இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில், 2-0 என்ற கணக்கில் அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி முன்னிலைப் பெற்றுள்ளது.
சிட்னியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை கிரிக்கெட் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 164 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட் ஓட்டங்களாக, ஜோஸ் இங்லிஸ் 48 ஓட்டங்களையும் ஆரோன் பின்ஞ் 25 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், துஸ்மந்த சமீர மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் நுவான் துசார மற்றும் மகேஷ் தீக்ஷன ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 165 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இலங்கை கிரிக்கெட் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 164 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. வெற்றி இலக்கு சமநிலைப் பெற்றதால், போட்டி சுப்பர் ஓவருக்கு நகர்ந்தது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக பெத்தும் நிஸங்க 73 ஓட்டங்களையும் தசுன் சானக 34 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், ஜோஸ் ஹெசில்வுட் 3 விக்கெட்டுகளையும், பெட் கம்மின்ஸ், மார்கஸ் ஸ்டொயினிஸ், கேன் ரிச்சட்சன் மற்றும் ஆடம் செம்பா ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனையடுத்து சுப்பர் ஓவரில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை கிரிக்கெட் அணி, ஐந்து ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இந்த வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய அவுஸ்ரேலியா அணி, மூன்றாவது பந்திலேயே வெற்றி இலக்கை கடந்தது.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக 3 விக்கெட்டுகளையும், சுப்பர் ஓவரில் சிறப்பாக பந்து வீசியவருமான ஜோஸ் ஹெசில்வுட் தெரிவுசெய்யப்பட்டார்.
இரு அணிகளுக்கிடையிலான மூன்றாவது ரி-20 போட்டி, நாளை கான்பெர்ரா மைதானத்தில் நடைபெறவுள்ளது.