ஜா,
14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று மாலை சார்ஜாவில் நடந்த 41-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை எதிர்கொண்டது. டெல்லி அணியில் பிரித்வி ஷா நீக்கப்பட்டு ஸ்டீவன் சுமித் வாய்ப்பு பெற்றார். ‘டாஸ்’ ஜெயித்த கொல்கத்தா கேப்டன் மோர்கன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணியில், ஷிகர் தவானும், ஸ்டீவன் சுமித்தும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர். பரவாயில்லை என்று சொல்லும் அளவுக்கு தொடக்கம் தந்த இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 35 ரன்கள் எடுத்தனர். தவான் 24 ரன்னில் கேட்ச் ஆனார்.

அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் வேகம் குறைந்த (ஸ்லோ) மந்தமான இந்த ஆடுகளத்தில் திணறினர். மறுசீரமைப்பு செய்யப்பட்ட இந்த சார்ஜா ஆடுகளத்தில் சுனில் நரினும், வருண் சக்ரவர்த்தியும் தங்களது சுழல் ஜாலத்தால் டெல்லியின் ரன்வேகத்துக்கு முட்டுக்கட்டை போட்டனர். நரினின் சுழலை கணிக்க முடியாமல் ஸ்ரேயாஸ் அய்யர் (1 ரன்) கிளீன் போல்டு ஆனார். ஸ்டீவன் சுமித் தனது பங்குக்கு 39 ரன்கள் (34 பந்து, 4 பவுண்டரி) எடுத்த நிலையில் வெளியேறினார். மிடில் வரிசையில் கேப்டன் ரிஷாப் பண்டை தவிர்த்து வேறு யாரும் இரட்டை இலக்கத்தை தொடவில்லை. 20 ஓவர் முடிவில் டெல்லி அணி 9 விக்கெட்டுக்கு 127 ரன்னில் அடங்கியது. ரிஷாப் பண்ட் 39 ரன்களில் (36 பந்து, 3 பவுண்டரி) கடைசி ஓவரில் ரன்-அவுட் ஆனார். கொல்கத்தா தரப்பில் சுனில் நரின், வெங்கடேஷ் அய்யர், லோக்கி பெர்குசன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

தொடர்ந்து ஆடிய கொல்கத்தா அணி இலக்கு குறைவு என்றாலும் சுலபமாக எடுத்து விடவில்லை. தட்டுத்தடுமாறி 19-வது ஓவரில் தான் அதை எட்டிப்பிடித்தது. கொல்கத்தாவின் தொடக்க ஆட்டக்காரர்கள் வெங்கடேஷ் அய்யர் (14 ரன்), சுப்மான் கில் (30 ரன்) ஓரளவு நன்றாக ஆடினர். அதன் பிறகு திரிபாதி (9 ரன்), கேப்டன் மோர்கன் (0), தினேஷ் கார்த்திக் (12 ரன்) ஆகியோர் சீக்கிரம் நடையை கட்டினர். 96 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தவித்த நிலையில், நிதிஷ் ராணாவுடன், சுனில் நரின் இணைந்தார். 16-வது ஓவரில் ரபடாவின் பந்துவீச்சில் நரின் 2 சிக்சரும், ஒரு பவுண்டரியும் ஓடவிட்டு நெருக்கடியை தணித்தார். நரின் 21 ரன்களில் (10 பந்து) கேட்ச் ஆனார். இறுதியில் ராணா பந்தை பவுண்டரிக்கு விரட்டியடித்து வெற்றிக்கனியை பறித்தார்.

கொல்கத்தா அணி 18.2 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 130 ரன்கள் சேர்த்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நிதிஷ் ராணா 36 ரன்களுடன் (27 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) களத்தில் இருந்தார். டெல்லி தரப்பில் அவேஷ்கான் 3 விக்கெட்டும், அஸ்வின், ரபடா, நோர்டியா, லலித் யாதவ் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். ஆல்-ரவுண்டராக அசத்திய சுனில் நரின் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.

11-வது ஆட்டத்தில் ஆடி 5-வது வெற்றியை ருசித்த கொல்கத்தா அணி அடுத்த சுற்று வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது. டெல்லி அணிக்கு இது 3-வது தோல்வியாகும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More