செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு நியூ யங்ஸின் ஆட்சேப மனு நிராகரிப்பு | அப்கன்ட்றி லயன்ஸின் மனுவுக்கு சாதக முடிவு

நியூ யங்ஸின் ஆட்சேப மனு நிராகரிப்பு | அப்கன்ட்றி லயன்ஸின் மனுவுக்கு சாதக முடிவு

2 minutes read

கலம்போ எவ்சிக்கு எதிராக நியூ யங்ஸ் தாக்கல் செய்த ஆட்சேப மனுவை நிராகரித்துள்ளதாக இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் ஒழுக்காற்று மற்றும் நெறிமுறை குழு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இதற்கு அமைய இந்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான போட்டி முடிவு அவ்வாறே இருக்கும் என சம்மேளனம் வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்கு சற்று பின்னர் (சனிக்கிழமை 00.10 மணி) வெளியிட்ட ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

போட்டி விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள கால வரம்புக்கு இந்த ஆட்சேபனை உட்படாததால் போட்டி முடிவு அப்படியே இருக்கும் எனவும் போட்டி முடிவு திருத்தப்படமாட்டாது எனவும் ஒழுக்காற்று மற்றும் நெறிமுறை குழு தீர்மானித்துள்ளது.

எவ்வாறாயினும் 45.1 மற்றும் 50.1.3 ஆகிய ஒழுக்காற்று மற்றும் நெறிமுறை ஷரத்துகளின் கீழ் முஷாக்கிர் மொஹமத் ராஸீக்குக்கு ஒரு இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்படுவதாக சம்மேளனம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் 45.1 மற்றும் 50.2 மற்றும் 34.1 ஆகிய ஒழுக்காற்று மற்றும் நெறிமுறை ஷரத்துகளின் கீழ் கலம்போ எவ்சிக்கு 5 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, சீ ஹோக்ஸ் அணிக்கு எதிராக அப்கன்ட்றி லயன்ஸ் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை அடுத்து சீ ஹோக்ஸ் அணி தவறிழைத்துள்ளதாக கண்டறிந்த ஒழுக்காற்று மற்றும் நெறிமுறை குழு அப் போட்டியில் சீ ஹோக்ஸ் ஈட்டிய வெற்றியை திருத்தி அமைத்துள்ளது.

வேண்டுமென்றே மற்றும் சட்டத்திட்டங்களை அறிந்திருந்தும் போட்டியின் இடைநடுவே (28 நி – 72 நி) தகுதியற்ற வீரர் ஒருவரை களம் இறக்கியதன் மூலம் சுப்பர் லீக் போட்டி விதிகளின் 21 (II) ஷரத்தை சீ ஹோக்ஸ் மீறியமை உறுதிசெய்யப்பட்டுள்ளதாக ஒழுக்காற்று மற்றும் நெறிமுறை குழு தெரிவித்துள்ளது.

இதற்கு அமைய ஒழுக்காற்று மற்றும் நெறிமுறை விதிகளின் 45.1 ஷரத்தின் கீழ் அப்கன்ட்றி லயன்ஸுடான போட்டியில் ஈட்டிய வெற்றியை சீ ஹோக்ஸ் இழப்பதாக இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

எனவே ஒழுக்காற்று மற்றும் நெறிமுறை விதிகளின் 25.1 ஷரத்தின்கிழ் அப்கன்ட்றி லயன்ஸுக்கு 3  – 0 வெற்றியை ஒழுக்காற்று மற்றும் நெறிமுறை குழு அளித்துள்ளது.

இது இவ்வாறிருக்க, றினோன் கழகத்துடனான போட்டி முடிவில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக மத்தியஸ்தர் சமர்ப்பித்த அறிக்கையை பரிசீலித்து விசாரணை நடத்திய ஒழுக்காற்று மற்றும் நெறிமுறை குழு, நியூ யங்ஸ் வீரர் தரிந்து தனுஷ்கவுக்கு (இல. (9) 2 போட்டித் தடையையும் முகாமையாளர் ரோஹித்த பெர்னாண்டோவுக்கு ஒரு போட்டி தடையையும் விதித்துள்ளதாக சம்மேளனத்தின் ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.  

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More